கூகுள் பே, ஃபோன் பே மூலம் லஞ்சம் வசூல்; கோத்தகிரியில் ஊழல் தடுப்பு சோதனையில் அம்பலம்!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் அதிகாரிகள் ஜிபே மற்றும் போன்பே மூலம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது.
கோத்தகிரியில் நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் அனுபோக சான்று உள்ளிட்டவை பெறுவதற்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக புகார் உள்ளது.இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்ற தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில், 24ம் தேதி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அலுவலக கதவுகளை மூடிய அதிகாரிகள், தாசில்தார், வி.ஏ.ஓ.,கள், அலுவலக ஊழியர்களிடம், தனித்தனியாக விசாரணை நடத்தி, சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
சோதனையின்போது, கோத்தகிரி கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.,) கமல் என்பவரிடம் இருந்து ரூ.6 ஆயிரம், ஜெகதளா -1 வி.ஏ.ஓ. நவீன்குமாரிடம் இருந்து ரூ.4,200 பறிமுதல் செய்யப்பட்டது. இவை கணக்கில் வராத பணம்.
மேலும், தாசில்தார், துணை தாசில்தார், உதவியாளர்கள், வி.ஏ.ஓ.,க்களின் மொபைல்போன்கள் வாங்கி அதில் இருந்து ஜிபே, போன்பே, வாட்ஸ் ஆப் செயலியை லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வு செய்தனர். அதில், அதிகாரிகள் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.