Matrimony OTT-Platforms Jobs Coupons Business

குழந்தைகளுக்கு உரம் விழுதல் என்றல் என்ன ?? அதை எப்படி கண்டறிவது ; எப்படி சரி செய்வது ???



பச்சிளங்குழந்தை பராமரிப்பு என்பது மிக சவாலானது. குழந்தையை வளர்ப்பது ஒருபுறம் இருக்கட்டும். குழந்தைக்கு எப்போது பசியாறுவது, எப்போதெல்லாம் பசியெடுக்கும் என்ற சந்தேகத்தோடு இளந்தாய்மார்கள் அவஸ்தைபடுவார்கள். அதிலும் வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லாத நிலையில் தனியாக இருக்கும் போது குழந்தை வளர்ப்பு மிக சிரமமாகவே இருக்கும்.

குழந்தையின் சிறு அழுகையும் அச்சத்தை உண்டாக்கும் குழந்தை மலம் கழிப்பதில் தொடங்கி தாய்ப்பால் குடிப்பதில் இருக்கும் வித்தியாசம் கூட புரியாமல் இருக்கும். குழந்தை சாதாரணமாக அழுதாலே பதறிவிடும் இளந்தாய்மார்கள் பீறந்த குழந்தைக்கு உண்டாகும் பிரச்சனைகள், ஆரோக்கிய குறைபாட்டின் அறிகுறிகள் போன்றவற்றை தெரிந்திருக்க வேண்டும். அப்படி கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று தான் குழந்தைக்கு உரம் விழுவது.

குழந்தைக்கு உரம் விழுந்தால் குழந்தை அழுதுகொண்டே இருக்கும். தாய்ப்பால் குடிக்க மாட்டார்கள். பதட்டத்தில் குழந்தையின் முழு உடலையும் திருப்பி பார்த்தாலும் பூச்சிக்கடி, எறும்பு கடித்ததற்கான அறிகுறியோ இருக்காது. ஆனாலும் குழந்தை அழுது கொண்டே இருக்கும். தூக்கி வைத்திருந்தாலும் குழந்தையின் அழுகை நிற்காமல் இருக்கும். குழந்தை எதற்கு அழுகிறதென்றே தெரியாமல் அவஸ்தை படுவார்கள். இதற்கு காரணம் உரம் விழுதலாக இருக்கும்.



குழந்தையின் கழுத்தில் தசையில் ஏற்படும் சிறு பிசகு காரணத்தால் இவை உண்டாகும். இதனால் குழந்தையின் சதை ஒரு பக்கமாக அழுத்தியபடி இருக்கும். இதனால் பச்சிளங்குழந்தைக்கு தலை ஒரு பக்கமாகவும் தாடை ஒரு பக்கமாகவும் தனியாக திரும்பியபடி இருக்கும். பெரும்பாலும் இந்த உரம் விழுதல் பிரச்சனையை கைக்குழந்தைகளே சந்திக்கிறார்கள் என்றாலும் குழந்தை தனது 12 வயதுவரை இந்த பிரச்சனையை சந்திக்க வாய்ப்புண்டு.

குழந்தைக்கு கண்டிப்பாக உரம் தான் விழிந்திருக்கிறது என்றால் இந்த அறிகுறிகள் தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும். குழந்தையின் பின்னந்தலை ஒரு பக்கமாக சாய்ந்திருக்கும். தாடை வேறுபக்கமாக இருக்கும். குழந்தையின் கண்களும் ஒரே பக்கமாக பார்க்காமல் இரு கண்களும் வெவ்வேறு திசையில் இருக்கும். குழந்தையை நன்றாக உற்றுபார்த்தால் மட்டுமே கண்களில் இந்த வித்தியாசம் தென்படும்.

சில குழந்தைகளுக்கு தாயின் வயிற்றில் இருக்கும் போதே இந்த பிரச்சனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும். இவை கழுத்தில் அதிக பாதிப்பு இருக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதால் பயப்படவேண்டியதில்லை. ஆனால் வெகு அரிதாக சில குழந்தைக்கு மட்டும் இவை உண்டாக கூடும் என்பதால் இது குறித்து கவலை கொள்ள வேண்டியதில்லை.

பச்சிளங்குழந்தைக்கு உரிய முறையில் பால் புகட்டாத போது, சரியாக தூக்கி பிடிக்காத போது, கழுத்தும் உடலும் சரியாக வலுவாக இல்லாத முதல் மூன்று மாதங்களில் தலையையும் உடலையும் சேர்த்து பிடிக்காத போதும் உரம் விழக் கூடும். சிலர் குழந்தையை தூக்க தெரியாமல் குறிப்பாக ஆண்கள் தூக்கும் போது, சிறு குழந்தைகளின் கையில் கொடுக்கும் போதும் குழந்தைக்கு உரம் விழக்கூடும்.

காரணம் கழுத்து எலும்பு நன்கு வளர்ச்சியடையாத நிலையில் தலை நேராக நிற்காததால் இந்த பிரச்சனை உண்டாக கூடும். எப்போதும் குழந்தையை தூக்கும் போது குழந்தையின் தலையின் பின்பகுதியில் ஒரு கையும் வைத்து தூக்க வேண்டும். இவை தவறும் போது குழந்தைக்கு உரம் விழுதல் உண்டாகிறது.
குழந்தைக்கு உரம் விழும்போது அதை கைவைத்திய முறையில் எடுக்க பக்குவமான முறை ஒன்று உண்டு. சற்று கனமான புடவை அல்லது போர்வையை விரித்து இருபக்கம் உள்ள இருமுனைகளையும் பக்கத்துக்கு ஒருவர் பிடித்துகொண்டு நடுவில் குழந்தையை படுக்க வைப்பார்கள்.

இப்போது ஒரு முனையில் இருப்பவர்கள் குழந்தையை மெல்ல உருட்டி அடுத்த முனைக்கு உருட்டி விடுவார்கள். இப்படி குழந்தையின் தலை கழுத்து இரண்டுமே துணியில் நன்றாக பதிந்து உருட்ட வேண்டும். இப்படி செய்தால் உரம் விழுதல் சரியாகும். உருட்டும் முறையில் பக்குவம் தான் சிறந்த வைத்தியமாக இருக்கும்.

இதை நன்கு அறிந்த வீட்டு பெரியவர்கள் தான் செய்வார்கள் இப்படி உரம் எடுத்து முடித்ததும் குழந்தையின் காதை நீவி விடுவார்கள். அதிசயமாக இதை செய்து முடித்ததும் குழந்தையின் அழுகை நின்றுவிடும். இன்றும் கிராமங்களில் குழந்தை நிற்காமல் அழுதுகொண்டே இருந்தால் உரம் விழுதலுக்கான அறிகுறி இருந்தாலும் இப்படிதான் உரம் நீக்குவார்கள்.

பெரும்பாலும் இந்த உருட்டல் முறையிலேயே குழந்தைக்கு உரம் விழுதல் பிரச்சனை நீங்கிவிடும். ஆனால் பக்குவமாக செய்யாமல் குழந்தையை வேறுவிதமாக அலட்டி எடுத்தால் வலி அதிகரித்து குழந்தையின் அழுகையும் அதிகமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை குழந்தைக்கு உரம் விழுதல் இருந்து சரியாகாத நிலையில் மருத்துவரை அணுகுவதுதான் சரியான தீர்வாக இருக்கும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad