உங்க வீ ட்ல குழந்தைகளுக்கு பல் வலி இருக்கா ??? அப்போ உங்களுக்கான வீட்டு வைத்தியங்கள் இதோ !!!!
வளர்ந்த பெரியவர்களாலேயே தாங்க முடியாத வலி பல் வலி. இலேசான வலியாக இருந்தாலும் அதன் தீவிரம் தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். பற்கள் இருக்கும் இடம் தாண்டி, நரம்புகளில் வீக்கம், முகம் முழுக்க வலி தாடையில் வலி என்று ஒவ்வொரு இடமாக பரவக்கூடும்.
இந்த நிலை சிறுவர்களுக்கு வந்தால் தாங்கொணா வலியை அனுபவிப்பார்கள். பெரும்பாலும் குழந்தைகள் அதிக அளவு சாக்லெட், ஐஸ்க்ரீம், இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிட்டு பல் சொத்தைக்கு ஆளாகிறார்கள். இதனால் இரவு நேரங்களில் அதிகம் அவஸ்தைப்படும் பிள்ளைகளுக்கு என்ன கைவைத்தியம் பலனளிக்கும் என்று பார்க்கலாமா?
கொய்யா இலைகள்:
கொய்யா இலைகள் மருத்துவகுணங்களை கொண்டிருக்கிறது என்பது அறிவோம். கொய்யா இலைகள் தேநீர் போட்டு குடிப்பதால் இருமல், தொண்டை வலிக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த இலைகள் பல் வலி, ஈறு பிரச்சனைகள், வாய்ப்புண் தொண்டைப்புண் போன்றவற்றை சரிசெய்யகூடியது.
கொய்யா இளந்தளிர்களை நன்றாக கழுவி அப்படியே பற்களின் இடையில் மென்று சாப்பிட்டால் பல் வலி குறையக்கூடும். ஆனால் வளரும் பிள்ளைகள் கொய்யா இலைகளை மென்று சாப்பிட முடியாது. அதற்கு மாற்றாக கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து அந்த நீர் சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி இளஞ்சூடாக இருக்கும் போது குழந்தைகளை வாய் கொப்புளிக்க செய்தால் பல் வலி காணாமல் போகும்.
ஹெர்பல் பேஸ்ட்:
வளரும் பிள்ளைகள் என்பதால் வெறும் மிளகு மட்டும் வைத்து அரைத்து வைக்க முடியாது. இவை காரத்தன்மையை உண்டாக்கிவிடும். அதனால் மிளகு 5 எடுத்து அதில் இந்துப்பு சேர்த்து அரைத்து பல் வலி இருக்கும் இடத்தில் வைக்கவும். அதை வைத்ததும் வாயை இறுக மூடிக்கொள்ள வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் வலி இருக்கும் இடம் குறையும். தினமும் ஒரு வேளை மட்டும் வைத்தால் போதும் ஆரம்ப கால சொத்தையும் குணமாகும். மிளகு காரமாக இருந்தாலும் இவை வலியை போக்க கூடியது. இலேசான பல் சொத்தையை குணமாக்கிவிடும்.
கல் உப்பு தண்ணீர்:
தினமும் குழந்தைகள் வாய் கொப்புளிக்கும் போது வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்து போட்டு கொப்புளிக்க வேண்டும். கல் உப்பு அதிகமாக இருந்தால் குழந்தைகள் வாயில் வைக்க மாட்டார்கள். அதிக அளவு உப்பு சேர்க்காமல் சிறிதளவு சேர்த்தால் போதும். எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் வெதுவெதுப்பான நீரை கொண்டு வாய் கொப்புளிக்க செய்யுங்கள். இதனால் பல் வலி படிப்படியாக குறையும். குறிப்பாக இரவு நேரங்களில் வலியை குறைக்க செய்யும். உடனடி தீர்வுக்கு இவை தான் பலனளிக்கும்.
தைம் எண்ணெய்:
தைம் மூலிகையிலிருந்து தைலம், எண்ணெய், டீ மூன்றையும் பெறமுடியும். தைம் மூலிகை கிடைப்பது அரிது என்றாலும் தைம் எண்ணெய் கிடைக்கும். இதை கொண்டும் வைத்தியம் செய்யலாம். இது பல் வலியோடு கூடுதலாக தொண்டை வலியையும் சரிசெய்யகூடியது. பல் வலி அதிகமாவதை குறைப்பதோடு பல் சொத்தை பிரச்சனையையும் வலுவாக்கும். வாய்ப்புண் பிரச்சனை தீர்க்கும். பல் வலியால் அவதியுறும் போது வாய்ப்பகுதி முழுக்க தாடை வரை வலி இருக்கும். தைம் எண்ணெயை நேரடியாக பல்லில் வலி இருக்கும் இடத்தில் உபயோகிக்க வேண்டாம். சிறுவர்கள் என்பதால் ஒரு டம்ளர் நீர் விட்டு , எண்ணெய் 2 சொட்டு சேர்த்து வாய் கொப்புளிக்க செய்தால் பல் வலி குணமாகும்.
கிராம்பு பேஸ்ட்:
பல் வலி உண்டாகும் போது கிராம்பு அடக்கி வைத்தால் போதுமானது என்று சொல்வார்கள் பெரியவர்கள். கிராம்பின் மணமும் கார்ப்புச்சுவையும் குழந்தைகளுக்கு பிடிக்காது. அதனால் கிராம்பு பொடியை நல்லெண்ணெயில் கலந்து குழந்தைக்கு வலி இருக்கும் இடத்தில் தடவினால் கூட போதுமானது.
மேற்கண்டவையெல்லாம் பல் வலிக்கான அவசர கால கைவைத்தியம். சாதாரணமாக பல் வலி வரும் போது இதை தொடர்ந்து கடைபிடித்தால் வலி பெருமளவு குறையும். பல் சொத்தை ஆரம்ப கட்டமாக இருந்தாலும் குணமடைந்துவிடும். வளரும் பிள்ளைகளுக்கு இந்த பொருள்கள் பாதிப்பை உண்டாக்காது. எனினும் வளரும் பிள்ளைகள் பல் வலி. பல் சொத்தை போன்றவற்றால் அவதியுறும் போது, இனிப்பு பொருள்களை அதிகம் கொடுக்காமல் இருந்தாலே பெருமளவு சரிசெய்துவிட முடியும். அதிக சொத்தையும் வலியும் இருந்தால் மருத்துவரை அணுகுவதும் அவசியம்.