மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியது டீக்கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டன; குழந்தைகள், குடும்பத்தை மறந்து தியாகம் செய்யும் செவிலியர்கள்; கன்னியாகுமரி கடல் பகுதியில் நின்ற மர்ம கப்பலால் பரபரப்பு

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

கடலூர் மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பியது டீக்கடைகள், ஓட்டல்கள் திறக்கப்பட்டன
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு கடந்த மார்ச் 24-ந் தேதி 144 தடை உத்தரவை பிறப்பித்தது. மேலும் மத்திய அரசு ஊரடங்கை அறிவித்தது. இதையடுத்து அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்துக்கு திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. வணிக நிறுவனங்கள், சலூன் கடைகள் உள்ளிட்டவை திறக்க அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து சுமார் 45 நாட்களுக்கு பிறகு கடலூர் மாவட்டத்தில் டீக்கடை, ஓட்டல்கள், சிறிய ஜவுளிக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட தனிக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களுக்கு வேண்டிய பொருட்களை வாங்கிச் சென்றனர். டீ மற்றும் ஓட்டல் கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் டீ, காபி மற்றும் உணவுகளை பார்சலாக வாங்கிச் சென்றனர்.

கிருமிநாசினி

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் கயிறு கட்டியும், சவுக்கு கட்டைகளால் தடுப்பும் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கை கழுவுவதற்காக தண்ணீரும், கிருமி நாசினியும் வைக்கப்பட்டிருந்தது. கடைகளில் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படுகிறதா?, பொது மக்கள் முக கவசம் அணிந்து வருகிறார்களா? என்பதை வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

தனிக் கடைகள் திறக்கப்பட்டதால் சுமார் 45 நாட்களுக்கு பிறகு கடலூர் நகரின் முக்கிய பகுதிகள் ஆள்நடமாட்டத்துடன் பரபரப்பாக காணப்பட்டது. அந்த வகையில் கடலூரில் லாரன்ஸ் சாலை, நேதாஜி சாலை, புதுப்பாளையம் கடைத்தெரு, கடலூர் முதுநகர் உள்ளிட்ட பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

கடைகள் திறக்கும் நேரம்

தமிழக அரசு அறிவித்துள்ளபடி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், அனைத்து தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். பெட்டிக்கடை, ஓட்டல், ஜவுளிக்கடை, கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், டீக்கடைகள் (பார்சல் சேவை மட்டும்) காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் செயல்படும்.

அதேபோல் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 24 மணி நேரமும் பெட்ரோல் பங்க்குகள் செயல்படும். கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும், முக கவசம் அணிந்து வருவதையும் கடை உரிமையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

குழந்தைகள், குடும்பத்தை மறந்து தியாகம் செய்யும் செவிலியர்கள்
கடலூர் அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பாளர் பத்மாவதி:

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல. ஒருவகை தொண்டு. சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்புத் தன்மையோடு ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி. இன்று உலகத்தையே புரட்டி போட்டு கொண்டிருக்கும் கொரோனா சேவையில் செவிலியர்கள் தங்களை எந்த அளவுக்கு அர்ப்பணித்து கொண்டு பணிபுரிந்து வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஒரு காலத்தில் சமுதாயத்தில் செவிலியர்களுக்கு மதிப்பு இல்லாமல் இருந்தது. பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளான இன்று(செவ்வாய்க் கிழமை) அனைத்து மருத்துவமனைகளிலும் செவிலியர்கள் ஒன்றுகூடி மெழுகுவர்த்தி ஏந்தி சொந்த விருப்பு வெறுப்புமின்றி நோயாளிகளிடம் நடந்து கொள்வோம். நோயாளிகளுக்கு மதிப்பளித்து அவர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தி செயல்படுவது என உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.

அர்ப்பணிப்பு

கடலூர் அரசு தலைமை மருத்துவமனை செவிலியர் ஸ்டெல்லா மேரி:

செவிலியர் பணியில் சேர்ந்த நாளில் இருந்தே நாங்கள் மருத்துவமனைக்கு வருகின்ற போது எங்களுடைய குடும்பம், குழந்தைகள் அனைவரையும் மறந்து மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு நோயாளிகளுக்கு சேவை செய்து வருகிறோம். கொரோனா மட்டுமல்ல எந்த பேரிடர் வந்தாலும் செவிலியர் தினத்தை நாங்கள் மகிழ்ச்சியோடு பெருமையோடு கொண்டாடுவோம். அந்த வகையில் இன்று பகல் 12 மணி அளவில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் செவிலியர்கள் அனைவரும் அவரவர் பணி செய்யும் இடத்தில் இருந்தே மெழுகுவர்த்தி ஏந்தி உலக செவிலியர் தினத்தை கொண்டாடுகிறோம். அனைவருக்கும் செவிலியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

செவிலியர் ராதா:

இத்தாலி நாட்டை சேர்ந்த மறைந்த செவிலியர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் 200-வது பிறந்தநாள் என்பதால் இந்த ஆண்டு முழுவதும் செவிலியர் ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவி வரும் இந்த காலகட்டத்திலும் நாங்கள் எவ்வித அச்சமுமின்றி நோயாளிகளுக்கு சேவை செய்து உலக செவிலியர் தினத்தை கொண்டாடுவதை நாங்கள் பெருமையாகவே கருதுகிறோம்.

கொரோனாவுக்கு மத்தியில் பணிசெய்யும் தூய்மை பணியாளர்களுக்கு கறிவிருந்து பரிமாறிய பொதுமக்கள்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடே நடுங்கி ஊரடங்கி இருக்கும்போதும், நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள், கொரோனா வைரசை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தூய்மை பணியாளர்களுக்கு தற்போது பணிசுமை அதிகரித்துள்ளது. நேரங் காலம் பார்க்காமல் தூய்மைப்பணிகள், கிருமிநாசினி, பிளச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற பணிகளில் ஓய்வின்றி தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் வீடுகளில் தேங்கும் குப்பைகள், கழிவுகளை தினமும் அப்புறப்படுத்துவதால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தையும் மறந்து ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள். கொரோனாவுக்கு மத்தியில் சிறப்பாக பணியாற்றும் இவர்களின் இந்த பணிகளை பாராட்டி பல்வேறு பகுதிகளில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை அருகே நூதன முறையில் கறிவிருந்து பரிமாறி தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் சிறப்பான மரியாதை செய்து உள்ளனர்.

இந்த நெகிழ்ச்சியான சம்பவம் வருமாறு:-

கோவை பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளனர். கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை பாராட்டி கறிவிருந்து வழங்க அந்த பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.

அதன்படி தூய்மை பணியாளர்களை போற்றும் விதமாக தண்ணீர் பந்தல் பகுதியில் பணியாற்றும் 60 தூய்மை பணியாளர்களுக்கு நேற்று மதியம் கறி விருந்து பறிமாறப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் அப்பகுதி பொதுமக்கள் மரியாதை செய்தனர். தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு மதியம் கறிவிருந்து பரிமாறி மரியாதை செய்ததாக அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இதேபோல் கோவை அருகே போத்தனூர் பகுதியில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக சிறப்பாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை பாராட்டி அவர்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் வழங்கினர். பின்னர் அவர்களின் சேவையை பாராட்டி சேலைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து அவர்கள் மீது மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு போத்தனூர் பகுதி சுகாதார உதவி ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் கமல்நாத், அஜித்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஊரடங்கால் கர்நாடகாவில் சிக்கி தவித்த 62 கட்டிட தொழிலாளர்கள் தர்மபுரி வந்தனர்
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பல்வேறு கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் இவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் உடுப்பி பகுதியிலேயே தவித்து வந்தனர். ஊரடங்கு காலத்தில் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கட்டிட தொழிலாளர்கள் தாங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து உடுப்பியில் இருந்து கட்டிட தொழிலாளர்கள் 62 பேரும் 2 பஸ்களில் நேற்று தர்மபுரி வந்தனர். அவர்கள் செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் மருத்துவ பரிசோதனைக்கான ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல் உடுப்பியில் உள்ள மேலும் 35 தொழிலாளர்களை தர்மபுரிக்கு அழைத்து வர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) தர்மபுரிக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

ஈரோட்டில் பெரும்பாலான கடைகள் திறப்பு: வாகனங்கள் வழக்கம்போல் ஓடின
கொரோனா ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் 34 வகையான தொழில் நிறுவனங்கள், கடைகள் இயங்கும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி நேற்று கடைகள் திறக்கப்பட்டன.

ஈரோட்டை பொறுத்தவரை ஜவுளிக்கடைகள் அதிக அளவில் உள்ளன. ஆனால் ஊரகப்பகுதிகளில் மட்டுமே ஜவுளிக்கடைகள் திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருப்பதால் ஈரோடு மாநகர் பகுதியில் ஜவுளிக்கடைகள் திறக்கவில்லை. குளிர்சாதன வசதி உள்ள கடைகளும் திறக்க தடை இருப்பதால் அவையும் திறக்கப்படவில்லை. மற்றபடி பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. ஈரோடு புது மஜீத் வீதி, கொங்கலம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன. ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு ஆகிய பகுதிகளில் ஒரு சில ஜவுளிக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.

டீக்கடைகளும் திறந்து இருந்தன. ஆனால், வழக்கமாக வந்து குடிப்பதுபோன்று டீ குடிக்க முடியாது என்பதால் கடைகளில் கூட்டம் இல்லை. ஆஸ்பத்திரிகள், கடைகளில் இருந்து பார்சல் டீ வாங்க வருபவர்கள் மட்டுமே வந்தனர். இதனால் டீக்கடைகள் வெறிச்சோடியே இருந்தன.

ஒரு சில அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகள் தவிர்த்து மற்ற கடைகள் திறந்து இருந்தாலும் விற்பனை இல்லாமல் உரிமையாளர்கள் பொதுமக்களை எதிர்பார்த்து காத்து இருந்தனர். ஆனால் வழக்கத்தைவிட வாகனங்கள் அதிகமாக சென்றன. பயணிகள் பஸ், வாடகைக்கார், வாடகை ஆட்டோ தவிர்த்து மற்ற வாகனங்கள் சென்றன.

போக்குவரத்தை கட்டுப்படுத்த ஏற்கனவே போலீசார் ஏற்படுத்திய தடுப்பு வேலிகள் அப்படியே ஆங்காங்கே உள்ளன. இதனால் அந்த பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் இருந்தனர். பொதுமக்கள் தடையின்றி வாகனங்களிலும், நடந்தும் சென்றனர்.

இந்த நிலையில் மேலும் சிறிய அளவிலான கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டு உள்ளது. இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறும்போது, “சிறிய அளவிலான ஜவுளிக்கடைகளை ஊரகப்பகுதிகளில் திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. ஆனால், நகர்ப்பகுதிகளில் திறக்க அனுமதிக்கவில்லை. இது சிறிய வியாபாரிகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த 2 மாதமாக கடைகளுக்கு வாடகை செலுத்த வேண்டும். குடும்பம் நடத்த வேண்டும். தொழிலுக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த வேண்டும் என்று பல பிரச்சினைகள் உள்ளன. இந்தநிலையில் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் சிறிய ஜவுளிக்கடைகளையும் திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். அதில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தலாம்.

சிறு வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றார். பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன், எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சரவண பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

லாரிகள் ஓடாததால் ஈரோட்டில் ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஜவுளிகள், மஞ்சள், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஈரோடு பகுதிகளில் 74 லாரி புக்கிங் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறன. ஈரோட்டில் புக்கிங் செய்யப்படும் பொருட்கள் லாரிகள் மூலம் கர்நாடகா, டெல்லி, ஆந்திரா, கேரளா, பஞ்சாப், ஒடிசா, மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளி, அதனை சார்ந்த ஆயத்த ஆடைகள் ஆகியவற்றுக்கு தேவையான மூலப்பொருட்களும் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஈரோட்டில் உள்ள புக்கிங் அலுவலகங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 50 நாட்களாக லாரிகள் ஓடாததால் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு லாரி புக்கிங் ஏஜெண்ட் அசோசியேசன் துணைச்செயலாளர் கே.குமார் கூறியதாவது:-

ஈரோடு மற்றும் ஈரோடு வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு தினசரி மஞ்சள், ஜவுளி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் லாரிகள் மூலமாக அனுப்பப்படுகிறது. மேலும் இதனை சார்ந்த மூலப்பொருட்களும் ஈரோட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி 7 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான மஞ்சள், ஜவுளி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த 50 நாட்களாக தொடர்ந்து லாரிகள் ஓடாததால் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜவுளி, எண்ணெய் உற்பத்தி, விற்பனை முடங்கி கிடப்பதாலும், டிரைவர்கள் கிடைக்காததாலும், வெளி மாநிலங்களுக்கு சென்ற லாரிகள் அங்கேயே நிறுத்தப்பட்டு உள்ளதாலும் தொடர்ந்து லாரிகளை இயக்க முடிவதில்லை. இதன் காரணமாக பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே எங்களுக்கு நிவாரண உதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஈரோடு அரசு மகளிர் பள்ளியில் செயல்படும் உழவர் சந்தையில் விவசாயிகள் வருகை குறைந்தது
ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் தற்காலிக உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டபோது இங்கு கடுமையான நெரிசல் இருந்தது. ஆனால் நாளடைவில் பொதுமக்கள் வருகை குறைந்தது. இதனால் விவசாயிகள் தாங்கள் அன்றாடம் கொண்டு வரும் பொருட்களைக்கூட முழுமையாக விற்பனை செய்ய முடியாமல் திரும்ப எடுத்துச்சென்றனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் வருகை மிகவும் குறைந்து உள்ளது.

மேலும், பொதுமக்களும் குறைந்த அளவிலேயே வருகிறார்கள். இது குறித்து விவசாயி ஒருவர் கூறும்போது, “முதலில் பெரியார் நகர், சம்பத் நகர் என்று 2 இடங்களில் உழவர் சந்தை கூடி வந்தது. இந்த 2 பகுதிகளும் நெரிசலான குடியிருப்புகள் என்பதால் தினமும் காலையில் நடை பயிற்சி செல்பவர்கள் சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிச்செல்வார்கள். இதனால் விவசாயிகளுக்கு நிரந்தர விற்பனை இருக்கும். ஆனால் இப்போது சந்தை அமைக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு அப்படி யாரும் வருவதில்லை. ஆங்காங்கே காய்கறிக்கடைகள் செயல்பட்டு வருவதால் விவசாயிகளின் வழக்கமான வாடிக்கையாளர்களும் வருவதில்லை. இது விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது ஈரோட்டில் அனைத்து வகையான கடைகளையும் திறக்க அரசு உத்தரவிட்டு இருக்கிறது. எனவே சம்பத் நகர், பெரியார் நகர் உழவர் சந்தைகளை சுத்தம் செய்து, போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, உழவர் சந்தைகளை செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும். இல்லை என்றால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும்”, என்றார்.

தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் 290 பேர் தங்க வைப்பு
வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் தங்கி இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்பும் தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி வெளியூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புபவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் வரை தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 15 முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நேற்று முன்தினம் வரை ஈரோட்டில் 33 பேர், மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடியில் 20 பேர், பெருந்துறை மற்றும் சென்னிமலையில் 54 பேர், பவானியில் 16 பேர், கோபியில் 29 பேர், நம்பியூரில் ஒருவர், டி.என்.பாளையத்தில் 21 பேர், சத்தியமங்கலத்தில் 35 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 290 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இதில் 87 பேருக்கு சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஊரடங்கு உத்தரவு தளர்வு: சங்கராபுரம், சின்னசேலத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை தமிழக அரசு நேற்று முதல் அமல் படுத்தி உள்ளது. அதன்படி டீ கடைகள், பேக்கரி கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை திறக்கலாம் என்றும். கடைக்கு வரும் மக்களுக்கு சமூக இடைவெளி விட்டு பார்சல்களை மட்டும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், சின்னசேலம் பகுதியில் டீ கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் நேற்று காலை முதல் திறக்கப்பட்டன. கடைகளில் சமூக இடைவெளிவிட்டு வாங்கி செல்வதற்காக கோடுகள் வரையப்பட்டு உள்ளது. மேலும் டீ மற்றும் உணவு பொருட்கள் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. பொதுமக்கள் கடைக்குள் வரமுடியாதபடி கடைகள் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

தடுப்புகள் அகற்றம்

பெரிய வர்த்தக நிறுவன கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் நகரில் இயல்பு வாழ்க்கை திரும்புகிறது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர். பொருட்கள் வாங்க இருசக்கர வாகனங்கள், கார்களில் பொதுமக்கள் முக்கிய சாலைகளில் திரண்டனர். இதனால் ஊரடங்கு நீங்கியதுபோல் சங்கராபுரம், சின்னசேலம் நகரம் காட்சி அளிக்க தொடங்கி உள்ளது.

இந்நிலையில் சின்னசேலம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சேலம் மெயின் ரோட்டில் பழைய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, அந்த வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அதன் பிறகு போக்குவரத்து நெரிசல் சரிசெய்யப்பட்டது.

மகாராஷ்டிராவில் தவித்த விழுப்புரம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த 77 பேர் மீட்பு
கொரோனா ஊரடங்கால் மகாராஷ்டிராவில் சிக்கி தவித்து வந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களை அம்மாநில அரசுடன் பேசி பஸ் மூலமாக தமிழகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 38 பேர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 39 பேர் என மொத்தம் 77 பேர் மீட்கப்பட்டு பஸ்கள் மூலமாக மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் இருந்து தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்கள் கர்நாடக மாநிலம் வழியாக கிருஷ்ணகிரிக்கு வந்தடைந்தனர். பின்னர் விழுப்புரம் மாவட்ட அரசு அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அவர்களை மாநில எல்லையில் வைத்தே காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறிகள் உள்ளனவா? என்று சோதனை செய்தனர். அதன் பிறகு அவர்களை அங்கிருந்து சிறப்பு பஸ்கள் மூலமாக சேலம் வழியாக விழுப்புரத்திற்கு அழைத்து வந்தனர்.

கொரோனா பரிசோதனை செய்ய முடிவு

தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 38 பேரை விழுப்புரம் முத்தாம்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மையத்தில் தங்க வைத்து உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 38 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் அடிப்படையில் 14 நாட்கள் தங்க வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 39 பேரை அம்மாவட்ட நிர்வாகத்திடம் பேசி அங்கு அனுப்பி வைத்துள்ளோம் என்றனர்.

கன்னியாகுமரி கடல் பகுதியில் நின்ற மர்ம கப்பலால் பரபரப்பு
கன்னியாகுமரி கடல் பகுதியில் நின்ற மர்ம கப்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

மர்ம கப்பல்

கன்னியாகுமரி கடலில் கடந்த 4 நாட்களாக மர்ம கப்பல் நின்றது. அதாவது, காந்தி மண்டபத்துக்கு பின்புறம் சில கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் தொடர்ந்து நின்றதால் கடற்கரை பகுதியில் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார், இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் நவீன படகில் கடலுக்குள் சென்றனர். அங்கு சரக்குகளுடன் ஒரு கப்பல் நின்றது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கொச்சியில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் நோக்கி புறப்பட்ட சரக்கு கப்பல், என்ஜின் கோளாறால் நடுக்கடலில் பழுதாகி நின்றது தெரிய வந்தது.

பரபரப்பு

அப்போது, அந்த கப்பலில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். பழுதை சரி செய்த பிறகு கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு புறப்படும் என்று கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஊழியர்கள் தெரிவித்தனர். மேலும் அந்த கப்பலில் 30-க்கும் மேற்பட்டோர் இருப்பதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீண்டும் கடற்கரைக்கு திரும்பினர். இதன் பிறகு, கொரோனா சமயத்தில் கன்னியாகுமரி கடல் பகுதியில் நின்ற மர்ம கப்பல் பரபரப்பும் முடிவுக்கு வந்தது.

மாலத்தீவில் இருந்து கப்பலில் வந்தகுமரியை சேர்ந்த 147 பேர் விடுதிகளில் தங்க வைப்புகொரோனா பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பு
மாலத்தீவில் இருந்து கப்பலில் கொச்சிக்கு வந்த குமரியை சேர்ந்த 147 பேர் தமிழக-கேரள எல்லையில் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரிசோதனை முடிவு வந்த பின்பே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கப்பலில் கொண்டு வரப்பட்டனர்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிர் பலி வாங்கி வருகிறது. இதனால், விமானம் உள்பட அனைத்துவகை போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. வேலை நிமித்தமாக பல்வேறு நாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் சொந்த ஊர்களுக்கு வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்டு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

மாலத்தீவில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு கப்பல்படைக்கு சொந்தமான ஒரு கப்பலை அனுப்பி வைத்தது. அந்த கப்பல் அங்கிருந்து தமிழர்கள் உள்பட 698 பேருடன் நேற்று முன்தினம் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு வந்தது. அதில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 147 பேர் வந்திருந்தனர். அவர்களை கொச்சியில் இருந்து கன்னியாகுமரிக்கு அழைத்து வர தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 7 அரசு பஸ்கள் மற்றும் 5 கார்கள் குமரி மாவட்டத்தில் இருந்து கொச்சி துறைமுகத்திற்கு சென்றன.

விடுதிகளில் தங்க வைப்பு

அந்த வாகனங்கள் மூலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து குமரியை சேர்ந்த 147 பேர் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் தமிழக கேரள எல்லையான களியக்காவிளைக்கு கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து அந்த பயணிகளுக்கு களியக்காவிளை சோதனை சாவடியில் கொரோனா பரிசோதனை செய்ய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர், 29 ஆண்கள் மற்றும் 1 பெண் என 30 பேர் கொல்லங்கோடு அருகே கண்ணனாகம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலும், 3 பெண் உள்பட 57 பேர் களியக்காவிளையில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலும், மீதமுள்ள 60 பேர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியிலும் தங்க வைத்துள்ளனர். விடுதியை சுற்றி போலீசார் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட் களை அந்தந்த பகுதியை சேர்ந்த பேருராட்சி ஊழியர்கள் கவச உடை அணிந்து வழங்கி வருகிறார்கள். விடுதி அமைந்துள்ள பகுதிகளில் கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டு வருகிறது.

காத்திருப்பு

அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் வர 3 நாட்கள் ஆகும். அதுவரை பயணிகள் அனைவரையும் தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டு இருப்பார்கள். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படும் நபர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்படுவார்கள். மற்ற நபர்களை அவரவர்களின் வீடுகளில் சுயகட்டுபாடுடன் தங்கி இருக்க அறிவுறுத்தி அனுப்பி வைக்க படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து விடுதிகளில் தங்கி இருப்பவர்கள் தங்களது பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

47 நாட்களுக்கு பிறகு அனுமதி:குமரியில் கிராமம் முதல் நகரம் வரை பரபரப்புடன் இயங்கிய கடைகள்
47 நாட்களுக்கு பிறகு குமரியில் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் நேற்று கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஊரடங்குக்கு முந்தைய நிலை திரும்பியதை போன்ற உணர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு அனுமதி

கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3-வது கட்டமாக 17-ந் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட் கள் கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதற்காக மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கப்பட்டன. இதேபோல் பால் கடைகள், ஓட்டல்கள் (பார்சல்கள் மட்டும்) போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் திறக்க அனுமதிக்கப்பட்டன. மருந்து கடைகள் நாள் முழுவதும் திறந்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் 45 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சிறு, சிறு தொழிற்சாலைகள், தனிக்கடைகள் ஆகியவை திறக்க அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில் மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு 34 வகையான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதித்தது. இந்த தளர்விலும், மால்கள், வணிக வளாகங்கள், அவற்றில் செயல்படும் கடைகள், முடி திருத்தகம், அழகு நிலையங்கள்,

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட நகைக்கடைகள், துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், பீடா கடைகள் ஆகியவை செயல்பட அனுமதியில்லை.

டீக்கடைகள் திறப்பு

காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும், இதர தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

தளர்வில், டீக் கடைகள் (பார்சல் மட்டும்), கண் கண்ணாடி விற்பனையகங்கள், கண் கண்ணாடி பழுது பார்க்கும் கடைகள், குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக்கடைகள் போன்றவை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று டீக்கடைகள் காலை 10 மணிக்கு பிறகு திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், காலை 6 மணியில் இருந்தே இந்த கடைகள் செயல்பட தொடங்கியது. கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் டீக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பார்சல் டீ மட்டுமே வழங்கப்பட்டன.

47 நாட்களுக்கு பிறகு...

குமரியில் பட்டி தொட்டி முதல் நகரம் வரை டீக்கடைகள் அதிகம். இன்னும் சொல்லப்போனால், தெருக்கள்தோறும் டீக்கடைகள் இருக்கும். கொரோனா ஊரடங்கால் டீக்கடைகள் அடைக்கப்பட்டன. டீக்கடைகள் திறந்தால், கொரோனா ஊரடங்கு தோல்வியில் முடியும் என்பது அரசின் கருத்தாக இருந்தது.

இதனால் ஊரடங்கின் முதல் தளர்விலும் டீக்கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் 47 நாட்களுக்கு பிறகு டீக்கடைகள் நேற்று செயல்பட்டதால் கொரோனா ஊரடங்கிற்கு முந்தைய நிலை திரும்பியதை போன்று உணர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதே சமயத்தில் குளச்சலில் டீக்கடைகள் திறக்கப்படவில்லை. ஒரு சில டீக்கடைகள் மட்டுமே செயல்பட்டன. பார்சல் மட்டும் கொடுப்பதால் டீ விற்பனை சரியாக நடைபெறாது என்று டீக்கடைக்காரர்கள் குற்றம்சாட்டினர். டீக்கடைகள், பெட்டிக்கடைகள், நகைக்கடைகள், சிறிய துணிக்கடைகள், இருசக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை கடைகள், பாத்திரக்கடைகள் போன்றவை நேற்று திறக்கப்பட்டதால் நாகர்கோவில் நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது.

முந்தைய நிலை

இதனால் நாகர்கோவில் கேப்ரோடு. கே.பி.ரோடு, இந்துக்கல்லூரி ரோடு, ஈத்தாமொழி ரோடு, ராஜாக்கமங்கலம் ரோடு, கன்னியாகுமரி ரோடு, பாலமோர் ரோடு, பி.டபிள்யூ.டி. ரோடு,

வெட்டூர்ணிமடம் ரோடு, வடசேரி ரோடு, அசம்பு ரோடு, கம்பளம் ரோடு, மீனாட்சிபுரம் என நகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் நேற்று காலை முதல் இரவு வரை இருந்தது.

சில சாலைகளில் காலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருந்தது.

இதனால் நாகர்கோவில் நகரில் கொரோனா ஊரடங்குக்கு முந்தைய இயல்பு நிலை திரும்பியதை காண முடிந்தது.

கரூர் மாவட்டத்தில்வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
கரூர் மாவட்டத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெற்றிலை சாகுபடி

கரூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் பயிர் செய்யப்படுகின்றன. அவற்றுக்கு அடுத்த படியாக வெற்றிலையும், பரவலாக பயிரிடப்படுகிறது. மாவட்டத்தில் மாயனூர், கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமின்றி வேலாயுதம்பாளையம், புகளூர், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது.

கற்பூர ரகம், வெள்ளை பச்சை கொடி ரகம் உள்ளிட்டவை கரூர் மாவட்டத்தில் இருந்து தான் மற்ற மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காவிரி ஆற்றுப்படுகையில் சாகுபடி செய்யப்படும் வெற்றிலை 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். மேலும் வெற்றிலையை பாதுகாக்கவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மதிப்பு கூட்டு பொருள்

இது குறித்து வெற்றிலை விவசாயிகள் கூறுகையில், நாமக்கல் மாவட்டம் ப.வேலூரில் இருந்த வெற்றிலை ஆராய்ச்சி மையத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாவட்டம் சிறுகமணிக்கு மாற்றி விட்டார்கள். அதனை மாற்றி கரூர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். மேலும் தற்போது வெற்றிலையை பெரும்பாலான மக்கள் நேரிடையாக பயன்படுத்துவது இல்லை. இதனால் விற்பனை குறைந்து வருகிறது. மருத்துவ குணம் நிறைந்த வெற்றிலையை பயன்படுத்தும் வகையில் மதிப்பு கூட்டு பொருளாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றிலையில் ஏற்படும் வாடல் நோயை கட்டுப்படுத்த முறையாக நடவடிக்கை தேவை. ஓராண்டில் 65 நாட்கள் மட்டுமே வெற்றிலை விவசாயிகளுக்கு வேலை உள்ளது. ஆண்டு முழுவதும் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அவர்கள் கூறினார்கள்.

கரூரில் 80 சதவீத கடைகள் திறப்புசாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது
கரூர்,

கரூரில் நேற்று 80 சதவீத கடைகள் திறந்திருந்தன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

கடைகள் திறப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த 6-ந் தேதி முதல் ஏற்றுமதி நிறுவனங்கள், பஸ் கூண்டு கட்டும் பணிகள், கொசுவலை உற்பத்தி உள்ளிட்ட தொழில்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டதால் நகர்ப்புறங்களில் 30 சதவீத தொழிலாளர்களை கொண்டு அந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மேலும் சில தொழில்களுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று மாவட்டத்தில் சிறிய அளவிலான துணி கடைகள், பர்னிச்சர் கடைகள், மரக்கடைகள், நகைக்கடைகள், செல்போன் விற்பனை நிலையங்கள், பெயிண்ட் கடைகள், காலணி விற்பனை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்தன. இதனால் கோவை ரோடு, ஜவஹர் பஜார், காந்தி கிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் 80 சதவீத கடைகள் திறந்து இருந்ததால், சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

முக கவசம் அணிய அறிவுறுத்தல்

டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்பதால் பல டீ கடைகள் திறக்கப்படாமல் இருந்தன. குறைந்த அளவிலான டீ கடைகள் மட்டுமே திறந்திருந்தன. அந்த கடைகளிலும் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டதால் விற்பனை குறைவாகவே இருந்தது.

துணி கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட கடைகளுக்கு வருபவர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து, கைகளை சுத்தம் செய்த பின்னர் முக கவசம் அணிந்து கடைக்குள் வருமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டாலும் அனைத்து கடைகளிலும் குறைந்த அளவிலேயே விற்பனை நடைபெற்றது. சாலைகளில் அவ்வப்போது போலீசார் ஒலி பெருக்கி மூலம் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைப்பிடிக்க அறிவுறுத்தினர். வாழை மண்டியில் ஏலம் நடைபெற்றாலும், குறைவான அளவிலேயே வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. கொரோனா வைரஸ் பாதிப்பு, ஊரடங்கு அமல் போன்றவற்றை தொடர்ந்து, தற்போது பொதுமக்கள் கொஞ்சம், கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்புவதை காண முடிகிறது.

கூடலூர் அருகே, 2-வது நாளாக காட்டுயானை அட்டகாசம் - குடிசை வீடுகளை சேதப்படுத்தியது
கூடலூர்,

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி மேலம்பலம் ஆதிவாசி கிராமத்துக்குள் கடந்த சில நாட்களாக காட்டுயானை ஒன்று புகுந்து வருகிறது. தொடர்ந்து குடிசை வீடுகளை முற்றுகையிட்டு சேதப்படுத்துகிறது. நேற்று முன்தினம் சூடன் என்பவரது குடிசையை சேதப்படுத்திய காட்டுயானை, துதிக்கையை உள்ளே நுழைத்து அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வெளியே தூக்கி வீசி தின்றது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 2-வது நாளாக காட்டுயானை கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் கோலன், கேம்பி ஆகியோரது குடிசை வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இதனால் ஆதிவாசி மக்கள் பீதி அடைந்தனர். பின்னர் அனைவரும் ஒன்று திரண்டு வந்து, கூச்சலிட்டு காட்டுயானையை விரட்டியடித்தனர். அதன்பின்னர் காட்டுயானை அங்கிருந்து சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆதிவாசி மக்கள் கூறியதாவது:-

இந்த கிராமத்தில் பனியர் இன ஆதிவாசி மக்கள் 22 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் வசிக்கும் நிலத்துக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை. இதனால் குடிசைகளில் வாழ்ந்து வருகிறோம். கழிப்பறை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் கிடையாது. இதனால் காட்டுயானைகள் ஊருக்குள் அடிக்கடி வந்து குடிசை வீடுகளை சேதப்படுத்துகின்றன. கூலி வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு குடும்பத்தை நடத்தும் நிலையில், சேதம் அடைந்த குடிசைகளை சீரமைக்க எங்களிடம் பொருளாதார வசதி இல்லை.

இன்னும் 1 வாரத்தில் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்ய உள்ளது. ஆனால் குடிசைகளை தினமும் காட்டு யானைகள் சேதப்படுத்தி வருவதால், மழையில் நனைந்தவாறு வசிக்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே வனத்துறையினர் காட்டுயானைகள் கிராமத்துக்குள் வருவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட பிதிர்காடு பஜாருக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் குட்டியுடன் 5 காட்டுயானைகள் புகுந்தன. பின்னர் பாக்கு மரங்களை சாய்த்து, குருத்துகளை தின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர். அங்கு விடிய, விடிய முகாமிட்டு இருந்த காட்டு யானைகள், அதன்பிறகு வனத்துக்குள் சென்றன.

ஊட்டியில் தங்கியிருந்த வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் சொந்த ஊருக்கு பயணம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் சிக்கி தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியது. நீலகிரியில் வருவாய்த்துறையினர் சொந்த ஊர் செல்ல விரும்பும் வெளிமாநில தொழிலாளர்களிடம் விவரங்களை சேகரித்து அரசுக்கு அனுப்பினர்.

ஆனால் அரசிடம் இருந்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அனுப்புவது குறித்த உத்தரவு இதுவரை வரவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் அவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி கேட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களாக ஊட்டியில் சிக்கி தவித்த ராஜஸ்தான், பீகார் மாநிலத்தை சேர்ந்த 64 பேர் சொந்த ஊருக்கு தனி பஸ்சில் செல்ல தமிழக அரசிடம் இ-பாஸ் பெற விண்ணப்பித்தனர். அதனை தொடர்ந்து அவர்களது ஆதார் அடையாள அட்டை போன்ற ஆவணங்களை போலீசார் சரிபார்த்தனர். அவர்கள் தனித்தனியாக இ-பாஸ் பெற்றனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் இருந்து 64 பேர் ராஜஸ்தானுக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றனர். அதில் வெளிமாநில தொழிலாளர்களின் குடும்பத்தினர், குழந்தைகள் இருந்தனர்.

ஊரடங்கினால் கிடைத்த பலன்: ராமேசுவரத்தில் தூய்மையாக காட்சிதரும் அக்னி தீர்த்த கடற்கரை
புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் நீராடி விட்டு அதன் பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு அக்னிதீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள் தங்களது தோஷங்கள் நிவர்த்தியாக ஈர துணிகளை கடலில் வீசிச்செல்வது தொடர்கிறது.

இதையடுத்து கடலில் யாரும் துணிகளை வீசக்கூடாது, கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டிகளில்தான் துணிகளை போட வேண்டும் என ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் பெரும்பாலான பக்தர்கள் தொட்டிகளில் போடாமல் கடலில் வீசினர். இவ்வாறு பக்தர்கள் வீசிய துணிகள் கடல் மணலில் புதைந்தும், பாறையில் சிக்கியும் அதிகஅளவில் கிடந்தன.

இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. ராமேசுவரம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதனால் கடந்த 1½ மாதத்திற்கு மேலாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கோவில் ரத வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் உத்தரவின் பேரில் ராமேசுவரம் நகராட்சி ஆணையாளர் ராமர் மேற்பார்வையில் நகராட்சி பொறியாளர் சக்திவேல், நகராட்சி சுகாதார ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் அக்னிதீர்த்த கடற்கரை பகுதி முழுவதும் தூய்மை பணியாளர்களால் தினம் தினம் சுத்தம் செய்யப்பட்டு தற்போது தூய்மையான, அழகான கடற்கரையாக காட்சி தருகிறது. மேலும் கடலுக்குள் வீசிய துணிகளும் அகற்றப்பட்டுள்ளன.

இதுபற்றி நகராட்சி ஆணையாளர் ராமர் கூறியதாவது:-

ஊரடங்கினால் கிடைத்த பயனாக ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை மற்றும் கடலில் கிடந்த துணிகள் அனைத்தும் அகற்றப்பட்டு அந்த பகுதி முழுவதும் தூய்மையாக காட்சியளித்து வருகிறது.

ஊரடங்கு முடிந்து வழக்கம்போல் பக்தர்கள் அக்னிதீர்த்த கடலில் நீராட வந்தாலும் தயவு செய்து கடலில் யாரும் துணிகளை வீச வேண்டாம். கடல் மற்றும் கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பக்தர்களும், பொது மக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நிவாரணத்தொகை வழங்கக்கோரி தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை ஆட்டோ டிரைவர்கள் முற்றுகை
சேலம்,

சேலம் கோரிமேடு பகுதியிலுள்ள மாவட்ட தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள், அரசு அறிவித்த நிவாரணத்தொகை மற்றும் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். அப்போது ஊரடங்கு 45 நாட்கள் கடந்த பிறகும் இதுவரை நிவாரணத்தொகை வழங்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அங்கிருந்த அதிகாரிகள், நலவாரியத்தில் பதிவு செய்த ஆட்டோ தொழிலாளர்களுக்கு படிப்படியாக நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இன்னும் சில நாட்களில் அனைவருக்கும் நிவாரணத்தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு செய்யப்படும் என்றும் உறுதியளித்தனர். இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து ஆட்டோ டிரைவர் செந்தில்குமார் என்பவர் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் சுமார் 10 ஆயிரம் ஆட்டோ டிரைவர்கள் உள்ளனர். நல வாரியத்தில் பதிவு செய்யாமல் சுமார் 5,000 ஆட்டோ டிரைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் ரேஷனில் 10 கிலோ அரிசி, துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய பொருட்கள் சுமார் 10 சதவீதம் ஆட்டோ டிரைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால், உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து நிவாரணத்தொகை விரைவில் வழங்கப்படும் என்று தெரிவிக்கின்றனர். என்றார்.

கொரோனா நிவாரண தொகை வழங்கக்கோரி ஆட்டோ டிரைவர்கள் தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாராசுரம் காய்கறி மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றம்பொதுமக்கள் கடும் அவதி
கும்பகோணம்,

தாராசுரம் காய்கறி மார்க்கெட் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

லாரி டிரைவருக்கு கொரோனா

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரத்தில் காய்கறி மார்க்கெட் அமைந்து உள்ளது. கும்பகோணம் நகராட்சியின் நிர்வாகத்தின் கீழ் இந்த மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஒரு வியாபாரிக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உருளைக்கிழங்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து லாரியை ஓட்டி வந்த டிரைவர் உள்பட 3 பேரை கடந்த 8-ந் தேதி நீலத்தநல்லூர் சோதனை சாவடியில் உள்ள சுகாதார குழுவினர் கொரோனா தொற்று உள்ளதா? என ஆய்வு செய்தனர். இதில் லாரி டிரைவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதி செய்யப்பட்டது.

காய்கறி மார்க்கெட் மாற்றம்

இதனால் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் வேலைபார்த்து வந்தவர்கள், காய்கறி வாங்க வந்த சில்லறை விற்பனையாளர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து காய்கறி மார்க்கெட் அன்று இரவோடு இரவாக மூடப்பட்டு கும்பகோணத்தை அடுத்த அம்மாப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்திற்கு நேற்று காலை மாற்றப்பட்டது.

நேற்று காலை முதல் அந்த இடத்தில் மார்க்கெட் இயங்கி வருகிறது. தாராசுரத்தில் இருந்த காய்கறி மார்க்கெட் அம்மாப்பேட்டை பைபாஸ் சாலைக்கு மாற்றப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர்.

நூற்றுக்கணக்கானோர் தொடர்பு

இந்த நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர் கடந்த 3 நாட்களாக தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் இருந்ததாகவும், அவருடன் தொடர்பில் நூற்றுக்கணக்கானோர் இருந்ததாவும் கூறப்படுகிறது.

இதனால் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து சென்றவர்கள், பல்வேறு கடை ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா பாதிப்பு பரவக்கூடும் என்பதால் உடனடியாக நேற்று காலை கொரோனா தொற்று ஆய்வு சிறப்பு முகாம் கும்பகோணம் காய்கறி மார்க்கெட் எதிரே அமைக்கப்பட்டது.

தனிமைப்படுத்தப்பட்டனர்

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட டிரைவருடன் பணியாற்றிய, பழகிய நபர்கள் சுமார் 75-க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்த, சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட அனைவரும் கொரோனா தொற்று பரவாவமல் இருக்க தஞ்சை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கும்பகோணத்தில் தினந்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைபார்த்து வந்த மார்க்கெட் வாகன டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கும்பகோணம் மக்கள் கவலையில் உள்ளனர்.

அரசு அனுமதித்தும் திறக்கப்படாத டீ கடைகள் “பார்சல் மட்டுமே வழங்குவது சாத்தியமில்லை என்கிறார்கள் ”
தஞ்சாவூர்,

அரசு அனுமதி வழங்கியும் தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு டீ கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. ‘பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவித்து இருப்பது சாத்தியமில்லை’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

டீ கடைகளுக்கு அனுமதி

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் அரசு 34 வகையான கடைகளை திறக்க நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது. அதில் ஒன்று டீ கடைகள்.

அதுவும் டீ கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அங்கு அமர்ந்து குடிக்கும் வகையில் யாருக்கும் வழங்கக்கூடாது. பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

திறக்கப்படவில்லை

அரசின் இந்த அறிவிப்பு கிராமப்பகுதிகளில் உள்ள டீ கடைகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். ஆனால் நகர பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இது சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கிறார்கள் டீ கடை உரிமையாளர்கள். இதனையடுத்து தஞ்சை மாநகரில் உள்ள பல டீ கடைகள் நேற்று திறக்கப்படவில்லை.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 47 நாட்களுக்கு பிறகு அறிவிப்பு விடுத்தாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகி விட்டது எங்களது நிலைமை என்று கூறிய டீக்கடைக்காரர்கள் தஞ்சை கொடிமரத்து மூலை, கீழராஜவீதி, பழைய பஸ் நிலையம், காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக்கடைகளை திறக்கவில்லை.

பார்சல் மட்டுமே சாத்தியமில்லை

இது குறித்து டீக்கடை நடத்தி வருபவர்கள் கூறுகையில், “பெரும்பாலும் சாலையோர டீ கடைகளில் டீ குடிக்க வருபவர்கள் அந்த வழியாக செல்பவர்கள் தான். அவர்கள் பார்சல் வாங்கிக்கொண்டு என்ன செய்வார்கள். டீ கடைகளுக்கு டீ குடிக்க வருபவர்கள் அங்கேயே தான் டீ குடிப்பார்கள்.

அப்படி இருக்கையில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவித்து இருப்பது சாத்தியமில்லை, டீ கடைகளில் டீ குடிக்கலாம் என கூறுவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடலாம்” என்றனர்.

நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு ரெயிலில் அனுப்பி வைக்க ஏற்பாடு
வள்ளியூர்,

நெல்லை மாவட்டத்தில் பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் நெல்லை பகுதியில் தங்கியிருந்து வியாபாரம், கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இதுதவிர கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா ஊரடங்கால் சிரமப்படும் இந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி வந்தனர். நெல்லை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த வாரம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமான பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து வடமாநில தொழிலாளர்களை உடனடியாக ரெயில் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு கூடங்குளம் தொழிலாளர்கள் 1,200 பேரை முதற்கட்டமாக ஒரு ரெயிலில் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இதையொட்டி நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை நேற்று ஆய்வு செய்தனர். அங்கு ரெயிலில் பயணம் செய்ய வருவோர் மட்டும் உள்ளே செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் வரிசையில் சமூக இடைவெளி விட்டு நிற்கும் வகையில் பெயிண்டு மூலம் கோடு வரையப்பட்டது.

இதுகுறித்து இன்பதுரை எம்.எல்.ஏ. கூறுகையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களை முதல் கட்டமாக 1,200 பேரை சிறப்பு ரெயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்-அமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ஊரடங்கால் நீதிமன்றங்கள் மூடல்: வருமானம் இன்றி தவிக்கும் இளம் வக்கீல்கள் - நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
திருச்செந்தூர்,

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் வக்கீல்களின் பங்கு மகத்தானது. தேசத்தந்தை மகாத்மா காந்தி, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கர், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மற்றும் பாலகங்காதர திலகர், ராஜாஜி, லாலா லஜபதிராய், மதன் மோகன் மாளவியா, மோதிலால் நேரு போன்ற எண்ணற்ற தலைவர்கள் வக்கீல்களாக தன்னலமற்று பணியாற்றியும், தேச விடுதலைக்காக போராடியும் வெற்றி கண்டனர்.

நமது நாட்டின் ஜனநாயகத்தை தாங்கும் நான்கு தூண்களில் சட்டம் இயற்றும் நாடாளுமன்றம், சட்டத்தை காக்கும் நீதிமன்றம், அரசு நிர்வாகம், ஊடகம் ஆகியவற்றில் நீதிமன்றம் சிறப்பான பங்களிப்பை வழங்குகிறது. நீதிமன்றத்தில் வழக்குதாரர்களுக்கு ஆதரவாக வாதாடும் வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை நுட்பமாக அறிந்து இருப்பதுடன் ஞாபகத்திறன், பகுத்தறியும் திறன், சிக்கலை தீர்க்கும் திறன் உள்ளிட்ட தனித்திறன்களுடன் விளங்குகின்றனர். மேலும், உலக நாடுகளின் தலைவர்களாக சிறந்து விளங்கிய ஆபிரகாம் லிங்கன், பராக் ஒபாமா, பில் கிளிண்டன் போன்றவர்களும் தலைசிறந்த வக்கீல்களாகவும் சேவையாற்றினர்.

வருமானம் இன்றி தவிப்பு

இந்தியாவில் சட்ட பல்கலைக்கழகங்களில் படித்த வக்கீல்கள், இந்திய பார் கவுன்சில் நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று, இளம் வக்கீல்களாக பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஊரிலும் வக்கீல்கள் சட்ட அலுவலகங்களை நடத்தி வருகின்றனர். அங்கு வரும் வழக்குதாரர்களுக்கு வழக்கின் தன்மையை எடுத்துரைத்து, போதிய ஆவணங்களை சேகரித்து, நீதிமன்றத்தில் பதிவு செய்து முறையிட்டு வாதாடி வந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டு உள்ளன. சில குறிப்பிட்ட அத்தியாவசிய வழக்குகளை மட்டும் ஆன்லைன் மூலம் பதிவு செய்து, அதனை நீதிபதிகள் காணொலிக்காட்சி மூலம் விசாரித்து வருகின்றனர். இதற்காக வக்கீல்களின் செல்போன்களில் ‘வித்யோ‘ என்ற பிரத்யேக செயலி நிறுவப்பட்டுள்ளது. அதன்மூலம் அத்தியாவசிய வழக்குகளை காணொலிக்காட்சி மூலம் நீதிபதிகள் விசாரிக்கின்றனர். ஊரடங்கு காரணமாக அனைத்து ஊர்களிலும் உள்ள வக்கீல்களின் சட்ட அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் இளம் வக்கீல்கள் போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருச்செந்தூர் வக்கீல்கள் சங்க துணைத்தலைவர் வக்கீல் முத்துகுமார் கூறியதாவது:–

நிவாரண உதவி

கொரோனா ஊரடங்கு காரணமாக, அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் சில குறிப்பிட்ட அத்தியாவசிய வழக்குகளை மட்டும் நீதிமன்ற நேரத்தில் காணொலிக்காட்சி மூலம் நீதிபதிகள் விசாரிக்கின்றனர். ஊரடங்கு காரணமாக தற்போது ஆன்லைன் மூலமே வழக்குகளை நீதிமன்றங்களில் பதிவு செய்து வருகிறோம். ஊரடங்கால், வக்கீல்களின் சட்ட அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான இளம் வக்கீல்கள் போதிய வருமானம் இல்லாமல் வாடும் நிலை உள்ளது.

எனவே, இளம் வக்கீல்களுக்கு அரசு போதிய நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும் ஊரடங்கால் நிலுவையில் உள்ள வழக்குகளும் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே ஊரடங்கு தளர்வின்போது, நீதிமன்றங்களை மீண்டும் திறக்க வேண்டும். அங்கு சுகாதாரமான முறையில் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்ற வக்கீல்கள் தயாராக உள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் சார்பிலும், அரசிடம் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

தூத்துக்குடியில் 47 நாட்களுக்கு பிறகு டீக்கடைகள் திறப்பு
தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இருந்து பல்வேறு தொழில்கள், கடைகள் செயல்பட விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதன்படி டீக்கடைகள் திறக்கப்பட்டு, பார்சல்கள் மட்டும் வழங்கலாம் என்று அரசு அறிவித்து உள்ளது.

பொதுவாக எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும் இடங்களில் டீக்கடை ஒன்றாகும். பலரும் நண்பர்களோடு பல கதைகளை பேசியபடி, டீயும், வடையும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இதனால் டீக்கடை திறப்பு என்ற அறிவிப்பு, டீக்கடை நடத்துபவர்களை போன்று, டீ விரும்பிகளுக்கும் அதிக மகிழ்ச்சியை தந்து உள்ளது.

இதனால் 47 நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் டீக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த கடைகளில் பலர் டீ பார்சல் வாங்கி சென்று குடித்து மகிழ்ந்தனர்.

இதேபோன்று பூக்கடைகள், பழக்கடைகள், சாலையோர கடைகள் உள்ளிட்ட அனைத்து விதமான கடைகளும் திறந்து இருப்பதாலும், தச்சு வேலை உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மும்முரமாக நடந்து வருவதாலும் மக்கள் நடமாட்டம் இயல்பு நிலைக்கு மாறி உள்ளது.

அதே நேரத்தில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகளும் தொடர்ந்து அறிவுறுத்தியபடி உள்ளனர். ஹெல்மெட் வழக்கு போன்று முககவசம் அபராதமும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 1,186 பேர் சிறப்பு ரெயில் மூலம் ஹவுராவுக்கு சென்றனர்
காட்பாடி,

கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வடமாநிலங்களை சேர்ந்த நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் ஊரடங்கு உத்தரவால் மிகவும் பாதிக்கப்பட்டனர். இவர்கள் வேலூரில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளில் தங்கி இருந்தனர்.

தங்களை சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்பக் கோரிக்கை வைத்தனர். அதன்படி வேலூரில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த வெளிமாநிலத்தவர்கள் குறித்து வேலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கெடுப்பு பணி நடந்தது. அதன் பின்னர் ஜார்கண்ட் மாநிலத்திற்கு 2 கட்டமாகவும், பீகார் மாநிலத்திற்கு நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் சிறப்பு ரெயில் மூலம் 3-வது கட்டமாகவும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து வேலூரில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்த மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த 1,186 பேரை 4-வது கட்டமாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி வேலூரில் பல்வேறு இடங்களில் தங்கியிருந்தவர்கள் அரசு சிறப்பு பஸ்கள் மூலம் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். காட்பாடி ரெயில் நிலையத்தில் அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது .

பின்னர் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, ரொட்டி, குடிநீர் பாட்டில்கள் அடங்கிய பை வழங்கப்பட்டது. நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் சமூக விலகலை கடைபிடித்தபடி காட்பாடி ரெயில் நிலையத்திற்குள் சென்று அங்கு 24 பெட்டிகளுடன் தயாராக இருந்த சிறப்பு ரெயிலில் ஏறி அமர்ந்தனர்.

பகல் 12 மணிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் ஆகியோர் அவர்களை வழியனுப்பி வைத்தனர். அப்போது வேலூர் உதவி கலெக்டர் கணேஷ், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் சிறப்பு ரெயில் காட்பாடியிலிருந்து ஹவுராவுக்கு புறப்பட்டு சென்றது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: வேலூர் மாவட்டத்தில் 47 நாட்களுக்கு பிறகு கடைகள் திறப்பு
வேலூர்,

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் படிப்படியாக தளர்வு மேற்கொண்டுள்ளது. அதன்படி டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை கடைகள், சிமெண்டு கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகள் நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளித்துள்ளது.

இந்த உத்தரவு வேலூர் மாவட்டத்துக்கு பொருந்தும் என கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்திருந்தார். அதன்படி வேலூர் மாவட்டத்தில் 47 நாட்கள் ஊரடங்குக்கு பிறகு நேற்று கடைகள் திறக்கப்பட்டன.

பல்வேறு இடங்களில் டீக்கடை, சாலையோர தள்ளுவண்டி ஒட்டல்கள், பேக்கரி கடை, பழக்கடை காலையிலேயே திறக்கப்பட்டன. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள் திறக்கப்பட்டன. பல நாட்களாக வீடுகளில் பயன்பாடு இன்றி வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததால் பல வாகனங்கள் இயங்காமல் பழுது ஏற்பட்டிருந்தது. நேற்று காலையிலேயே பலர் பழுது ஏற்பட்ட இருசக்கர வாகனங்களை பழுதுநீக்கும் கடைகளுக்கு உருட்டிச் சென்றனர்.

முடிதிருத்தும் நிலையங்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால் கடைகள் மூடப்பட்டிருந்தன. செல்போன் கடைகள் திறக்கப்பட்டிருந்ததால் அங்கும் மக்கள் கூட்டத்தை காணமுடிந்தது.

வெகுநாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் பலர் வீட்டை விட்டு வெளியே சென்று தேவையான பொருட்களை வாங்கினர். வேலூர் மாநகரில் நேற்று அதிகஅளவிலான பொதுமக்களின் நடமாட்டத்தை காணமுடிந்தது. பொதுமக்கள் வரத்து குறைவாக காணப்பட்டதாலும் இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பியது போல் வேலூர் மாநகர் காணப்பட்டது.

பொதுமக்களுக்கு பணத்தேவை அதிகம் தேவைப்பட்டதால் பணம் எடுக்க அவர்கள் வங்கி மற்றும் ஏ.டி.எம். மையங்களில் குவிந்தனர். அங்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதை காணமுடிந்தது. சில வங்கிகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாகவும் நின்றிருந்தனர்.

மாவட்டத்தில் சிறிய நகைக்கடைகள், பர்னீச்சர் கடைகள், சிறிய அளவிலான துணிக்கடைகளும் திறக்கப்பட்டிருந்தன. குளிர்சாதன வசதி கொண்ட பெரிய நகைக்கடைகள், ஜவுளி கடைகள் திறக்கப்படவில்லை.

நேதாஜி மார்க்கெட் தடை செய்யப்பட்ட பகுதி என்பதால் அங்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. ஏற்கனவே இருந்த கட்டுப்பாடுகள் அங்கு தொடர்ந்தன. சாரதி மாளிகையில் கடைகள் திறக்கப்படாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

டீ கடைகளில் பார்சல் மட்டுமே வழங்கப்பட்டன. சில கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் டீ குடிக்க அனுமதித்ததை காணமுடிந்தது. பிளாஸ்டிக் கப்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் பல கடைகளில் பொதுமக்களிடம் பாத்திரம் எடுத்து வருமாறு டீக்கடைக்காரர்கள் தெரிவித்தனர். ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த கட்டுப்பாடுகள் தளர்வால் கொரோனாவின் தாக்கம் வேகமெடுக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்தனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad