முகப்பருக்களை கட்டுப்படுத்துவது எப்படி?

முகத்தில் வரும் புள்ளிகளுக்கு Acne என்று பெயர். pimples என்றும் அழைப்பார்கள். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது. இளம் வயதில் பலருக்கும் முகத்தில் பரு வரலாம். முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய்ப் பசையும் சேர்ந்து அடைபட்டுப் போவதால் பரு வருகிறது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், தோள்பட்டை போன்ற இடங்களில் இது வரலாம்.

பரு வலியை ஏற்படுத்துவதுடன் மனத் துன்பத்தையும் கொடுக்கும். ஒன்று மறைந்தால் இன்னொன்று வரும். ஒழுங்காகச் சிகிச்சை செய்தால், முழுமையாகக் குறைத்துவிடலாம். முடி நாளங்களின் திறப்புகள் எண்ணெய்க் கசிவு போன்ற பொருளால் அடைக்கப்படும்போது வரும் பரு blackheads எனப்படுகிறது. இந்தப் பருவானது உருண்டு, மேலெழுந்து, சிவந்து உள்ளே சீழுடன் சிறு கட்டிகளைப் போலக் காணப்படும்.

முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஒரு சில மருந்துகளால் பரு வரலாம். அதிகக் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் இதற்குக் காரணம். இளம் வயதினருக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் பருக்கள் வரலாம்.

பரு தானாகப் பழுக்கும் வரை விட்டால் முழுமையாகப் பழுத்ததும் காய்ந்து, அதன் மேலே படலம்போல் ஒட்டிக்கொண்டிருந்த தோல் வெளிப்பட்டுவிடும். வடு இருக்காது.

முகப்பறு எவ்வாறு வருகின்றது?

ஹார்மோன் சுரப்பு, எண்ணெய் பசை அதிகரிப்பு, கிருமி தொற்று போன்றவை முகப்பருக்கள் ஏற்பட காரணமாகின்றன. இந்த பருக்களில் சீழ்போன்ற திரவம் நிறைந்து கரும்புள்ளிகளையும் உருவாக்கும். இந்த சீழில் உள்ள கிருமிகள் பரவி மேலும் முகப்பருக்களை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

எனவே முகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். அதிக எண்ணெய் பசை உள்ள சருமம் கொண்டவர்கள் அவ்வப்போது முகத்தை சோப்பு மற்றும் நீரால் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முகப்பருக்களை அடிக்கடி கையால் தொட்டுப் பார்க்க கூடாது. நகத்தால் கிள்ளவும் கூடாது. இதனால் கிருமித்தொற்று பரவி அடுத்தடுத்து புதிய முகப்பருக்கள் ஏற்படும். வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது.

நிவாரண முறைகள்

வேப்பம் கொழுந்தை அரைத்து முகப்பருக்களில் பூசி 15 நிமிடங்கள் ஊறவிட்டு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது போல் கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள் தூள், சோற்றுக்கற்றாழை இவற்றையும் பயன்படுத்தலாம். படிகாரம் கலந்த நீரில் முகத்தை கழுவலாம். ஆன்டிபயாட்டிக் லோஷன் பயன்படுத்தினால் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வருவதை தவிர்க்க முடியும். எந்த மருந்து பயன்படுத்தினாலும் பயன்தர ஒரு மாதத்திற்கு மேல் ஆகலாம். எனவே பொறுமையாக பயன்படுத்த வேண்டும். முதலில் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியம்.

பச்சை காய்கறிகள், பழங்கள் அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மலச்சிக்கலை கட்டுப்படுத்த வேண்டும். தலையணை உறை, சோப்பு, டவல் போன்றவற்றை ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வைத்து பயன்படுத்தவும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் வியர்வை மூலம் தோலின் நுண்துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் சுத்தமாகும். பவுடர், அழகுசாதன பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இவற்றால் எண்ணெய் சுரப்பிகள் அடைபடும் நிலை ஏற்படும்.

