ரஷ்யாவில் வால்கா வெள்ளத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர் !!!!!
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக ரஷ்யா செல்கின்றனர். வொல்கொக்ராட் (Volgograd) என்ற பகுதியில் அவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் வால்கா நதிக்கரைக்குச் சென்றுள்ளனர். மாணவர் ஒருவர் நதி நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைக் காப்பாற்ற சக மாணவர்கள் மூன்று பேர் முயன்றபோது ஆற்று நீரில் நான்கு பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் நான்கு பேருமே உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.
தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆஷிக், சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன், சேலம் மாவட்டம் தலைவாசலைச் சேர்ந்த மனோஜ் திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.
"என் மகனை ஒரு டாக்டராகப் பார்ப்பது எங்களுக்கு ஒரு பெரிய கனவாக இருந்தது, அவனும் டாக்டராக வேண்டும் என மிகச் சிறிய வயதிலிருந்தே விரும்பினான். படிப்பை முடித்து ஆறு மாதங்களில் வீடு திரும்புவான் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் ” என முகமது ஆஷிக்கின் தந்தை முகமது ரஃபி துக்கம் மேலிட தெரிவித்தார்.
ராமு விக்னேஷின் உறவினர் சரத், “மருத்துவத்தின் மீதான ஆர்வம் தான் அவரை ரஷ்யா அழைத்துச் சென்றது” எனக் கூறினார். மருத்துவத்தைத் தொடர்வதில் அவர் குறியாக இருந்ததால் அறிமுகமில்லாத நாட்டிற்குச் செல்வதை நாங்கள் பொருட்படுத்தவில்லை ஆனால் அவர் திரும்ப மாட்டார் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை,” என்று துக்கத்தை பகிர்ந்துகொண்டார்.
கொரோனா பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் நான்கு பேரின் உடல்களை விரைவாக தமிழ்நாடு கொண்டுவர இந்திய தூதரக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.