பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காசி பேசும் ஆடியோ; திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் விஷ மாத்திரை கொடுத்து அழகுநிலைய பெண் கொலை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காசி பேசும் ஆடியோ வெளியிட்டது யார்? போலீஸ் விசாரணை
பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் காசி பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது. இதனை வெளியிட்டவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபாச படம்

நாகர்கோவில் கணேசபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர் பெண்களை ஆபாச படம் எடுத்தது, ஆபாச படத்தை காட்டி பணம் பறித்தது உள்ளிட்ட வழக்குகள் கோட்டார் மற்றும் நேசமணி நகர் ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவரால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் மற்றும் நேசமணி நகர் பகுதியை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே காசியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது டாக்டர் மற்றும் என்ஜினியர் ஆகியோரை மிரட்டி பணம் பறிப்பது போல பல பெண்களிடம் நெருங்கி பழகி பணம் மற்றும் நகையை காசி பறித்தது தெரியவந்தது. அதோடு அவர் மீது கந்து வட்டி மற்றும் மோசடி வழக்கும் பதிவாகியது. இதனால் காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நண்பர் கைது

இந்தநிலையில் காசி மீது மாணவி உள்பட மூன்று பெண்கள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதே சமயத்தில் போலீஸ் காவல் விசாரணையில், காசி பல தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து காசிக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பர் டேசன் ஜினோ (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 2 நண்பர்களை தேடி வருகிறார்கள்.

ஆடியோ

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காசி பேசியதாக எடிட் செய்யப்பட்ட ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் பெண்கள் உள்பட பல்வேறு நபர்களுடன் பேசுவது போன்று அந்த ஆடியோ உள்ளது. ஆனால் அதில் அவர் யாருடன் பேசுகிறார் என்ற விவரம் இல்லை. பெண்களை ஆபாசமாக பேசி மிரட்டுவதும், அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதுமாக இருந்தது.

அதாவது, பெண்ணை நீ வேண்டுமானால் பயன்படுத்திக் கொள் என்று நண்பர்களிடம் பேசுவதும் அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ளது. அதோடு அவர் கோபத்தில் பெண்களை தகாத வார்த்தையில் திட்டுவது போன்றும், “எனக்கு பணமும் தந்து ரோட்டுக்கு வந்து இருக்கிறார்கள். நமக்காக அந்த அளவு அடிமையாக உள்ளார்கள்“ என்று பேசுவது போலவும் ஆடியோ ஒலிபரப்பாகிறது. ஒவ்வொரு ஆடியோவிலும் காசி பேசுவது மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்த ஆடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.

கவனத்தை திசை திருப்ப...

ஆனால் இந்த ஆடியோக்களை வெளியிட்டது யார்? என்ற விவரம் தெரியவில்லை. காசி பற்றி புகார் அளித்து வரும் பெண்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த ஆடியோ வெளியிடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

காசி பயன்படுத்திய லேப்டாப், செல்போன், ஹார்ட்டிஸ்க் உள்ளிட்டவை போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அப்படி இருக்க எடிட் செய்யப்பட்ட ஆடியோ வெளியான சம்பவத்தின் பின்னணியில் காசியின் கூட்டாளிகள் யாரேனும் இருப்பார்களோ என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரி

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “காசி பேசியதாக வெளிவந்த ஆடியோவை அவரை பிடிக்காதவர்கள் யாரேனும் சமூக வலைதளங்களில் பரப்பி இருக்கலாம். மேலும் இந்த சம்பவத்தில் காசியின் கூட்டாளிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது பற்றி விசாரணை நடக்கிறது. காசி பலரிடம் பேசியதை ரிக்கார்டு செய்து வைத்துள்ளார். எனவே தற்போது வெளியான ஆடியோ யாருடன் பேசியது? எப்போது பேசியது? என்று சரியாக தெரியவில்லை. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது“ என்றார்.

திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் விஷ மாத்திரை கொடுத்து அழகுநிலைய பெண் கொலை
முத்தூரில் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்ததால் விஷ மாத்திரை கொடுத்து அழகுநிலைய பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதலனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் முத்தூர் பகுதியில் உள்ள பெருமாள்புதூரை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 37). இவர் முத்தூர்-கொடுமுடி சாலையில் மலையத்தாபாளையம் ஓடை அருகில் லேத் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சங்கீதா (33). இவர் தனது கணவரின் லேத் பட்டறைக்கு முன்புறம் அழகு நிலையமும், தையல் கடையும் வைத்து நடத்தி வந்தார். இந்த தம்பதிக்கு 12 வயதில் மகளும், 5 வயதில் மகனும் உள்ளனர்.

