இந்தியன் 2 படப்பிடிப்பில் க்ரேன் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 கோடி வழங்கிய கமல் மற்றும் ஷங்கர்



கமல்ஹாசன் மற்றும் ஷங்கர் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் இந்தியன் 2. அது 1996 இல் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தான் இது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

லைகா நிறுவனம் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வரும் இந்த படத்தின் ஷுட்டிங் இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. கமல்ஹாசன் வயதான இந்தியன் தாத்தா கெட்டப்பில் இருக்கும் பல புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19 தேதி சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டி ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடந்து வந்த போது, ஒரு பெரிய கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அப்போது ஒரு முக்கிய காட்சி படமாக்கி கொண்டிருந்தார் ஷங்கர். இந்த விபத்தில் படக்குழுவினர் 3 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி பலியானார்கள். மேலும் 10 பேர் காயமடைந்தனர்/.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேற்று தலா ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கி இருக்கிறது இந்தியன்-2 படக்குழு. நேற்று கமல் மற்றும் ஷங்கர் இருவரும் இறந்தவர்கள் குடும்பத்தினரிடம் இந்த நிதிக்கான காசோலையை வழங்கினார்கள். உடன் பெப்சி சங்க தலைவர் ஆர்கே செல்வமணி இருந்தார்.

இந்த விபத்து பற்றிய செய்தி வெளியானதும் மொத்த சினிமா துறையே அதிர்ச்சியில் உறைந்தது. அங்கு நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்று இருந்த கமல்ஹாசன், காஜல் அகர்வால், காஸ்ட்யூம் டிசைனர் அமிர்தா ராம் உள்ளிட்டவர்கள் இந்த விபத்தில் இருந்து 10 நொடி வித்தியாசத்தில் உயிர் தப்பினார்கள் என கூறப்பட்டது.


விபத்தில் உயிரிழந்த கிருஷ்ணா மற்றும் மது இருவரும் ஷங்கருக்கு உதவியாளர்களாக இருந்தவர்கள். கேட்டரிங் டீமில் இருந்த சந்திரன் என்ற நபரும் உயிரிழந்தார். அவர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக கமல்ஹாசன் அப்போது அறிவித்திருந்தார். மேலும் லைக்கா நிறுவனம் இரண்டு கோடி ரூபாய் தருவதாக அறிவித்தது. இயக்குனர் ஷங்கர் ஒரு கோடி ரூபாய் அளித்திருக்கிறார். மொத்தம் 4 கோடி ரூபாயை இறந்தவரின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி ரூபாயும் படுகாயமடைந்த லைட்மேன் ஒருவருக்கு 80 லட்சம் ரூபாயும் மீதமிருக்கும் தொகை காயமடைந்த மற்றவர்களுக்கும் உதவி செய்வதற்காக வழங்கப்பட்டிருக்கிறது.

பிப்ரவரி மாதம் இந்த விபத்து நடைபெற்ற நிலையில் அதற்கு பிறகு இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் துவங்கவே இல்லை. விபத்து பற்றிய விசாரணையை போலீசார் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார், அதற்கு அவர்கள் எழுதிய பதில் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியது. கமல் மற்றும் லைகா நிறுவனம் இடையே இதனால் உரசல் ஏற்பட்டு இருக்கிறது என்று கூட சினிமாத்துறையினர் பேசிக்கொண்டனர்.

மேலும் இதனைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால் படப்பிடிப்பு நடத்த அரசு தடை விதித்திருக்கிறது. மீண்டும் அரசு அனுமதி அளித்த பிறகு தான் இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் உடன் காஜல் அகர்வால், ராகுல் ப்ரீத் சிங், விவேக், டெல்லி கணேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad