கரூரில் செல்போன் வெடித்து தாய் குழந்தைகள் உட்பட மூன்று பேர் பலியாகினர் !!!!!
கரூர் மாவட்டம் ராயனூரில் செல்போன் வெடித்து தாய் மற்றும் இரு குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் ராயனூரில் உள்ள நாம் நகர் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு தீக்ஷித் மற்றும் ரக்ஷித் என்று இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு செல்போனை சார்ஜில் போட்டுவிட்டு தூங்கியுள்ளனர். இரவோடு இரவாக செல்போன் வெடித்ததில் தாய் முத்துலட்சுமி மற்றும் குழந்தைகள் இருவர் என மூவரும் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
தகவலறிந்து வந்த ராயனூர் போலீசார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், செல்போன் வெடித்தது மட்டும்தான் காரணமா அல்லது மின்கசிவு ஏதும் நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
செல்போன்களுக்கு அதிக மின்னூட்டம் (சார்ஜ்) அளிப்பது எப்போதுமே ஆபத்தான விளைவையே தரும். குறிப்பாக, தரமற்ற மின்கலன்கள் (பேட்டரி) இருக்கும் செல்பேசிகள் வெடிப்பதற்கான வாய்ப்புகள் நூற்றுக்கு 90 சதவிகிதம் உண்டு என்பதைத்தான் மீண்டும் மீண்டும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.