மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: தமிழகத்தில் ஊரடங்கு இருக்கா, இல்லையா? மதுப்பிரியர்கள் முக கவசம் அணிந்து குடையுடன் வர வேண்டும்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: தமிழகத்தில் ஊரடங்கு இருக்கா, இல்லையா?
உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் தொற்று பரவல் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ராக்கெட் வேகமெடுத்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட் மூலம் பல மாவட்டங்களுக்கு இந்த தொற்று சென்றடைந்துள்ளது. இது அரியலூர், கடலூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்ட நிர்வாகங்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. இது ஒருபுறம் இருக்க தமிழகத்தில் தற்போதைய சூழ்நிலையை பார்த்தால் ஊரடங்கு சட்டம் அமலில் உள்ளதா இல்லையா என்ற கேள்வியை எழச் செய்துள்ளது. அந்த அளவுக்கு இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பி விட்டனர். சில மாவட்டங்களில் மட்டும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மக்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. ஆனால் சென்னையை நினைத்தால் அடுத்து என்ன நடக்க போகிறதோ என்ற அச்சத்தை மக்கள் மனதில் உருவாக்கியுள்ளது.

ராக்கெட் வேகத்தில் சென்னையில் நோய் தொற்று பரவும் சூழ்நிலையில் கட்டுப்பாடுகளை இறுக்கி கட்டுப்படுத்த வேண்டிய தமிழக அரசு ஏனோ அலட்சியம் காட்டுவது மக்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு மக்கள் வெளியேறியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.  ஊரடங்கை இந்த அளவுக்கு தமிழக அரசு ஏன் தளர்த்தியுள்ளது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. ராக்கெட் வேகத்தில் பரவும் இந்த சூழ்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்பது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர டாஸ்மாக் கடைகள் திறப்பு என அடுத்தடுத்த நடவடிக்கைகள் மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியை போன்று தெளிவாக தெரிகிறது.

அதாவது இப்போதே மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டுகளில் படுக்கைகள் நிரம்பி வழிவதால் சாதாரணமாக இருப்பவர்களை வீடுகளில் இருந்தே சிகிச்சை எடுத்து கொள்ள அறிவுறுத்துகிறது. எனவே பலர் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகும் போது அவர்களுக்கெல்லாம் சிகிச்சை என்ற ஒன்று கிடைக்குமா? என்பதும், ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் சென்னையில் இந்த அளவுக்கு தளர்வை ஏற்படுத்தியுள்ளது ஒட்டு மொத்த தமிழக மக்களையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. அரசின் இந்த திடீர் தளர்வு குறித்து மக்களுக்கு உரிய விளக்கம் அளிப்பது அரசு நிர்வாகத்தின் கடமை என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகள் இன்று திறப்பு: மதுப்பிரியர்கள் முக கவசம் அணிந்து குடையுடன் வர வேண்டும்
டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்பட உள்ளதையொட்டி சமூக இடைவெளியை கடைபிடிக்க மதுப்பிரியர்கள் முக கவசம் அணிந்து குடையுடன் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த டோக்கன் முறை கடைபிடிக்கப்பட உள்ளது.

டாஸ்மாக் கடைகள்

கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் இன்று (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் டாஸ்மாக் கடைகளை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடைகளில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் அனைத்தும் மீண்டும் கடைகளுக்கு கொண்டு வரப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்புகள் அமைப்பு, வட்டம் வரைதல் உள்ளிட்ட பணிகளை டாஸ்மாக் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

குடையுடன் வர வேண்டும்

இந்த நிலையில் டாஸ்மாக் கடை திறப்பையொட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செங்கிஸ்கான் சில நடை முறைகளை பிறப்பித்துள்ளார். அதன்படி கடைக்கு வரும் மதுப்பிரியர்களுக்கு மதுபானங்கள் வழங்கப் படுவதற்கு முன்பு அவர்களுக்கு கிருமி நாசினியாக சோப்பு நீரால் கைகளை கழுவிய பின்பே மது பானங்கள் வழங்க வேண்டும். மதுப்பிரியர்கள் முக கவசம் அணிவதோடு குடை ஒன்றும் பயன்படுத்த வேண்டும். குடை மற்றும் முக கவசம் இல்லாமல் வரும் மதுப்பிரியர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது.

மதுபான விற்பனையின் போது கூட்டத்தினை கட்டுப்படுத்தவும், மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தவும் டோக்கன் முறையினை கடை பிடிக்க வேண்டும். மொத்தமாக மதுவிற்பனையை செய்யக்கூடாது. தவறும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட 13 வகையான நடைமுறைகளை அதில் கூறியுள்ளார்.

தடுப்புகள் அமைப்பு

இதற்கிடையில் கீரமங்கலம், ஆலங்குடி, வடகாடு, கணேஷ் நகர் உள்பட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 6 அடி இடைவெளிவிட்டு வரிசையில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

கள்ளழகர் நாளை மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார் - இணையதளம் மூலம் தரிசிக்கலாம்
மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா உலக புகழ் பெற்றது. அதில் மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் மீனாட்சி பட்டாபிஷேகம், மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவையும், கள்ளழகர் கோவிலில் நடைபெறும் விழாவில் எதிர்சேவை, வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குதல், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தல் உள்ளிட்டவை சிறப்பு வாய்ந்தவை. இந்த திருவிழாவை காண உள்ளூர், வெளியூர், வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஆனால் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீனாட்சி அம்மன் திருக்கல்யாண வைபவம் மட்டும் நடந்தது.

இதற்கிடையே கள்ளழகர் கோவிலில் கடந்த 3-ந் தேதி தொடங்க இருந்த சித்திரை திருவிழாவும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒருவேளை திட்டமிட்டபடி விழா நடந்து இருந்தால், மதுரை வந்து கள்ளழகர் இன்று (7- ந் தேதி) காலையில் வைகை ஆற்றில் எழுந்தருளி இருக்க வேண்டும்.

ஆனால் பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், பல்லாண்டு காலமாக நடைபெற்ற உலகப்புகழ் பெற்ற இத்திருவிழா இடைநில்லாமல் நடைபெறும் பொருட்டும் நாளை (8-ந்தேதி) கள்ளழகர், கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி மற்றும் புராணம் வாசித்தல் உள்ளிட்டவை மட்டும் பட்டாச்சாரியார்கள் மற்றும் பரிசாரகர்களால் உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி கோவிலின் உட்பிரகாரத்தில் நடத்தப்படுகிறது.

இதையொட்டி நாளை கள்ளழகர் கோவிலில் அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை விசுவரூப தரிசனம், பெருமாள் ஆண்டாள் சன்னதி முன்பு எழுந்தருளல், காலை 8 மணிக்கு கள்ளழகர் பெருமாளுக்கு எதிர்சேவை அலங்காரமும், 10 மணிக்கு குதிரை வாகன சேவையும், நண்பகல் 12 மணிக்கு சைத்ய உபசார சேவையும், மதியம் 1.30 மணிக்கு சேஷ வாகன சேவையும் நடக்கிறது.

பின்னர் 4.30 மணிக்கு கருட சேவையுடன் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்குதலும், மாலை 6.30 மணிக்கு புஷ்ப பல்லக்கு சேவையும், இரவு 8 மணிக்கு அழகர் இருப்பிடம் செல்லுதல் நிகழ்ச்சியும் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் திருக்கோவில் வளாகத்திற்குள்ளேயே ஆகம விதிப்படி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

மேலும் இந்த நிகழ்ச்சிகளில் பக்தர்கள் நேரடியாக கலந்து கொண்டு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்பதால் www.thh-r-ce.gov.in என்ற இணையதளம், youtu-be மற்றும் முகநூல் மூலமாகவும் நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்ப திருக்கோவில் நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவற்றின் மூலமாக கள்ளழகரை பக்தர்கள் தரிசிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad