2 வருடம் கஷ்டப்பட்ட ஸ்ருதி ஹாசன்
ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து வலம் வருகிறார். ‘ஏழாம் அறிவு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘3’ படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், ஸ்ருதிஹாசன் பேட்டி ஒன்றில் ‘3’ திரைப்படத்திற்கு பின் அவருடைய சினிமா வாழ்க்கை எப்படி இருந்தது என்பதை குறித்து பகிர்ந்துள்ளார்.
அதில், ‘3 திரைப்படத்தில் நடித்து முடித்த பின் 2 ஆண்டுகள் எந்தவித பட வாய்ப்புகளும் இன்றி நான் மிகவும் கஷ்டப்பட்டேன். அதன் பின், அந்த படம் ரீ ரிலீஸ் ஆன பிறகு தான் மக்களுக்கு அந்த ஜனனி கேரக்டர் எந்த அளவிற்கு பிடித்தது என்பதை அறிந்து கொண்டேன். இருப்பினும் நான் தமிழ் படங்களில் நடிப்பதை விட்டு கொடுக்கமாட்டேன். தற்போது கூட ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இப்போது ஸ்ருதிஹாசன், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் ‘கூலி’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.