முதல் முறையாக ஒரே வாரத்தில் 21% அதிகமாக எகிறிய கொரோனா பாதிப்பு !!!! இந்தியாவை உலுக்கிய கொரோனா வைரஸ்!!!!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில் ஆறுதல் அளிக்கும் விஷயமாக குணமாகும் நபர்களின் எண்ணிக்கை அமைந்துள்ளது. உரிய மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இருப்பினும் உரிய சுகாதார நடவடிக்கைகளின் மூலம் முடிந்தவரை நோய்த் தொற்றைக் கட்டுக்குள் வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
மொத்த பாதிப்பில் 21%:
இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 40,000 பேருக்கும் அதிகமானோர் கோவிட்-19 பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். கடந்த ஒருவாரத்தில் 2.38 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பில் 21 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் 673 பேர் வைரஸ் பாதிப்பால் பலியாகியுள்ளனர். இது இரண்டாவது(ஜூலை 16ல் - 684 பேர்) அதிகபட்ச பலி எண்ணிக்கை ஆகும். இதன்மூலம் கடந்த வார உயிரிழப்புகள் 4,285ஆக அதிகரித்துள்ளது.
குணமடையும் விகிதம் அதிகரிப்பு:
இது ஒட்டுமொத்த பலி எண்ணிக்கையில் 16 சதவீதம் ஆகும். கடந்த வாரத்தில் வைரஸ் பாதிப்பால் சிகிச்சைக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன்மூலம் மொத்தமாக சிகிச்சை பெறுபவர்கள் 3.9 லட்சமாக உயர்ந்துள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.45 லட்சமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் குணமாகும் நபர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருவது தெரிகிறது. அதாவது 62.5 சதவீதமாக உள்ளது.
புதிய உச்சம் தொட்ட பாதிப்பு :
இந்தியாவின் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 11 லட்சத்தை தாண்டியுள்ளது. 10 லட்சத்தை எட்டிய அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில அரசுகள் அளித்த தகவலின்படி, நேற்று 40,363 பேருக்கு கோவிட்-19 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது முந்தைய நாளில் பதிவாக 38,141 என்ற உச்சத்தை மிஞ்சியிருக்கிறது. நேற்று ஒரேநாளில் புதிய உச்சம் தொட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆகும்.
மகாராஷ்டிரா ‘ஷாக்’:
இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 9,518 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய(ஜூலை 16) உச்சமான 8,641ஐ விட அதிகமாகும். மிகப்பெரிய வித்தியாசம் கொண்ட மாநிலமாக ஆந்திரா உள்ளது. இங்கு சனிக்கிழமை 3,963 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று 5,041 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிற்கு பிறகு ஒரேநாளில் 5,000க்கும் மேற்பட்ட பாதிப்புகளை பெற்ற மாநிலமாக ஆந்திரா இருக்கிறது.
உச்சம் தொட்ட 10 மாநிலங்கள்:
இதைத் தவிர தமிழ்நாடு(4,979), மேற்கு வங்கம்(2,278), உத்தரப் பிரதேசம்(2,250), குஜராத்(965), ராஜஸ்தான்(934), மத்தியப் பிரதேசம்(837), கேரளா(821), உத்தரகாண்ட்(239) என பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. தலைநகர் டெல்லியில் புதிதாக 1,211 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நடப்பு மாதத்தில் குறைந்தபட்ச எண்ணிக்கை என்பது ஆறுதல் அளிப்பதாய் அமைந்துள்ளது.
அதிர்ச்சியூட்டிய ஆந்திரா:
மகாராஷ்டிராவில் தொடர்ந்து 4வது நாளாக 8,000க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். மும்பையில் பாதிப்பு 1,038ஆக குறைந்துள்ளது. ஆந்திராவில் நேற்று 5,041 பேர் வைரஸ் தொற்று ஏற்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 49,650ஆக உயர்ந்துள்ளது. இங்கு பலி எண்ணிக்கை 642ஆக அதிகரித்துள்ளது. இந்த மாநிலத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 46 சதவீதமாக இருக்கிறது.
கர்நாடகா நிலவரம்:
கர்நாடகாவில் நேற்று புதிதாக 4,120 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு 63,772ஆக அதிகரித்துள்ளது. இங்கு பலி எண்ணிக்கை 1,331ஆக உயர்ந்துள்ளது. பெங்களூருவில் நேற்று 2,156 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 36 பேர் பலியாகியுள்ளனர். இங்கு மொத்த பாதிப்பு 31,777ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்புகள் 667ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா:
தமிழகத்தில் தொடர் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை முதல்முறை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் பலியாகியுள்ளனர். சென்னையில் புதிதாக 1,254 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில் ஊரடங்கு தளர்த்தப்படும் நடவடிக்கைகளால் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.