முத்தூர் ஹைஸ்கூல்மேட்டை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் விவேக் (28). இவர் கோவையில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் விவேக்குக்கும், சங்கீதாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதுபற்றி இருவரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரியவர அவர்கள் இருவரையும் கண்டித்தனர். இதனால் கள்ளக்காதல் ஜோடி இருவரும் கடந்த மார்ச் மாதம் தங்களது குடும்பத்தை விட்டு விட்டு புதுச்சேரிக்கு ஓடி விட்டனர். இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் அவர்கள் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருப்பதை அறிந்து உடனடியாக அங்கு சென்றனர். அங்கிருந்த அவர்கள் இருவரையும் மீட்டு முத்தூருக்கு போலீசார் அழைத்து வந்தனர். அதன்பின்பு இருதரப்பு வீட்டாரின் குடும்பத்தினர், உறவினர்கள் சமரச பேச்சுவார்த்தைக்கு பின்பு இருவரும் பிரிந்து தங்களது சொந்த வீட்டிற்கு சென்று தங்களது குடும்பத்தினருடன் வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விவேக்கும், சங்கீதாவும் மீண்டும் சந்தித்து கொண்டனர். இருவரும் மனம் விட்டு பேசினார்கள். அப்போது விவேக், சங்கீதாவிடம் உனது கணவரை விட்டு பிரிந்து வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் சங்கீதா விவேக்கை திருமணம் செய்வதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சங்கீதா தனது கணவர் யுவராஜ் மற்றும் மகன், மகளுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது இரவு 10.30 மணிக்கு வீட்டின் காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு சங்கீதாவின் கணவர் யுவராஜ் யாரது? என்று கேட்டுக்கொண்டே கதவைத் திறந்துள்ளார். அப்போது இரவு நேரத்தில் வெளியே நின்று கொண்டிருந்த விவேக், யுவராஜ் முகத்தில் திடீரென்று ஒரு குத்து விட்டார். இந்த திடீர் தாக்குதலில் நிலை குலைந்த யுவராஜ் அய்யோ! அம்மா! என்று அலறியடிபடி கீழே விழுந்தார். பின்னர் அவரை சரமாரியாக விவேக் தாக்கினார். யுவராஜின் மூக்கில் ரத்தம் வடிந்தது.

யுவராஜின் அலறல் சத்தம் கேட்டு சங்கீதாவும், மகளும் வெளியே ஓடி வந்தனர். உடனே சங்கீதாவின் மகளை மட்டும் வெளியே தள்ளி விட்டு சங்கீதாவை வீட்டிற்குள் வைத்து விவேக் கதவை பூட்டி கொண்டார்.

இதற்கிடையே வெளியே விழுந்த யுவராஜ் அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் வீட்டு கதவை தட்டினார். திறக்கப்படவில்லை. பின்னர் வீட்டின் பின்புறம் உள்ள ஜன்னல் கதவை உடைத்து உள்ளே சென்றார்.

அங்கு வீட்டுக்குள் ரத்த வாந்தி எடுத்து சங்கீதா இறந்த நிலையில் கிடந்தார். அருகில் விவேக்கும் மயங்கி கிடந்தார். சங்கீதா அருகே சிறுவன் அழுது கொண்டே இருந்தான். மனைவி இறந்ததை அறிந்து யுவராஜ் கதறி அழுதார்.

உடனே அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், விவேக்கை சரமாரியாக அடித்து உதைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வெள்ளகோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அங்கு இறந்து கிடந்த சங்கீதாவின் உடலை மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த விவேக்கை சிகிச்சைக்காக மற்றொரு ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீசார் நடத்திய விசாரணையில், யுவராஜை தாக்கி விட்டு வீட்டுக்குள் நுழைந்த விவேக், சங்கீதாவிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டி இருக்கிறார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து உள்ளார். உடனே தான் கொண்டு வந்த விஷ மாத்திரையை அவரது மகன் கண் முன் சங்கீதாவின் வாயில் திணித்து உள்ளார். அவர் தின்பதற்கு மறுத்து உள்ளார். உடனே சங்கீதாவின் கழுத்தை நெரித்து விஷ மாத்திரையை விழுங்க வைத்து உள்ளார். சிறிது நேரத்தில் சங்கீதாவின் மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து உள்ளது. அவர் ரத்த வாந்தி எடுத்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து விட்டார்.

பின்னர் காதலியே இறந்து விட்டாள். நாம் இருந்து என்ன பயன் என்று நினைத்த விவேக் தான் கொண்டு சென்ற விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதில் மயங்கி விழுந்த அவரை, ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த பொதுமக்கள் அடித்து உதைத்து உள்ளனர். தற்போது அவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிய வருகிறது.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் இதுபற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் முத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாலாஜா அருகே கிணற்றுக்குள் லாரி பாய்ந்து கல்லூரி மாணவர் பலி
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த குடிமல்லூர் கிராமத்தில் தங்கவேலு என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் சாலையையொட்டி உள்ளது. நிலத்தில் 60 அடி ஆழ கிணறும் உள்ளது. நேற்று மாலை டிப்பர் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. தங்கவேலுவின் விவசாய நிலம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென கிணற்றுக்குள் பாய்ந்தது. தகவல் அறிந்த வாலாஜா போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த லாரியில் வன்னிவேடு பகுதியை சேர்ந்த கோபி (வயது 23), அஜித்குமார் (21), சிவக்குமார் (17), நவீன் (18) ஆகிய 4 பேர் வந்துள்ளனர். இதில் கோபி, அஜித்குமார், சிவக்குமார் ஆகிய 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மற்றொருவரான நவீன் லாரிக்குள்ளேயே இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து லாரியின் கதவை உடைத்து அவரை மீட்புக்குழுவினர் மீட்டனர். பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் கிணற்றுக்குள் பாய்ந்து கிடந்த லாரியும் மீட்கப்பட்டது.

விசாரணையில் இறந்து கிடந்த நவீன் ஆற்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது பிடிக்காமல்பட்டதாரி பெண் விஷத்தை தின்று தற்கொலை
தஞ்சை அருகே திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது பிடிக்காமல் பட்டதாரி பெண் விஷத்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

பட்டதாரி பெண்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள வளவநல்லூர் ரோட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராசு. விவசாயியான இவர், தஞ்சை மாவட்டம் குருங்குளம் கிழக்கு நாயக்கர் பட்டி சாலையில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் குடும்பத்தோடு தங்கி இருந்து வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகி விட்டது.இவருடைய 2-வது மகள் சிவரஞ்சனி (வயது22). பி.ஏ. பட்டதாரியான இவர் தனது பெற்றோருடன் விவசாய தோட்டத்திலேயே வசித்து வந்தார்.

சிவரஞ்சனி மேற்படிப்பு படிக்க விரும்பியதாக தெரிகிறது. ஆனால் அவருடைய பெற்றோர் சிவரஞ்சனிக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்திற்கு மாறாக குடும்ப சூழல் கருதி பெற்றோர் தனக்கு திருமணம் செய்ய முடிவு செய்தது சிவரஞ்சனிக்கு பிடிக்காமல் மனவருத்தத்தை அளித்துள்ளது.

விஷத்தை தின்று தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெற்றோர் வெளியே சென்றிருந்த போது வீட்டில் சிவரஞ்சனி குருணை மருந்தை(விஷம்) தின்று மயங்கி விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், சிவரஞ்சினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை அருகே பயங்கரம்: ஓமியோபதி டாக்டர் வெட்டிக்கொலை
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மேலபண்டாரபுரத்தை சேர்ந்தவர் சுயம்பு நாடார். இவருடைய மகன் திருப்பதி (வயது 37). ஓமியோபதி டாக்டர். இவர் திசையன்விளை மற்றும் சாத்தான்குளத்தில் ஓமியோபதி மருத்துவமனை நடத்தி வந்தார்.

நேற்று முன்தினம் இரவு இவர் திசையன்விளை மருத்துவமனையில் வேலை முடிந்ததும் அங்கிருந்து வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தார்.

இட்டமொழி-விஜயஅச்சம்பாடு விலக்கு அருகே சென்றபோது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள், திருப்பதியை வழிமறித்து தாக்கியதுடன் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து துடிதுடித்து இறந்தார்.

பின்னர் அவரது உடலை தரதரவென்று இழுத்து சென்று அருகில் உள்ள கிணற்றுக்குள் வீசினர். அதன் பிறகு அவரது மோட்டார் சைக்கிளையும் கிணற்றுக்குள் தள்ளிவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்த நிலையில் திருப்பதி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரை உறவினர்கள் தேடி சென்றனர். அப்போது இட்டமொழி-விஜயஅச்சம்பாடு ரோட்டில் ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டனர். அந்த ரத்தக்கறையை பின்தொடர்ந்து சென்றபோது, திருப்பதி கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் வீசப்பட்டு கிடந்தது தெரியவந்தது.

இதுபற்றி திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரதாப், அய்யப்பன், மகேஷ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

திசையன்விளை தீயணைப்பு படையினர், கிணற்றுக்குள் கிடந்த திருப்பதியின் உடலையும், மோட்டார் சைக்கிளையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரது உடல் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், திருப்பதியை கொலை செய்த மர்மநபர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி, அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

கொலை செய்யப்பட்ட திருப்பதிக்கு ஷீபா (30) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். அதில் 2-வது குழந்தை ஒரு மாதத்துக்கு முன்பு தான் பிறந்து உள்ளது. ஓமியோபதி டாக்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

கூடுவாஞ்சேரி அருகே, வேன் கிளனர் குத்திக்கொலை - பூ வியாபாரி கைது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சேலையூர் பாலாஜி நகர் நெல்லூரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 48), இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் கிளனராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சி தர்காஸ் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு விநாயகம் தனது நண்பர் ரகு என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

நேற்றுமுன்தினம் பகல் முழுவதும் தாய் வீட்டில் இருந்தார். பின்னர் இரவு தர்காஸ் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக பணிபுரியும் முத்துபாண்டி வீட்டுக்கு விநாயகம் மற்றும் அவரது நண்பர் ரகு இருவரும் சென்றனர்.

விநாயகம், ரகு, முத்துபாண்டி அவரது மகன் பூ வியாபாரி வாசு ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். பின்னர் விநாயகம், ரகு இருவரும் அங்கேயே படுத்து தூங்கி விட்டனர். நேற்று காலையில் விநாயகம், ரகு, முத்துபாண்டி, வாசு ஆகியோர் மீண்டும் மது குடித்தனர்.

விநாயகத்திற்கும், வாசுவுக் கும் ஏற்கனவே பணம் கொடுக் கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலை மது குடிக்கும்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த வாசு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விநாயகத்தின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து விநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த ரகு பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாந்தோப்பில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விநாயகத்தை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு காரணைப்புதுச்சேரி வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வாசுவை கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் கைது செய்தார். தொடர்ந்து வாசுவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மாணவிகளின் வாழ்க்கையை சீரழித்ததாக 3 வாலிபர்கள் மீது புகார் கூறி வலைதளங்களில் அவதூறு
மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவிகளை 3 வாலிபர்கள் தவறான வழியில் ஈடுபடுத்துவதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. அதில் அந்த வாலிபர்கள் தங்களது செல்போன் மற்றும் சிக்கன் கடைக்கு வரும் மாணவிகளிடம் பல்வேறு சலுகை கொடுப்பதாக கூறி செல்போன் எண்களை வாங்கி கொள்கிறார்கள். பின்னர் அந்த மாணவிகள் கொடுத்த எண் மூலம் அவர்களிடம் பேசியும், குறுஞ்செய்தி அனுப்பியும் அவர்களை தன்வசப்படுத்துகிறார்கள்.

பின்னர் அந்த மாணவிகளை ஊர் சுற்ற அழைத்து சென்று அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து அவர்களை சீரழிக்கிறார்கள். பின்னர் அதனை ரகசியமாக படம் எடுத்து அவர்களை மிரட்டி தவறான வழியில் பயன்படுத்துகிறார்கள். எனவே பெற்றோர்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

மேலும் இவ்வாறு செயல்படும் அந்த வாலிபர்களின் பெயர், செல்போன் எண் என்று அனைத்து தகவல்களையும் வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை அறிந்த சம்பந்தப்பட்ட வாலிபர்கள் தனித்தனியாக நேற்று காலை மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து தங்களை பற்றி அவதூறான தகவல்கள் வலைதளத்தில் பரப்பி விடப்படுவதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் கொடுத்த புகாருக்கு மனுரசீது கொடுத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் போலீசாரிடம் கேட்ட போது பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் இதுவரை எவ்வித புகாரும் கொடுக்கவில்லை. நாங்கள் விசாரணை நடத்தியதில் தொழில் போட்டி காரணமாக சிலர் இந்த செயலை செய்துள்ளதாக தெரியவருகிறது. அவர்கள் யார் என்பதை விசாரித்து வருகிறோம் என்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad