உங்கள் குழந்தைகளை தானாக எப்படி சாப்பிட வைக்கணும்னு தெரியுமா !!!! இதோ அம்மாக்களுக்கு சில டிப்ஸ் !!!!
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலை தொடர்ந்து இணை உணவு கொடுக்கும் போது கஞ்சியாகவோ, கூழாகவோ, திரவ உணவாகவோ கொடுப்பதுண்டு. அப்போது குழந்தைக்கு பெரும்பாலும் பாட்டிலில்தான் கொடுப்போம். குறிப்பிட்ட பழக்கத்துக்கு பிறகு குழந்தைகளிடமே பாட்டிலை கொடுத்து பழகுவதும் உண்டு. அதற்கேற்ப குழந்தைகளும் பாட்டிலை கையில் பிடித்துகொண்டு குடிக்க தொடங்குவார்கள். இது வழக்கமானது.
குழந்தைக்கு பால், தண்ணீர், பழச்சாறுகள் என்று திரவ ஆகாரங்களை பாட்டில் மூலம் கொடுத்து பழக்கப்படுத்தும் அம்மாக்கள் திட உணவு கொடுக்கும் போது மட்டும் திணறிவிடுகிறார்கள்.
சாதாரணமாக கால் இட்லி ஊட்டுவதற்குள் 1 மணி நேரத்தை செலவிடும் அம்மாக்கள் பலரையும் பார்த்திருக்கிறேன். ஏன் இப்படி என்றால் குழந்தைக்கு சத்தான ஆகாரம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் குழந்தை சாப்பிடாமல் எல்லாவற்றையும் துப்பிவிடுகிறாள் / ன் என்ன செய்வது என்று புலம்புவார்கள்.
முதலில் அம்மாக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். குழந்தை திட உணவை சாப்பிட தொடங்கும்போது அவர்கள் விருப்பத்துக்கேற்ப கொடுக்க வேண்டும். அவர்களது விருப்பம் என்பது அதிக இனிப்பு நிறைந்த உணவை குறிப்பது கிடையாது.
குழந்தை திட உணவுக்கு தயாராகும் போது அதாவது 10 ஆம் மாதத்துக்கு பிறகு அவர்கள் ஒரு பொருளை கையில் பிடித்து வாயில் வைக்க தொடங்கும்போதே சாப்பிட பழக்கிவிட வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டு போல தான் சாப்பிடுவதும். கண்களுக்கு கலரான உணவுகள், பிடித்த வடிவில் இருந்தால் அவர்களே எடுத்து வாயில் வைக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் அப்போது அவர்கள் பசியை உணர தொடங்க வேண்டும்.
காலை 12 மணிக்கு வயிற்றை நிரப்பும் அளவுக்கு கூழ் , கஞ்சி வகைகளை கொடுத்து 12.30 மணிக்குள் உணவு கொடுத்தால் குழந்தை எப்படி சாப்பிடும். குழந்தைக்கு உணவு கொடுப்பதற்கு குறிப்பிட்ட இடைவெளி இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள்.
குழந்தைக்கு உணவு வைக்க பழகும் போது முதலில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற உணவுகளை தட்டில் பிட்டு பிட்டு வைக்க வேண்டும். நீங்கள் வைத்ததும் குழந்தை உடனே எடுத்து வாயில் போட்டு மென்று விடாது.
முதலில் கையில் உணவை எடுத்து திருப்பி திருப்பி பார்க்கும். எதையும் உற்று நோக்கி கவனிப்பது தான் குழந்தையின் வழக்கம். இன்னும் சில குழந்தைகள் உணவை நுகர்ந்து பார்த்து சாப்பிட தொடங்கும். நாளடைவில் குழந்தை உணவை எடுத்து சாப்பிட தொடங்கும்.
குழந்தை உணவை சிந்தாமல் சாப்பிடுவார்கள் என்று நினைக்கவேண்டாம். பெரிய தட்டாக இருந்தாலும் உணவை மேலும் கீழும் சிந்தியபடி தான் சாப்பிடுவார்கள். அதனால் தரையை சுத்தமாக வைத்திருப்பது பாதுகாப்பானது.
குழந்தை உணவை மென்று சாப்பிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். குழந்தை முதலில் உணவை விழுங்கவே செய்வார்கள். மென்று சாப்பிடும் பழக்கம் வரும்வரை உணவை விழுங்கவே செய்வார்கள். உணவின் சுவை அறியும் வரை ரசித்து சாப்பிடவும் செய்யமாட்டார்கள். ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் குழந்தை உணவை தானாக சாப்பிடுவதை பழக்க வேண்டும். இப்படி தொடர்ந்து சாப்பிட்டாலே நாளடைவில் குழந்தை அழகாக தனியாக சாப்பிட தொடங்கும்.
