கல்லூரி ஊழியர் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்று நாடகமாடிய காதல் மனைவி; புதுக்கோட்டை அருகே தோசையில் விஷம் கலந்து கள்ளக்காதலனை கொல்ல முயற்சி பெண் கைது
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கல்லூரி ஊழியர் பிணமாக கிடந்த வழக்கில் திருப்பம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து அடித்துக் கொன்று நாடகமாடிய காதல் மனைவிகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மேற்கிருப்பு கிராமத்தில் உள்ள முந்திரித்தோப்பில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி அறிந்த ஊ.மங்கலம் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவரை கொன்று எரித்தது யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து விசாரித்த தனிப்படை போலீசார், 9 மாதங்களுக்கு பிறகு தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரித்து அதன் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வாக்குமூலம்
அப்போது கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த சுதா (வயது 34) என்பவர் தனது கணவர் ஸ்ரீதரனை காணவில்லை என புகார் கொடுத்திருந்தார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவர் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரை ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் மேற்கிருப்பில் உள்ள முந்திரித்தோப்பில் எரிந்த நிலையில் கிடந்தது தனது கணவர் ஸ்ரீதரன் என்றும், கள்ளக்காதலனுடன் ஒன்றாக இருந்ததை பார்த்து விட்டதால் அவரை கொன்று எரித்து விட்டதாகவும் கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப்பதிவு செய்து சுதா மற்றும் அவரது கள்ளக்காதலன் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த ஞானகுரு மகன் சிவராஜ்(23) ஆகியோரை கைதுசெய்தனர்.
இதையடுத்து சுதா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கள்ளக்காதல்
நானும் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்த சக்கரபாணி மகன் ஸ்ரீதரன்(39) என்பவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு மோகன்(13), பரணி(9) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஸ்ரீதரன், பெரம்பலூரில் ஒரு தனியார் கல்லூரியில் உள்ள பஸ்களுக்கு பொறுப்பாளராக இருந்து வந்தார். இதற்காக அவர் கல்லூரியிலேயே தங்கியிருந்து விட்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கு வந்து செல்வார்.
அவ்வாறு வீட்டுக்கு வரும் போது ராமாபுரத்தை சேர்ந்த சிவராஜ் என்பவரை உதவிக்காக ஸ்ரீதரன் அவ்வப்போது அழைத்து வருவார். அப்போது சிவராஜிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது.
வாக்குவாதம்
ஸ்ரீதரன் வேலைக்காக பெரம்பலூர் சென்றதும், நானும் சிவராஜியும் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்தோம். இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர், எனது கணவரிடம் கூறியுள்ளனர். ஆனால் என் மீது இருந்த நம்பிக்கையில் அவர் அதை நம்பவில்லை. இந்நிலையில் கடந்த 11.7.2019 அன்று அதிகாலை 1.30 மணி அளவில் ஸ்ரீதரன், பெரம்பலூரில் இருந்து திடீரென வீட்டுக்கு வந்து விட்டார்.
அப்போது நானும் சிவராஜியும் வீட்டில் உல்லாசமாக இருந்ததை ஸ்ரீதரன் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பெட்ரோல் ஊற்றி உடல் எரிப்பு
இதில் ஆத்திரமடைந்த நான், சிவராஜியுடன் சேர்ந்து ஸ்ரீதரனை அடித்துக் கொன்றேன். பின்பு ஒரு நாள் முழுவதும் அவரது உடலை வீட்டிலேயே வைத்திருந்து, 11.7.2019 அன்று இரவு எனது தங்கையின் காரில் ஸ்ரீதரன் உடலை தூக்கி சென்று, மேற்கு இருப்பு கிராமத்தில் உள்ள முந்திரித்தோப்பில் வைத்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தோம். பின்னர் எங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல் வீட்டுக்கு வந்து விட்டோம். இதையடுத்து என் மீது யாரும் சந்தேகப்படாமல் இருப்பதற்காக கடந்த 22.7.2019 அன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று எனது கணவரை காணவில்லை, கண்டுபிடித்து தாருங்கள் என புகார் கொடுத்தேன்.
9 மாதத்துக்கு மேல் ஆகி விட்டதால் நாங்கள் கொலை செய்ததை யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தோம். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் சிக்கிக்கொண்டோம்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.
கள்ளக்காதலனுடன் இருந்ததை பார்த்து விட்டதால் காதல் கணவரையே மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல்லில், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 11 கடைகளுக்கு பூட்டு - போலீசார் அதிரடி நடவடிக்கை
கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு ஊரடங்கு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மளிகை, பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ஹார்டுவேர் கடைகள், மின்சாதன பொருட்கள் பழுதுபார்க்கும் கடைகள், ஏ.சி.வசதி இல்லாத துணிக்கடை, நகைக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதிக்கப்பட்டது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 11-ந்தேதி முதல் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை தடையின்றி வாங்கி செல்கின்றனர். அதேநேரம் கடைக்காரர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கடைகளில் நெருக்கமாக நின்று பொருட்களை வாங்காமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இதற்காக கடைகளில் விழிப்புணர்வு பேனர் வைக்க வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
அதன்படி பெரும்பாலான கடைகளில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டுள்ளது. எனினும், கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிகிறார்களா? கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா? என்று போலீசாரும், சுகாதாரத்துறையினரும் தீவிரமாக கண்காணித்து வருகின் றனர். அதன்படி திண்டுக்கல் மெயின்ரோடு, கடைவீதி, 4 ரதவீதிகள், ஆர்.எஸ்.சாலை, நாகல்நகர் உள்பட நகர் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது 11 கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் மக்கள் கும்பலாக நின்று பொருட்களை வாங்குவதை போலீசார் பார்த்தனர். இதையடுத்து அந்த கடைகளில் இருந்த வாடிக்கையாளர்களை போலீசார் வெளியேற்றினர். மேலும் கடைகளை பூட்டி உரிமையாளர்களை கடுமையாக எச்சரிக்கை செய்தனர். இதேபோல் தினமும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
விழுப்புரம் சிறுமி கொலையை கண்டித்து போராட்டம் அறிவிப்பு: மதுரை வக்கீல் நந்தினி, தந்தையுடன் கைது
மதுரை புதூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். அவருடைய மகள் வக்கீல் நந்தினி. இவர்கள் இருவரும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தகோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 50-க்கும் மேற்பட்ட முறை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. அப்போது வக்கீல் நந்தினி, அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர் இனி டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என்று வலைத்தளங்களில் கருத்துகளை பதிவு செய்து வந்தனர்.
இந்தநிலையில் விழுப்புரத்தில் சிறுமி ஜெயஸ்ரீயை, அ.தி.மு.க. நிர்வாகிகள் 2 பேர் எரித்து கொலை செய்தனர். அவர்கள் இருவரையும் தூக்கில் போட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை ஐகோர்ட்டு முன்பு நேற்று முதல் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நத்தினியும், அவருடைய தந்தையும் அறிவித்து இருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதூர் போலீசார் நேற்று அதிகாலை 5 மணிக்கே அவர்களது வீட்டின் முன்பு குவிக்கப்பட்டனர்.
வக்கீல் நந்தினியும், அவரது தந்தையும் தூங்கி எழுந்து பார்த்தபோது தங்கள் வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புதூர் போலீசார், ஊரடங்கு காலத்தில் தடையை மீறி நீங்கள் போராட்டம் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளர்கள். எனவே உங்கள் இருவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ய வந்துள்ளோம்” என்று அவர்களிடம் தெரிவித்தனர். பின்னர் போலீசார் வக்கீல் நந்தினி, அவருடைய தந்தை ஆனந்தனை கைது செய்தனர். அப்போது அவர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து வக்கீல் நந்தினி கூறிய போது, “தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்தது துயர சம்பவம் ஆகும். விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீயை குடிபோதையில் எரித்து கொலை செய்த அ.தி.மு.க. பிரமுகர்கள் 2 பேரை உடனே தூக்கில் போட வேண்டும். டாஸ்மாக்கை திறந்து கொலைகளையும், குற்றங்களையும் தூண்டக்கூடாது. டாஸ்மாக்கை மீண்டும் திறக்க அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டை வாபஸ் பெற வேண்டும். வீட்டுக்கே மது சப்ளை செய்யும் திட்டத்தையும் அரசு உடனே கைவிட வேண்டும். இதனை வலியுறுத்தி தான் நானும் எனது தந்தையும் ஐகோர்ட்டு முன்பு உண்ணாவிரதம் இருக்க இருந்தோம். அதற்குள் எங்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து விட்டனர்” என்றார்.
புதுக்கோட்டை அருகே தோசையில் விஷம் கலந்து கள்ளக்காதலனை கொல்ல முயற்சி பெண் கைது
புதுக்கோட்டை அருகே தோசையில் விஷம் கலந்து கள்ளக்காதலனை கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவர்
புதுக்கோட்டை அருகே மச்சுவாடி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் கலைவாணி (வயது 29). இவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். கலைவாணிக்கு ஆலங்குடி அருகே முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான ராஜதுரையுடன் (29) பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழும் நிலை வரை சென்றது. கடந்த சில மாதங்களாக கலைவாணியுடன், ராஜதுரை குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் ராஜதுரை குடித்துவிட்டு வந்து கலைவாணியை அடிக்கடி கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் கலைவாணி மிகுந்த மனவேதனை அடைந்தார்.
தோசையில் விஷம்
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மது குடித்து விட்டு வந்த ராஜதுரை, கலைவாணியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் அவர் ஆத்திரமடைந்தார். இதையடுத்து அவரை கொலை செய்ய கலைவாணி திட்டமிட்டார். அன்றைய தினம் இரவு ராஜ துரைக்கு கலைவாணி தோசை சுட்டுக்கொடுத்துள்ளார்.
அப்போது தோசை மாவில் எலி பேஸ்ட்டை (விஷம்) கலந்துள்ளார். அதில் ஊற்றிக்கொடுத்த தோசையை ராஜதுரை சாப்பிட்டார். இதில் அவருக்கு தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களாக அவர் வாந்தி எடுத்தப்படி வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரை காண நண்பர்கள் வந்த போது ராஜதுரையை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒப்புதல் வாக்குமூலம்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கலைவாணியிடம் விசாரித்த போது, தான் ராஜதுரையை கொல்ல முயன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கலைவாணியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தோசையில் விஷம் கலந்து கொடுத்து கள்ளக்காதலனை பெண் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் அருகே கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி மணல் திருடியவர் துப்பாக்கியுடன் கைது - தப்பிய 2 பேருக்கு வலைவீச்சு
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மண்டபம் யூனியன் ஆற்றாங்கரை பகுதியில் உச்சிப்புளி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில், கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி ஒரு கும்பல் மணல் திருடுவதற்காக பதுங்கி இருந்தவர்களை பிடிப்பதற்காக போலீசார் நெருங்கினர். அப்போது 3 பேர் போலீசாரை கண்டதும் வெளியில் வந்தனர்.
அவர்கள் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். ஆனாலும் போலீசார் அவர்களை மடக்கினர். அவர்களில் ஒருவர் மட்டும் சிக்கினார். மற்ற இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்டவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் வாலாந்தரவை பகுதியைச் சேர்ந்த பீஸ்குட்டி என்ற முனியசாமி (வயது 42) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் நாட்டுத்துப்பாக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து துப்பாக்கியுடன் முனியசாமியை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக உச்சிப்புளி இன்ஸ்பெக்டர் பிரேம்சந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுத்துப்பாக்கியை தவிர வேறு ஆயுதங்கள் அந்த கும்பலிடம் உள்ளதா? என்பது குறித்தும், தப்பியோடிய மற்ற இருவர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 39 பேர் கைது
கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கீர்த்தி மற்றும் போலீசார் பழையபேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதேபகுதியை சேர்ந்த தனுஷ் (வயது 20), மேலேரிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் (45), துரை (49), ஆம்பூரை சேர்ந்த கணேஷ் (20) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் சூளகிரி பகுதியில் சூதாடியதாக சுரேஷ் (28), பழனி (27) ஆகியோரும், பேரிகை பகுதியை சேர்ந்த சந்திரபா (40), கிருஷ்ணப்பா (35), நரசிம்மராஜ் (38), சூடப்பா (46) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். சாமல்பட்டி பகுதியில் சசிகுமார் (24), சிதம்பரம் (39), கந்தன் (40) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கல்லாவி போலீசார் சந்தைதோப்பு கிராமத்தில் ரோந்து சென்ற போது அங்கு பணம் வைத்து சூதாடிய மோகன்ராஜ் (26), சரவணன் (30), முத்து (30) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
ராயக்கோட்டை-தேன்கனிக்கோட்டை
இதேபோல் ராயக்கோட்டை பகுதியில் சூதாடிய தியாகராஜ் (24), ரமேஷ் (30), சரவணன் (32), தங்கராஜ் (28), சேகர் (35), குமார் (35), குப்பன் (42), சின்னசாமி (43), திம்மப்பன் (28), கோபால் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை போலீசார் பிக்கனப்பள்ளி, மரக்கட்டா, தண்டரை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மல்லேஷ் (40), நாகேஷ் (34), தொட்டையா (38), ஆனந்தகுமார் (45), சேகர் (24), ரமேஷ் (38), மஞ்சுநாத் (27), அனில்குமார் (20), நரசிம்மா (24), நவீன்குமார் (24) ஆகிய 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். தேன்கனிக்கோட்டையில் சூதாடிய கோவிந்தராஜ் (40), ஹரி (35), நாகராஜ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் பணம் வைத்து சூதாடியதாக 39 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்தனர்.