ஆலங்குளம் அருகே டிரைவர் கொலையில் மனைவி உள்பட 2 பேர் கைது
சங்கரன்கோவில் அருகே சின்ன கோவிலாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. அ.தி.மு.க. பிரமுகரான இவருடைய மகன் இளங்கோவன் (வயது 41). சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு உமா (35) என்ற மனைவியும், தர்ஷினி (8) என்ற மகளும் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த இளங்கோவன், நேற்று முன்தினம் ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள பலபத்திரராமபுரம் கிராமம் அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுகுறித்து ஊத்துமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இளங்கோவன் மனைவி உமாவின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
இளங்கோவன் குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்த நிலையில் கொேரானா ஊரடங்கு காரணமாக தனது மனைவி மற்றும் மகளை தனது சொந்த ஊரில் விட்டுவிட்டு சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையே உமாவுக்கு சங்கரன்கோவிலில் உள்ள அரசு கல்லூரியில் சமையலர் வேலை கிடைத்துள்ளது. அப்போது அவருக்கும், சங்கரன்கோவிலை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டனர்.இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இளங்கோவன் ஊருக்கு வந்துள்ளார். 10 நாட்களுக்கு மேலாகியும் இளங்கோவன் ஊருக்கு செல்லாததால் முத்துக்குமார், உமா மற்றும் முத்துக்குமார் அவரை தீர்த்துக்கட்ட திட்டமிட்டனர். இதுகுறித்து தனது அண்ணன் சீனிவாசனிடம், முத்துக்குமார் கூறினார். பின்னர் முத்துக்குமார், அவரது அண்ணன் மற்றும் இவர்களது நண்பர் அதே ஊரைச் சேர்ந்த சுரேஷ் (40) ஆகியோர் இளங்கோவனை சந்தித்து மது குடிக்க வருமாறு அழைத்தனர். இதனை நம்பி அவர்களுடன் சென்று இளங்கோவன் மது குடித்தார். பின்னர் அவரை ஊத்துமலையை அடுத்தபலபத்திரராமபுரம் அருகே உள்ள பகுதிக்கு கூட்டிச்சென்று இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்து உள்ளனர். இவ்வாறு போலீசாரின் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
கொலை வழக்கு தொடர்பாக முத்துக்குமார், சீனிவாசன், இளங்கோவன் மனைவி உமா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய சுரேசை வலைவீசி தேடி வருகின்றனர்.