குழந்தை நாளாடைவில் எல்லோரும் சாப்பிட உட்காரும் போதே தானாக ஓடி வந்து உட்கார்ந்து கொள்ளும். அதன் பிறகு குழந்தைக்கு உணவை ஊட்டும் போதும் உணவை துப்பாமல் மென்று சாப்பிட தொடங்கும். பசி எடுத்தாலும் குழந்தை கையில் வைத்திருக்கும் பொருள்களை மென்று அசைபோட்டபடி செய்தால் அதற்கு பசி எடுக்கிறது என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
குழந்தையை சம்மணமிட்டு உட்காரவைத்து சாப்பிட பழக்குங்கள். அனைவரும் சாப்பிடும் போது குழந்தைக்கு அனைத்து சுவையான உணவுகளையும் பழக்க வேண்டும். கலரான உணவுகள் குழந்தைக்கு எப்பொதும் பிடிக்கும். அதனால் சத்து நிறைந்த உணவுகளை எப்போதும் கொடுத்து பழக வேண்டும்.
தினம் ஒரு காய்கறியை வேகவைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தட்டில் அலங்காரமாக வைக்க வேண்டும். கேரட்டை சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேகவைத்து வைக்கலாம். சுண்டல் வகைகளை நன்றாக குழைய வேகவைத்து வைக்கலாம்.
கீரைகளை சாதத்தில் கலந்து சிறு சிறு உருண்டையாக வைக்கலாம். காய்கறிகளை சப்பாத்திக்குள் வைத்து சப்பாத்தி ரோலாக்கி சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம். பெரும்பாலும் அரிசி உணவுகளை தவிர்த்து சமச்சீரான சத்துகள் அடங்கிய பொருள்களாகவே இருக்க வேண்டும்.
குழந்தை தனியாக சாப்பிட தொடங்கினாலும் தனியாக விடாமல் குழந்தையின் அருகில் அமர்ந்து உட்கார பழகுங்கள். குழந்தை உணவை எடுத்துவைக்கும் ஒவ்வொரு கவளத்தையும் சரியான முறையில் வாயில் வைக்கிறார்களா என்பதை கவனிக்க வேண்டும்.
ஒரே மாதிரியான உணவை கொடுக்காமல் தினம் ஒரு உணவாக கொடுத்து பழக வேண்டும். எல்லா சுவையும் தினம் ஒன்றாக கலந்து கொடுத்தால் குழந்தை எல்லா வகையான சுவையும் சாப்பிட தொடங்கும். அதே நேரம் குழந்தை சாப்பிட வேண்டும் என்று அதிக இனிப்பு சேர்க்க வேண்டாம்.
தட்டில் வைத்திருக்கும் அனைத்து உணவையும் குழந்தை சாப்பிட வேண்டும் என்று விரும்ப வேண்டாம். அதே போன்று வேகமாக சாப்பிடவும் அவசரப்படுத்த கூடாது. குழந்தை சாப்பிடும் வரை பொறுமையாக இருந்தாலே குழந்தை வயிறு நிறைவாக சாப்பிடுவார்கள்.
குழந்தைக்கு சில உணவின் சுவை பிடிக்காமல் போகலாம். அதனால் அந்த உணவை தவிர்க்க செய்துவிட வேண்டாம். சில நாட்கள் கழித்து வேறு முறையில் அதை சமைத்து கொடுக்கலாம்.
குழந்தை தனியாக சாப்பிடும் போது வேகவேகமாக சாப்பிட நேரிடலாம் என்பதால் உடன் இருப்பது நல்லது.
தொடர்ந்து குழந்தை தானாக சாப்பிடும் போது வளரும் பருவத்தில் உணவுகளை ஒதுக்காமல் அனைத்தையும் சாப்பிட பழகுவார்கள். வளர்ந்த பிறகும் அடம்பிடிக்காமல் சாப்பிட பழகுவார்கள். குழந்தை சாப்பிடும் போது அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து சாப்பிட வைப்பதும் அவர்களுக்குள் நல்ல பண்புகள் வளரக்கூடும். இனி குழந்தைகளை சாப்பிட தானாக பழக்குங்கள்.