கிள்ளுவது ஆபத்து

  • கைகளால் நெருடிக் கிள்ளிவிடப்பட்ட பருவின் சீழ் அகன்றவுடன் தோலில் ஒரு பள்ளம் ஏற்பட்டு வடுவாக, நிலைத்து விடும். அடிக்கடி பருக்களைத் தொடுவதாலும் அழுத்துவதாலும் அவை பெருத்து ஆழமாக ஆகிவிடுவதும் உண்டு.
  • பருக்களைக் கிள்ளுவது தவறு. நெருடாமல், தொடாமல் இருந்தால் பருக்கள் வடுவின்றித் தாமே மறைந்துவிடும். கிள்ளுவதால் அரைகுறையாகப் பழுத்த பருக் கட்டி உடைந்து, அதனால் சுற்றுப்புற அழற்சி அதிகமாகி முகமெல்லாம் வீங்கி, காய்ச்சல், கடும் வேதனை போன்றவை ஏற்பட்டுப் பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடுவதும் உண்டு.
  • இனிப்புப் பண்டங்கள் அதிகமாகச் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளலாம். முக்கியமாக சாக்லேட், பாலேடு இனிப்புகளைத் தவிர்க்கலாம். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை லேசான மலமிளக்கிகளைச் சாப்பிடலாம்.
  • குளிக்கும்போது உடலைத் தினமும் ஈரிழைத் துண்டால் அழுத்தித் தேய்த்துக் குளிப்பது நல்லது. முகத்துக்கு அதிகம் சோப்பு தேய்ப்பதைக் குறைத்துவிடுவது நல்லது.
  • பயறு, கடலை, அரிசி போன்ற மாவுகளைத் தேய்த்து எண்ணெய்ப் பிசுக்கை அகற்றலாம். முகத்தையும் ஈரிழைத் துண்டால் தேய்த்துவிடுவதால் வியர்வைக் கோளங்களைச் சுற்றியுள்ள தசைகள் வலுவுற்று துவாரங்கள் அதிகம் பெருக்காமலும், கொழுப்பின் கசிவு, அழுக்கு தங்காமலும் அழற்சி அடையாமலும் பாதுகாக்க முடியும்.

மருந்துகள்

  • முகம் கபத்தின் ஸ்தானமாகும். அங்குக் கொழுப்பும், ரத்தமும் எண்ணெய்ப் பசையால் சீர்கேடு அடைவதால் பரு வருகிறது. இங்குக் கொழுப்பை மாற்றுகிற, ரத்தத்தைச் சமனம் செய்கின்ற, கசப்பை ஆதாரமாகக் கொண்ட மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
  • ஆயுர்வேத கண்ணோட்டப்படி மலசுத்தி மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றன. அதற்குப் பிறகு சாதாரண தோல் நிறத்தை ஏற்படுத்தவும், குழிகளை அடைக்கவும், வர்ணத்தை ஏற்படுத்தவும் மருந்துகள் இணைக்கப்படுகின்றன.
  • இதை ஆயுர்வேதத்தில் முகதூக்ஷிகா என்று அழைப்பார்கள். முகப்பரு நோயில் பாச்சோற்றிப்பட்டை, கொத்தமல்லி, வசம்பு, கோஷ்டம், ஆலம்மொட்டு ஆகியவற்றை அரைத்துப் பூசுவார்கள். மூக்கு வழி மூலிகை சிகிச்சையான நஸ்யம் செய்வதும் உண்டு. சில நேரங்களில் வேப்பம்பட்டை அரைத்து வாந்திக்குக் கொடுக்கலாம். சரக்கொன்றைப் பொடியை அரைத்துப் பூசினால் உடனடி பலன் கிடைக்கும்.

பருக்கள் மறைய

  • துத்தி இலையை அரைத்துப் பருக்கள் மீது தடவிவரப் பருக்கள் மறையும்.
  • நன்னாரி வேர் கஷாயத்தால் பருக்கள் தீரும்.
  • வெட்டி வேர் நூறு கிராம், சந்தனத் தூள் 25 கிராம் ஆகிய இரண்டையும் தூள் செய்து நீர்விட்டுக் கலந்து கட்டிகள் மீது தடவிவர, முகப் பருக்கள், வேனல் கட்டிகள் மாறும்.
  • பாசிப் பருப்புப் பொடியுடன் நெல்லிக்காய் தூள் கலந்து சோப்புக்குப் பதில், தினசரிக் குளிக்கப் பயன்படுத்தினால் பரு மாறி உடல் ஒளிபெறும்.
  • சாதிக்காய், சந்தனம், மிளகு ஆகிய மூன்றையும் அரைத்துப் பற்று போட, பரு மறையும்.

முகம் பளபளப்பாக

முகத்தில் தழும்புகள் அதிகம் இருந்தால் ஆவாரை இலை சாறு எடுத்து முகத்தில் தடவிவரத் தழும்புகள் மறைந்து, முகம் பளபளப்பாக மாறிப் பொலிவு பெறும்.

வசீகரம் பெற

அருகம்புல்லை நன்கு அரைத்து, அத்துடன் சம அளவு பசு நெய் சேர்த்து, 40 நாட்கள்வரை உட்கொண்டால், முக வசீகரம் கிடைக்கும்.

வறண்ட சருமத்துக்கு

உடல் வறண்டு காணப்பட்டால் நெல்லிக்காய், நிலக்கடலை, எலுமிச்சைச்சாறு ஆகியவற்றை அவ்வப்போதுச் சாப்பிட்டு வரவேண்டும்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad