மாஸ்க் அணிந்திருக்கும் போது உங்கள் வாய் துர்நாற்றத்தை சகித்துக்கொள்ள முடியவில்லையா ??? இதோ உங்களுக்கான சில டிப்ஸ் !!!!!



உலகில் பலரது தன்னம்பிகையையும், சமூக வாழ்க்கையையும் பாதிக்கும் ஒன்றாக வாய் துர்நாற்றம் உள்ளது. இந்த நிலையை ஹலிடோசிஸ் என்று கூறுவர். ஒருவருக்கு வாய் துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் வாழ்க்கை முறை பழக்கங்களான புகைப்பிடிப்பது, மது அருந்துவது, மோசமான வாய் சுகாதாரம், பல் சொத்தை, ஈறு நோய்கள் போன்றவை அடங்கும். அதுமட்டுமின்றி ஒருவரது வாயில் போதுமான எச்சில் சுரக்காமல் இருந்தாலும் வாய் துர்நாற்றம் வீசும்.

அதிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவலால் எங்கு வெளியே செல்வதாக இருந்தாலும், மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல வேண்டும் என்று அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனால் தற்போது பலரும் அவரவர் வாயில் இருந்து வரும் துர்நாற்றத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது. மாஸ்க் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளதால், இத்தனை நாட்களாக வாய் துர்நாற்றம் வீசுவதைத் தெரியாமல் இருந்தவர்களும் தற்போது தெரிந்திருப்பார்கள்.

சரி, உங்கள் வாயும் இப்படி நாற்றமடிக்கிறதா? இதைத் தடுக்க ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றை அன்றாடம் மேற்கொண்டு வந்தால், துர்நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.

சோம்பு :



சோம்பில் உள்ள ஆன்டி-செப்டிக் பண்புகள், வாய் துர்நாற்றத்திற்கு காரணமான பாக்டீரியாக்களை நீக்கும். ஒரு டேபிள் ஸ்பூன் சோம்பை வாயில் போட்டு மெல்லுவதன் மூலும், வாய் புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, வாயில் எச்சில் உற்பத்தியும் தூண்டிவிடப்படும்.

பட்டை :



பட்டையில் அல்டிஹைடு என்னும் அத்தியாவசிய எண்ணெய் காணப்படுகிறது. இது வாயில் உள்ள பாக்டீரியாக்களைக் குறைத்து, வாய் துர்நாற்றத்தைப் போக்கும். ஒரு டீஸ்பூன் பட்டை பொடியை நீரில் போட்டு, அத்துடன் ஒரு பிரியாணி இலை மற்றும் 1-2 ஏலக்காயைத் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அந்நீரை வடிகட்டி, குளிர்ந்த பின் அந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை ஜூஸ் :



எலுமிச்சை துண்டை வாயில் போட்டு மெல்லலாம் அல்லது எலுமிச்சை தோல் கூட வாயை புத்துணர்ச்சி அடையச் செய்யும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் வாயில் எச்சில் உற்பத்தியைத் தூண்டிவிட்டு, வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடுகிறது. வேண்டுமானால் தினமும் ஒரு கப் நீரில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்கலாம்.

பார்ஸ்லி :



பார்ஸ்லியில் உள்ள குளோரோஃபில் வாய் துர்நாற்றத்தை நடுநிலையாக்குவதில் சிறந்தது. அதற்கு பார்ஸ்லி இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள். இல்லாவிட்டால், பார்ஸ்லி தண்டுகளை சிறிது வினிகரில் முழுமையாக நனைத்து வாயில் போட்டு மெல்லுங்கள்.

கிராம்பு :



கிராம்பில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், வாயை புத்துணர்ச்சியாக்க செய்யும். அதற்கு சில கிராம்பு துண்டுகளை வாயில் போட்டு மெல்லுவதன் மூலம் வாய் துர்நாற்றத்தைப் போக்கலாம். இல்லாவிட்டால், கிராம்பு டீ தயாரித்து, அதை மௌத் வாஷாகவும் பயன்படுத்தலாம். அதற்கு ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் கிராம்பு பொடி சேர்த்து, மிதமான தீயில் 5-10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். பின் அதைக் கொண்டு தினமும் இரண்டு முறை வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

ஆப்பிள் சீடர் வினிகர் :



ஆப்பிள் சீடர் வினிகர் pH அளவை சமநிலைப்படுத்துவதில் சிறந்தது. ஆகவே இது வாய் துர்நாற்றத்தை சரிசெய்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் நீரில் கலந்து, அந்த பானத்தை உணவு உண்பதற்கு முன் குடிக்க வேண்டும். இதனால் செரிமானம் சிறப்பாக நடைபெறுவதோடு, வாய் துர்நாற்றமும் சரிசெய்யப்படும். வேண்டுமானால், சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு கப் நீரில் கலந்து, அந்நீரால் வாயைக் கொப்பளிக்கலாம்.

பேக்கிங் சோடா :



ஆல்கஹால் அல்லாத மௌத் வாஷ் தயாரிக்க பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தலாம். ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சில துளிகள் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் நிறைந்த புதினா எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பின் இந்த கலவையால் வாயைக் கொப்பளிக்கவும். இதனால் வாயில் உள்ள அமில அளவுகள் சீராக இருப்பதுடன், வாய் துர்நாற்றமும் நீங்கும்.

தண்ணீர் :



பொதுவாக தினமும் அதிகளவு நீரைக் குடித்தாலே வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும். அதோடு அடிக்கடி குளிர்ந்த நீரால் வாயைக் கொப்பளிப்பதன் மூலம், வாய் துர்நாற்றம் வீசுவது தடுக்கப்படும்.

குறிப்பு :

மேலே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழிகளைப் பின்பற்றியும் உங்கள் வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்றால், உடனே பல் மருத்துவரை அணுக அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் வாய் துர்நாற்றம் சில ஆரோக்கிய பிரச்சனைகளின் அறிகுறியும் கூட. எனவே கவனமாக இருங்கள்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad