மீண்டும் மீண்டும் சர்ச்சையில் ராம்கோபால் வர்மா

 சமீபத்தில் ஆந்திர முதல்வர் மற்றும் குடும்பத்தினர் மீது அவதூறு புகைப்படங்களை வெளியிட்ட ராம்கோபால் வர்மா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் நாரா லோகேஷ், ஜனசேனா கட்சியின் தலைவரும் துணை முதல்வருமான பவன் கல்யாண் உள்ளிட்டோர் தொடர்பான புகைப்படங்களை ‘மார்பிங்’ செய்து வெளியிடப்பட்டது. இந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட புகாரின் அடிப்படையில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது பிரகாசம் மாவட்டம் மடிப்பாடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



இது குறித்து போலீஸ் அதிகாரி ஏ.ஆர்.தாமோதர் கூறுகையில், ‘முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த உறுப்பினர்கள், துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் தொடர்பான புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக ஊடகங்களில் அவதூறான பதிவை வெளியிட்ட சினிமா தயாரிப்பாளரும் இயக்குனருமான ராம் கோபால் வர்மா மீது தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்ட விதிகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியுடனான நெருங்கிய நட்பில் இருக்கும் ராம்கோபால் வர்மா, நீண்ட காலமாக சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url