கொரோனாவால் நிறைய பேர் இறப்பதற்கு இதுதான் காரணமாம் !!!! கவனமாக இருங்கள் !!!!
கொரோனா வைரஸ் குறித்த பல ஆச்சரியமான அல்லது அதிர்ச்சிகரமான தகவல்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு வருகின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் மனித உடலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ந்து வருகின்றனர். அதில் கொரோனா வைரஸ் மூளை, இதயம், நுரையீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புக்களை பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்திய அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் 'ஹாப்பி ஹைபோக்ஸியா' என்ற நிலையை ஏற்படுத்தி, கொரோனா நோயாளிகளுக்கு மரணத்தை ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. ஹைதராபாத்தின் அப்பல்லோ மருத்துவமனையின் இருதயவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாஸ் குமார் கூறுகையில், "கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் பல மருத்துவர்களுக்கு ஹாப்பி ஹைபோக்ஸியா நிலைக் குறித்து தெரியவில்லை. இந்நிலையை சந்திக்கும் நோயாளிகள் ஆரோக்கியமானவராகவும், எவ்வித அசௌகரியமும் இல்லாமல் நடந்து கொள்பவராக தெரிகிறது.
ஆனால் திடீரென்று இரத்தத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல், இதய செயலிழப்புக்கு வழிவகுக்கிறது" என்று கூறுகிறார். மேலும், கொரோனா காரணமாக இறந்தவர்களின் காரணங்களை மதிப்பீடு செய்யும் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் வயது நோயாளிகள், அவர்களுக்கு இருதய நோய் வரலாறு இல்லை என்றாலும் கூட, இதய செயலிழப்பு போன்றவற்றால் மரணத்தை சந்தித்ததை அரசு மருத்துவமனை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
ஹைபோக்ஸியா என்றால் என்ன?
சாதாரண ஒரு நபரின் ஆக்ஸிஜன் செறிவு நிலை (SaO2, ஆக்ஸிஜனைச் சுமக்கும் ஹீமோகுளோபின் அளவு) சுமார் 95 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டது. இருப்பினும், நிமோனியா போன்ற நுரையீரலை பாதிக்கும் நிலைமைகளில், இரத்த செறிவு அளவு 94 சதவீதத்திற்கும் குறைவாக குறைகிறது. இந்த நிலை ஹைபோக்ஸியா என்று அழைக்கப்படுகிறது. சுருக்கமாக கூறவேண்டுமானால், உடல் அல்லது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதி போதுமான ஆக்ஸிஜன் விநியோகத்தைப் பெறாத ஒரு நிலையே ஹாப்பி ஹைபோக்ஸியா என்று அழைக்கப்படுகிறது. ஹைபோக்ஸியா முழு உடலையும் பாதிக்கிறது அல்லது உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பாதிக்கிறது. அதுவும் போதுமான ஆக்ஸிஜன் இல்லாத நிலையில், உடலில் உள்ள திசுக்களால் வழக்கமான செயல்பாடுகளை செய்ய முடியாமல் போகிறது.
அறிகுறிகள் என்ன?
பொதுவாக ஒருவருக்கு 90 சதவீதத்திற்கும் குறைவான இரத்த ஆக்ஸிஜன் அளவானது மிகக் குறைவானதாக கருதப்படுகிறது மற்றும் அத்தகைய நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படுகிறது. குறைந்த ஆக்ஸிஜன் அளவு உள்ள ஒருவருக்கு மூச்சுத் திணறல், மார்பு வலி, மன குழப்பம், வேகமாக இதயம் துடிப்பது, வியர்வை, கடுமையான இருமல் போன்ற அறிகுறிகள் இருக்கும். ஆனால் ஹாப்பி ஹைபோக்ஸியாவை சந்திக்கும் கொரோனா நோயாளிகளுக்கு, அறிகுறிகள் எதுவும் தெரிவதில்லை.
கோவிட்-19 மற்றும் ஹைபோக்ஸியா:
ஹைபோக்ஸியா நிலைமையை கொரோனா நோயாளிகள் சந்திப்பது மருத்துவ நிபுணர்களுக்கு அதிர்ச்சியை வழங்குகிறது. சயின்ஸ்மேக்கின் கூற்றுப்படி, 'இது அடிப்படை உயிரியலை மீறுவதாக தெரிகிறது'. மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மிகக்குறைந்த ஆக்ஸிஜனைப் பெறுவதால், அவர்களுக்கு ஹைபோக்ஸியா நிலை ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருக்கிறது. மேலும் இந்த நிலை உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளை பாதிக்கும் என்று தெரிகிறது.
மருத்துவர் கூற்று :
நியூயார்க் நகரத்தில் உள்ள மைமோனிடெஸ் மருத்துவ மையத்தின் அவசர மருத்துவரான ரூபன் ஸ்ட்ரேயர் கூறுகையில், "மானிட்டரில் நாம் காண்பதற்கும் நோயாளி நமக்கு முன்னால் இருப்பதற்கும் இடையில் ஒரு பொருத்தமின்மை உள்ளது. ஒருவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறையும் போது, உடலில் கார்பன்-டை-ஆக்ஸைடு அளவு உயர்ந்து மூச்சுத் திணறல் அல்லது நனவை இழப்பது போன்ற அறிகுறிகளை வெளிக்காட்டுகிறது. இருப்பினும், கொரோனா நோயாளிகளில் அறிகுறியில்லாத ஹைபோக்ஸியா ஆச்சரியம் மற்றும் கவலையை அளிக்கிறது. மருத்துவர்கள் இதை கவனிக்காவிட்டால், இதய செயலிழப்பு ஏற்படும் வரை நோயாளி முற்றிலும் சாதாரணமாகவே இருப்பர். ஆகவே ஆக்சிமீட்டர் கொண்டு அவ்வப்போது சோதிக்க வேண்டியது அவசியம்.
ஆக்சிமீட்டர்
COVID-19 நோயாளியின் இரத்த ஆக்ஸிஜன் அளவைக் கண்டறிய ஆக்சிமீட்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஆக்சிமீட்டரை கொரோனா நோயாளிகள் அவ்வப்போது பயன்படுத்தி தங்களின் ஆக்ஸிஜன் அளவை சோதித்து வந்தால், ஹைபோக்ஸியா நிலையால் ஏற்படும் மரணத்தில் இருந்து தப்பிக்கலாம்.
முடிவு :
தற்போது வரை கொரோனா காரணமாக ஏற்படும் இதய பிரச்சனைகள் வயதானவர்களிடமோ அல்லது இதய பிரச்சனை வரலாறு உள்ளவர்களிடமோ அதிகம் காணப்படுகின்றன. இருப்பினும், ஹாப்பி ஹைபோக்ஸியாவால் ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்கும் நோயாளிகள் கூட இதய செயலிழப்புக்களை அனுபவிக்கின்றனர். எனவே நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு, இனிமேலாவது மாஸ்க் அணிவது மற்றும் தனிமனித சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளுங்கள்.