இது தான் ''சொர்க்கவாசல்'' கதையா?
ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ், திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள படம், ‘சொர்க்கவாசல்’. இதில் ஆர்ஜே பாலாஜி, மற்றும் சானியா அய்யப்பன் ஜோடியாக நடித்துள்ளனர். இதற்கு பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ என்ற படத்தின் இசை அமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர், ‘சொர்க்கவாசல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். தமிழ்பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன், சித்தார்த் விஸ்வநாத் இணைந்து கதை எழுதியுள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், ‘சிறைச்சாலையை கதைக்களமாக வைத்து உருவாகியுள்ள இப்படம், சிறைக்குள்ளே இருப்பவர்களின் கடுமையான வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி விவரிக்கிறது. தள்ளுவண்டியில் தோசை விற்கும் ஆர்ஜே பாலாஜி, குற்றச்செயல் மூலம் சிறைக்குள் தள்ளப்படுகிறார். அங்கு நடக்கும் குற்றங்களையும், ஊழல்களையும் எப்படி கண்டுபிடிக்கிறார்? இதனால் அவருக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து கதை அமைந்திருக்கும். வரும் 29ம் தேதி படம் ரிலீசாகிறது.