உங்களுக்கு பருக்கள் வந்து அதோட தழும்புகள் போகாம அப்படியே இருக்குதா ?? அப்போ இதை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க !!!!!
பொதுவாக பருக்கள் வந்தாலே முகம் பொலிவிழந்து அசிங்கமாக காணப்படும். சில சமயங்களில் முகத்தில் வரும் பருக்கள் வலிமிக்கதாக இருக்கும். பருக்களால் ஏற்படும் வலியை விட, அது விட்டுச் செல்லும் தழும்புகள் தான் பலருக்கும் வேதனை அளிப்பதாக இருக்கும். ஏனென்றால் அந்த தழும்புகள் அவ்வளவு எளிதில் மறையாது மற்றும் முக அழகையே கெடுக்கும்.
பருக்களானது ஒருவித சரும பாதிப்பு காரணமாக எழுகிறது. இது குணமாகும் போது, உடலானது புதிய சரும செல்கள் மற்றும் சரிசெய்யும் கொலாஜென் இழைகளை உருவாக்குகிறது. இது தான் தழும்புகளுக்கு வழிவகுக்கிறது. முகப்பருக்களால் வரும் தழும்புகள் உண்மையில் முழுமையாக மறையாது என்றாலும், அவற்றின் நிறம், அளவு மற்றும் தோற்றம் ஆகியவற்றை கண்ணுக்கு புலப்படாத வகையில் மாற்ற முடியும்.
கீழே முகப்பருக்களால் வரும் தழும்புகளை மறையச் செய்யும் சில வீட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை மேற்கொண்டால், நிச்சயம் பருக்களால் வந்த தழும்புகளை விரைவில் மறையச் செய்யலாம்.
சந்தனம் :
சந்தன கட்டையை நீரில் சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த கட்டையை எடுத்துவிட்டு, ஒரு பஞ்சுருண்டை பயன்படுத்தி அந்நீரை தழும்புகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பல முறை என ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், முகத்தில் உள்ள பரு தழும்புகள் மறைவதைக் காணலாம். இல்லாவிட்டால், சந்தன கட்டையை ஒரு கல்லில் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி தேய்த்து பேஸ்ட் தயாரித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை இரவு தூங்கும் முன் தழும்புகளின் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் நீரில் கழுவ வேண்டும்.
வெந்தயம் :
சிறிது வெந்தயத்தை நீரில் போட்டு 10-15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அந்த நீரை பஞ்சுருண்டை பயன்படுத்தி பருக்களால் வந்த தழும்புகளின் மீது தடவ வேண்டும். இப்படி தினமும் தவறாமல் செய்து வந்தால், ஒரு வாரத்தில் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
எலுமிச்சை ஜூஸ் :
ஒரு பௌலில் எலுமிச்சையின் சாற்றினை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பஞ்சுருண்டை பயன்படுத்தி எலுமிச்சை சாற்றினை தழும்புகளின் மீது தடவி சிறிது நேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இல்லாவிட்டால், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், தேன் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து, அதோடு சிறிது பால் சேர்த்து கலந்து, பருக்களால் வந்த தழும்புகளின் மீது ஒரு நாளைக்கு ஒரு முறை தடவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தினமும் செய்து வந்தால், சீக்கிரம் தழும்புகள் காணாமல் போகும்.
வேப்பிலை :
வேப்பிலை உங்கள் வீட்டில் இருந்தால், அந்த இலையை பரு வந்த இடத்தில் உள்ள தழும்பின் மீது சிறிது நேரம் வைக்க வேண்டும். இப்படி தினமும் பருக்களின் மீது வேப்பிலையை வைத்து வந்தால், அதில் உள்ள மருத்துவ பண்புகளால், தழும்புகள் மறையும்.
கற்றாழை :
கற்றாழையின் ஜெல்லை முகத்தில் தழும்புகள் இருக்கும் இடத்தில் தினமும் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால், தழும்புகள் வேகமாய் மறையும். அதோடு கற்றாழை அனைத்து சருமத்தினருக்கும் ஏற்ற ஒரு பொருள் என்பதால், அனைவரும் பயமின்றி இதை பயன்படுத்தலாம்.
ஆப்பிள் சீடர் வினிகர் :
ஆப்பிள் சீடர் வினிகரை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தினால், அது சருமத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். ஆகவே இதை பயன்படுத்தும் முன், ஆப்பிள் சீடர் வினிகரை நீருடன் சரிசம அளவில் எடுத்து, பஞ்சுருண்டை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்.