'கூகுள் மேப்ஸ்' பயன்படுத்தி, சென்ற வேன் கவிழ்ந்து 20 போலீசார் காயம்
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கூகுள் மேப் பயன்படுத்தி வேன் தொடர்ந்து ஓட்டிச் சென்றபோது வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 20 பேர் காயமடைந்தனர்.
கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் குருபூஜை, ஜெயந்தி விழா 3 நாட்கள் நடக்கிறது. இதை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக மாநிலம் முழுவதும் இருந்து போலீசார் வந்துள்ளனர். கோவையைச் சேர்ந்த 30 போலீசார் ஒரு வேனில் ராமநாதபுரம் வந்தனர். அங்கிருந்து அவர்கள் கமுதிக்கு புறப்பட்டனர். நேற்றுமுன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு சத்திரக்குடி அருகே கீழகோட்டை வழியாக கீழம்பல் நோக்கி சென்றனர். டிரைவர் 'கூகுள் மேப்' உதவியுடன் வேனை ஓட்டிச்சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த கண்மாயில் நிலை தடுமாறி வேன் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த 20 போலீசாருக்கும் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்பு காயமடைந்தவர்கள் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.இது குறித்து சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.