சூர்யா, விஜய் சேதுபதி நடித்த ஃபீனிக்ஸ்: வீழான் ரிலீஸ் தேதி மாற்றம்
ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘ஃபீனிக்ஸ்: வீழான்’. இப்படம் இன்று திரைக்கு வரும் என்று ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது. இதை முன்னிட்டு, இப்படத்துக்கான புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்த ‘கங்குவா’ 3டி படம் இன்று திரைக்கு வருவதால், ‘ஃபீனிக்ஸ்: வீழான்’ படத்தின் ரிலீஸ் தேதி திடீரென்று மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமான ‘ஃபீனிக்ஸ்: வீழான்’ படம், திட்டமிட்டபடி நவம்பர் 14ம் தேதி ரிலீசாகாது. சென்சார்டு போர்டு பரிந்துரை செய்த கட்டுகளால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுகிறது. புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவு, புரிதல் மற்றும் பொறுமைக்கு நன்றி. ‘ஃபீனிக்ஸ்: வீழான்’, முன்பை விட ஸ்ட்ராங்காக வரும். அப்படி வரும்போது, வேறொரு லெவலில் இருக்கும் என்று உறுதி அளிக்கிறோம்’ என்று கூறப்பட்டுள்ளது.