விக்கிரமங்கலம் அருகே, போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் இருந்த வாலிபர் கைது
விக்கிரமங்கலம்,
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே நாகமங்கலம் கிராமத்தில் உள்ள காஞ்சலி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 26). கூலித்தொழிலாளியான இவர் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக திருப்பூர் மற்றும் பூம்புகாரில் தங்கி கிடைத்த வேலை க்கு சென்று வந்தார்.
சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த பாலமுருகன், தான் போலீஸ் துறையில் அதிகாரியாக வேலை செய்வதாக ஊரில் உள்ளவர்களிடம் கூறி வந்துள்ளார். தற்போது விடுப்பில் சொந்த ஊர் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை வி.கைகாட்டி 4 ரோடு பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் பாலமுருகன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த விக்கிரமங்கலம் போலீசார், சந்தேகத்தின் பேரில் பாலமுருகனிடம் விசாரித்துள்ளனர். அப்போது போலீசாரிடம், பாலமுருகன் தான் உதவி கமிஷனராக இருப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து விக்கிரமங்கலம் போலீசார் அவரை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.
பின்னர் போலீசார் துருவித்துருவி கேள்விகள் கேட்டபோது, தான் போலீஸ் அதிகாரி இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது சொந்த ஊரில் தனக்கு ஒரு சில எதிரிகள் இருப்பதாகவும், அவர்களை பயமுறுத்துவதற்காகவே போலீஸ் அதிகாரி என்று கூறி, போலீஸ் உடை அணிந்ததாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து சட்ட விரோதமாக போலீஸ் அதிகாரியின் உடையணிந்ததற்காக விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலமுருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.