மதுரையில் கொரோனா டிஸ்சார்ஜ் விகிதம் 24.6% ஆக குறைவு

மதுரை: மதுரையில் கொரோனா நோயாளிகள் குணமடையும் வேகம் மிகக்குறைவாக உள்ளது. இதுவரை 24.6 சதவீதம் பேர் தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் ஜூன் பாதிக்குப் பிறகு கொரோனா வெறியாட்டத்தை துவங்கியது. தினமும் 200, 300 பேர் பாதிப்பு பட்டியலில் இடம் பிடிக்கத் துவங்கினர். கடைசி இருவார பாதிப்பு மதுரையை புரட்டிப்போட்டுள்ளது. நேற்று காலை வரை மொத்த பாதிப்பு 4338 ஆக இருந்தது. 69 பேர் இறந்திருந்தனர். இறப்பு விகிதம் 1.59. இது குறைவாக தெரியலாம். ஆனால் சென்னை (1.54) மற்றும் தமிழகத்தின் (1.36) மொத்த இறப்பு விகிதத்தை விட அதிகம்.

சென்னையின் பாதிப்பு இதே அளவு இருக்கும் போது (மே 11ல் 4371), அங்கு நேர்ந்திருந்த இறப்பு 32 தான். ஆனால் மதுரையில் 69 பேர் இறந்துள்ளனர். இது மதுரைக்கான எச்சரிக்கை மணி. முன்னதாகவே நோயை கண்டுபிடிப்பது, சிறப்பான சிகிச்சை, கவனிப்பு மூலம் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.இன்னொரு புறம் டிஸ்சார்ஜ் (சிகிச்சை பெற்று குணமானவர்கள்) விகிதத்திலும் மதுரை பின்தங்கியுள்ளது. 

இந்தியா, தமிழகத்தின் டிஸ்சார்ஜ் விகிதத்தில் பாதியளவு கூட இல்லை. மொத்த பாதிப்பில் தமிழகத்தில் 4வது இடத்தில் மதுரை உள்ளது. முதல் 3 இடங்களில் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை விடவும் மதுரையின் டிஸ்சார்ஜ் விகிதம் மிகக்குறைவு. இதுவரை 24.6 சதவீதம் பேர் தான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். எனவே 'ஆக்டிவ் கேஸ்' எண்ணிக்கை அதிகமாக உள்ளது.எனவே கொரோனா மீட்பு நடவடிக்கையில் மதுரைக்கு இன்னும் சிறப்பு கவனம் தேவைப்படுகிறது.

சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திடீரென ஜூன் 20ல் இருந்து தான் பாதிப்பு உச்சம் தொட்டது. பிற மாவட்டங்களிலோ படிப்படியாக உயர்ந்தது. மதுரையில் பரிசோதனையை அதிகப்படுத்தி நோயாளிகளை கண்டுபிடிக்கிறோம். பாதிப்பு வேகமெடுக்க துவங்கி இருவாரங்கள் ஆவதால், இனி டிஸ்சார்ஜ் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்' என்றார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad