விக்ரமின் 'வீரதீர சூரன்' பிசினஸ் ஸ்டார்ட்ஸ்.. தமிழக ரிலீஸ் உரிமை யாருக்கு தெரியுமா?
விக்ரம் நடிக்கும் "வீர தீர சூரன்" படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் பிஸினஸ் தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் "வீர தீர சூரன்" படத்தில் துஷாரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக இந்த படம் உருவாகி வருகிறது என்றும், முதலில் இரண்டாம் பாகம், அதன் பின்னர் முதல் பாகம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தின் பிசினஸ் தொடங்கிய நிலையில், முதல் கட்டமாக தமிழக ரிலீஸ் உரிமையை 5 ஸ்டார் செந்தில் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே "டி.டி. ரிட்டன்ஸ்", "பார்க்கிங்", "கருடன்", "மகாராஜா" உள்ளிட்ட படங்களை வெளியிட்டுள்ளார் என்பதுடன், தீபாவளிக்கு வரவிருக்கும் ‘பிளடி பெக்கர்’ படத்தையும் வெளியிட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய் சேதுபதி நடித்த "பண்ணையாரும் பத்மினியும்", "சேதுபதி", "சிந்துபாத்" உள்ளிட்ட படங்களையும், கடந்த ஆண்டு வெளியான "சித்தா" படத்தையும் இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் இந்த "வீரதீர சூரன்" படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்த இந்த படத்தை பிரசன்னா ஜிகே எடிட்டிங் செய்ய, எச்ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.