'ராதே ஷ்யாம்' - மீண்டும் 'காப்பி' சர்ச்சையில் பிரபாஸ் போஸ்டர்
'பாகுபலி' படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். இப்படி புகழ் பெற்றுவிட்ட பின் தன் இமேஜ் மீது எந்தவிதமான சர்ச்சைகளும் வராமல் பார்த்துக் கொள்வதுதான் பிரபாஸுக்கு அழகு. ஆனால், அவர் அதில் அதிக கவனம் செலுத்துவதில்லை போலிருக்கிறது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த 'சாஹோ' படத்தின் சில போஸ்டர்கள் 'காப்பி' அடித்து உருவாக்கப்பட்டவை என்று சர்ச்சை எழுந்தன. தற்போது பிரபாஸ் நடிக்க உள்ள அடுத்த படமான 'ராதே ஷ்யாம்' பட போஸ்டரும் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது. நேற்றுதான் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானது.
அதன் டிசைன் அப்படியே தமிழ்ப் படமான 'ஐ', தெலுங்குப் படமான 'காஞ்சே', ஹிந்திப் படமான 'ராம்-லீலா' ஆகிய படங்களின் போஸ்டர்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சைகளை எழுப்பி உள்ளார்கள்.
மேலே சொன்ன மூன்று படங்களிலும் நாயகன், நாயகி மட்டுமே இடம் பெற்றிருப்பார்கள். நாயகி அணிந்திருக்கும் பாவாடை போன்ற ஆடை மிக நீளமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். நேற்று வெளியான 'ராதே ஷ்யாம்' போஸ்டருக்கும் இவற்றிற்கும் பெரிய வித்தியாசம் இருக்காது.