கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஏன் இவ்வளவு தாமதம் ???
உலகமே கொடிய கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸிற்கு எதிராக மக்களைப் பாதுகாப்பதற்கு தடுப்பூசியை உருவாக்கும் பணியில் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் மிகவும் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இன்று வரை உலகெங்கிலும் சுமார் 150-க்கும் அதிகமான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதில் சில நாடுகள் இந்த ஆண்டே தடுப்பூசியை வெளியிடுவதற்கான சாத்தியம் உள்ளதாக கூறுகின்றன.
ரஷ்ய தடுப்பூசியின் நிலை என்ன?
ஆகஸ்ட் 3 முதல் ரஷ்யா தனது தடுப்பூசியின் 3 ஆம் கட்ட சோதனைகளைத் தொடங்க தயாராக உள்ளது. ஆனால் அந்நாட்டின் சுகாதார துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ இந்த தடுப்பூசி இறுதி பரிசோதனையை முடிப்பதற்கு முன்பே பொது மக்களுக்கு கிடைக்க செய்யக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் மிகவும் பிரபலமான தடுப்பூசி AZD1222 என்று அழைக்கப்படுகிறது. இது ஏற்கனவே பெரிய அளவிலான மூன்றாம் கட்ட மனித சோதனைகளில் உள்ளது மற்றும் இது செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
கோவாக்சின் தடுப்பூசி
இந்தியா தனது முதல் உள்நாட்டு கோவிட்-19 தடுப்பூசியான 'கோவாக்சின்' மருத்துவ சோதனைகளை நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. பாரத் பயோடெக் உருவாக்கிய தடுப்பூசி ஆகஸ்டு மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்து ஏழு மாதங்களாகிவிட்டது.
ஆனால் இன்னும் இந்த வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்க ஏன் இன்னும் காலம் எடுக்கிறது? 2009 ஆம் ஆண்டில் பன்றிக் காய்ச்சல் உலகில் பரவ ஆரம்பித்த போது, விஞ்ஞானிகள் அதற்கான தடுப்பூசியை ஐந்தே மாதங்களுக்குள் கண்டுபிடித்தனர்.
பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி
எளிதில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? ஏப்ரல் 2009 ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் முதன்முதலில் தோன்றிய பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய் உலகளவில் சுமார் 2,84,000 மக்களை அழித்தது. இந்த இன்ப்ளூயன்ஸா வைரஸ் பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவியதாக நம்பப்படுகிறது.
இந்த வைரஸ் உலகைத் தாக்கிய போது, விஞ்ஞானிகள் இதை அழிப்பதற்கு தற்போது போன்று மிகவும் தீவிரமாக இறங்கினர். இந்த தடுப்பூசிக்கான பணிகள் ஏப்ரல் 2009 இன் பிற்பகுதியில் தொடங்கியது மற்றும் அக்டோபர் 5 ஆம் தேதி அமெரிக்காவில் மக்களுக்கு வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி கிடைத்தது. இறுதியில் உலக சுகாதார நிறுவனம் ஆகஸ்ட் 2010 இல் இந்த தொற்றுநோய்க்கு முடிவு கட்டியது.
ஏன் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுப்பிடிக்க தாமதமாகிறது?
2009 ஆம் ஆண்டு இரண்டாம் பெருந்தொற்றுநோயாக இன்ப்ளூயன்ஸா வைரஸால் உண்டான பன்றிக்காய்ச்சல் இருந்தது. அதற்கு முன் முதல் பெருந்தொற்றாக 1918-1920 ஆம் ஆண்டு பேரழிவை ஏற்படுத்திய ஸ்பானிஷ் ப்ளூ இருந்தது. 2009 ஆம் ஆண்டு பரவிய பன்றிக்காய்ச்சல் ஒரு புதிய திரிபு என்றாலும், நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதற்கு என்ன தேவை என்பதை விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் அறிந்திருந்தனர்.
அதோடு, தேவைக்கேற்ப சரிசெய்வதற்கு ஏற்கனவே ஒரு காய்ச்சல் தடுப்பூசியும் இருந்தது. ஆனால் கோவிட்-19 இன் நிலைமை இதுவல்ல. இது கொரோனா வைரஸின் புதிய திரிபு காரணமாக ஏற்படுகிறது. ஏற்கனவே அறியப்பட்ட கொரோனா வைரஸ் வகைகள் இருந்தன. இருப்பினும் அதற்கு எந்த ஒரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கவில்லை. மேலும் நாவல் கொரோனா வைரஸ் பற்றி விஞ்ஞானிகளுக்கு இன்னும் அதிகம் எதுவும் தெரியாது.
மேலும் நோய்க்கு எதிரான பாதுகாப்பு நோயெதிர்ப்பு சக்தி குறித்தும் தெளிவாக தெரியவில்லை. அதோடு தற்போது கோவிட்-19 இல் இருந்து மீண்டவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. சில ஆராய்ச்சியாளர்கள் ஆன்டிபாடிகள் சில மாதங்களுக்கு மட்டுமே நோயாளிகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி தருவதாகவும் கூறியுள்ளனர்.
ஆக்ஸ்போர்டின் கோவிட்-19 தடுப்பூசி எந்த கட்டத்தில் உள்ளது?
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆரம்ப சோதனைகளில் சாதகமான முடிவைக் காட்டியுள்ளது. அதுவும் இந்த ஆய்வில் தடுப்பூசி போடப்பட்ட தன்னார்வலர்களின் உடலில் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடக்கூடிய ஆன்டிபாடிகள் மற்றும் டி-செல்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த தடுப்பூசி ChAdOx1 nCoV-19 என்றும் அழைக்கப்படுகிறது. இது சிம்பன்ஸிகளுக்கு ஜலதோஷத்தை ஏற்படுத்தும் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட வைரஸ்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த வைரஸில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பதால், இது மனிதர்களுக்கு தொற்றுக்களை ஏற்படுத்தாது மற்றும் இது கொரோனா வைரஸைப் போலவே தோற்றமளிக்கும். தடுப்பூசியும் கொரோனா வைரஸை ஒத்திருப்பதால், நோயெதிர்ப்பு அமைப்பு வைரஸை எவ்வாறு தாக்குவது என்பதை நன்கு அறிந்து செயல்படும்.
மொத்தத்தில் தடுப்பூசி எப்போது கிடைக்கும்?
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளின் இறுதிக் கட்டத்தில் உள்ளது. மேலும் இது ஆண்டு இறுதிக்குள் பயனுள்ளதாக இருக்கும் என்றும் நிரூபிக்கப்படும். இருப்பினும், எல்லாம் சரியாக நடந்தாலும், பரவலான தடுப்பூசி அடுத்த ஆண்டு மட்டுமே கிடைக்க சாத்தியமாகும். எனவே அதுவரை நாம் மிகவும் கவனமாகவும், சுகாதாரமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்தவாறும் இருக்க வேண்டியதும் அவசியம்.