கொரோனா பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறை; கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற பார்மசிஸ்ட் நிபுணர் பலி
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கொரோனா பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகள்: மத்திய சுகாதாரத்துறைகொரோனாவால் பாதிக்கப்பட்டோரை டிஸ்சார்ஜ் செய்வது தொடர்பான திருத்தப்பட்ட வழிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. உலக அளவில் 80 சதவீத கொரோனா நோயாளிகள் லேசான பாதிப்பு உள்ளவர்களாகவும், மருத்துவமனையில் வைத்து பராமரிக்கும் அளவுக்கு தீவிர தொற்று உள்ளவர்களாக 20 சதவீதம் பேரும் உள்ளனர். கொரோனா அறிகுறி இருப்பதாக சந்தேகப்படும் நபரை அல்லது அவரது மருத்துவ பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் நபர் தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறையில் மாற்றம் செய்து தற்போது புதிய வழிகாட்டுதல் நெறிமுறையை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
டிஸ்சார்ஜ் செய்ய யார் தகுதியானவர்கள்?
* அறிகுறி இல்லை/ லேசான அறிகுறி உள்ளவர்கள் 3 நாட்களுக்கு காய்ச்சல் வரவில்லை என்றால் டிஸ்சார்ஜ்.
* அறிகுறி இல்லை என்றால் மறு பரிசோதனை தேவை இல்லை.
* வீடு திரும்பிய நபர் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
* டிஸ்சார்ஜ் ஆன பிறகு அறிகுறிகள் தென்பட்டால் 1075 என்ற எண்ணை அழைக்க வேண்டும்.
* மிதமான பாதிப்பு -ஆக்சிஜன் உதவி தேவையில்லை என்றால் டிஸ்சார்ஜ் செய்யலாம்.
* மிக கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைய வேண்டும்.
* தீவரமாக பாதிக்கப்பட்டவரை மீண்டும் பிசிஆர் சோதனைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யலாம்.
* முதல்கட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு காய்ச்சல் குணமானால் மறு பரிசோதனை தேவை இல்லை.
* அறிகுறியற்றவர்களை வீட்டிற்கு அனுப்பும் முன் பிசிஆர் சோதனை தேவையில்லை.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை 17,847 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1307 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முயன்ற பார்மசிஸ்ட் நிபுணர் பலி: சென்னையில் பரபரப்பு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சோடியம் நைட்ரேட் மூலமாக ரத்த அணுக்களை உற்பத்தி பெருக்கும் மாத்திரையை சோதனைக்காக தனக்கு தானே சாப்பிட்ட பார்மசிஸ்ட் நிபுணர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடி காலேஜ் ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர் சிவனேசன் (47). பார்மசிஸ்ட் நிபுணரான இவர், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் உள்ள சுஜாதா பயோ டெக் என்ற நிறுவனத்தில் புரோடக்ஷன் மேலாளராக வேலை செய்து வந்தார். இவர் சளி மற்றும் இருமலுக்கு மருந்து கண்டுபிடிப்பில் முக்கிய பங்காற்றியவர் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிர்ப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
சிவனேசன் மருந்து கண்டுபிடிப்பதில் நிபுணர் என்பதால் கொரோனா நோய் தொற்றுக்கு கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக சென்னை தி.நகரில் உள்ள தனது நண்பர் டாக்டர் ராஜ்குமார் வீட்டில் சோதனை மேற்கொண்டு வந்தார். இரவு பகலாக சிவனேசன் தனது வீட்டிற்கு செல்லாமல் மருந்து கண்டுபிடிப்பதிலேயே தீவிரம் காட்டி வந்தார். சோடியம் நைட்ரேட் மூலம் ரத்த அணுக்களின் உற்பத்தியை பெருக்க பல ஆய்வுகளை மேற்கொண்டார். ஆய்வுகளின் பலனாக ரத்த அணுக்கள் பெருக்கத்தால் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதை அவர் கண்டுபிடித்தார். இதனால் சோடியம் நைட்ரேட் மூலம் ரத்த அணுக்கள் பெருக்கும் மாத்திரையை அவர் உருவாக்கினார். இந்த மாத்திரையை பரிசோதனை செய்ய முயற்சி மேற்கொண்டார். அதன்படி சிவனேசன் நேற்று முன்தினம் மாலை 3.30 மணிக்கு தான் கண்டுபிடித்த சோடியம் நைட்ரேட் மூலம் ரத்த அணுக்களை உற்பத்தி செய்யும் மாத்திரையை முதல் முறையாக தனக்கு தானே அவர் பரிசோதனை செய்தார்.
அப்போது திடீரென மாத்திரையின் வீரியத்தால் பரிசோனை செய்த சிறிது நேரத்தில் சிவனேசன் மயக்க நிலையை அடைந்தார். அப்போது உடன் இருந்த டாக்டர் செய்வது தெரியாமல் தவித்தார். உடனே மயக்கமடைந்த சிவனேசனை அவரது நண்பர் தி.நகரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் மாலை 6 மணிக்கு உயிரிழந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசாருக்கு சிவனேசன் நண்பரான டாக்டர் ராஜ்குமார் புகார் அளித்தார். அதன்படி போலீசார் தனியார் மருந்துவமனையில் உயிரிழந்த சிவனேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் பன்நோக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சிவனேசன் பரிசோதனை செய்த ஆய்வகத்திற்கு போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சென்று அவர் பரிசோதனை செய்த மாத்திரை மற்றும் உபகரணங்களை கைப்பற்றி உடன் இருந்த அவரது நண்பரான டாக்டர் ராஜ்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கு கண்டுபிடித்த மருந்தை பரிசோதனை செய்த போது பார்மசிஸ்ட் நிபுணர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.