பங்குச் சந்தை மோகம்: காப்பீட்டு முகவரை கொன்று எரித்த நண்பர்கள்; சொந்த ஊருக்கு நடந்து சென்ற இளைஞர் பசியால் உயிரிழப்பு;

பங்குச் சந்தை மோகம்: காப்பீட்டு முகவரை கொன்று எரித்த நண்பர்கள்
பங்குச் சந்தை மோகத்தில் காப்பீட்டு முகவர்களான நண்பர்களுக்குள் எழுந்த மனகசப்பு, ஒருவரை கொன்ற எரிக்கும் அளவிற்கு வஞ்சம் தீர்க்கும் செயலாக மாறிய சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.

மதுரை மஹால் முதல் தெருவை சேர்ந்தவர் 53 வயதான சிவக்குமார். காப்பீடு நிறுவனம் ஒன்றின் முகவராக பணியாற்றி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானலில் நடந்த காப்பீடு முகவர்களுக்கான கூட்டத்தில் மதுரையை சேர்ந்த விக்னேஷ்வாதிக் என்பவருடன் சிவக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு பரஸ்பரம் அறிமுகம் ஆன அவர்கள்,  தொழிலில் முன்னேற்றம் காண்பது குறித்து ஆலோசித்துள்ளனர். அப்போது பங்கு சந்தை முதலீடு குறித்து சிவக்குமாரிடம் விக்னேஷ்வாதிக் விளக்கியுள்ளார். அதில் கவர்ந்த சிவக்குமார், 5 லட்சம் ரூபாய் கொடுத்து தனது பெயரில் பங்கு சந்தையில் முதலீடு செய்ய கூறியுள்ளார். அதனடிப்படையில் சிவக்குமார் பெயரில் முதலீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான பரிவர்த்தனைகளை விக்னேஷ்வாதிக் கவனித்துள்ளார்.

இதற்கிடையில் பங்கு சந்தையில் இழப்பு ஏற்பட்டதாகவும், அதில் சிவக்குமாரின் பணம் இழப்பை சந்தித்ததாக விக்னேஷ்வாதிக் கூறியுள்ளார். அதை ஏற்க மறுத்த சிவக்குமார், தனது பணத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு விக்னேஷ்வாதிக்கை எச்சரித்துள்ளார். பல மாதங்களாக நீடித்த இந்த பிரச்னையில், சிவக்குமார் மூலம் விக்னேஷ்வாதிக்கிற்கு நெருக்கடி தரப்பட்டுள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த விக்னேஷ்வாதிக், சில ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் நடந்த காப்பீடு முகவர்கள் கூட்டத்தில் பங்கேற்று தனக்கு நண்பராக அறிமுகமான திண்டுக்கல்லை சேர்ந்த கணேஷ்பாபு என்பவரிடம் விபரத்தை கூறியுள்ளார். சிவக்குமாரை மிரட்டி தன்னை காப்பாற்று கூறியுள்ளார்;அதற்காக பணம் தருவதாகவும் கூறியுள்ளார். அதன் படி இருவரும் திட்டமிட்டு இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த சிவக்குமாரை விக்னேஷ்வாதிக் சந்தித்துள்ளார். தனது நண்பர் ஒருவர் பணம் தர இருப்பதாகவும், நேரில் வந்து அதை பெற்றுக் கொள்ளுமாறு கூறி சிவக்குமாரை பைக்கில் அழைத்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் பைக்கில் சமயநல்லூர் வந்து சேர, மறுமுனையில் திண்டுக்கல்லில் இருந்து காரில் வந்த கணேஷ்பாபு, அவர்கள் இருவரையும் சந்தித்துள்ளார்.

பணத்தை  சாலையில் வைத்து தர வேண்டாம் மறைவான இடத்திற்கு போகலாம் என முட்புதரான பகுதிக்கு சிவக்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்றதும், மறைத்து வைத்திருந்திருந்த கத்தியை காட்டி சிவக்குமாரை மிரட்டியுள்ளனர். பதிலுக்கு சிவக்குமார் தகராறு செய்ய ஆத்திரமடைந்த கணேஷ்பாபு, கத்தியால் சிவக்குமாரை குத்த, விக்னேஷ்வாதிக் அவருக்கு உதவியுள்ளார். ரத்த வெள்ளத்தில் விழுந்த சிவக்குமாரை அடையாளம் தெரியாத பிணமாக மாற்ற முடிவு செய்த இருவரும் அருகில் இருந்த அம்மி கல்லை எடுத்து சிவக்குமாரின் முகத்தை சிதைத்தனர். எந்த தடயமும் இருக்க கூடாது என்பதற்காக பெட்ரோலை ஊற்றி சடலத்திற்கு தீ மூட்டி தப்பினர்.

சடலம் முழுமையாக எரியாமல் அணைந்த நிலையில் தகவல் அறிந்து அங்கு வந்த சமயநல்லூர் போலீசார் சடலத்தை சோதனையிட்ட போது சிவக்குமாரின் ஆதார் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருப்பதை அறிந்தனர். அவரது வீட்டில் சென்று விசாரித்த போது விக்னேஷ்வாதிக் அவரை அழைத்துச் சென்றதை வீட்டார் கூறியதால் அவரை மடக்கி பிடித்து குற்றவாளிகள் இருவரையும் கைது செய்தனர். தொழிலில் முன்னேற வேண்டும் என்பதற்காக நண்பருடன் சேர்ந்த பங்கு சந்தை மோகத்தில் களமிறங்கி காப்பீடு முகவர் , சக நண்பரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த ஊருக்கு நடந்து சென்ற இளைஞர் பசியால் உயிரிழப்பு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் சொந்த ஊருக்கு நடந்து சென்ற வடமாநில இளைஞர் பசியால் உயிரிழந்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 144 ஊரடங்கு காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் வடமாநிலத்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் சாரைசாரையாக சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஒரிசா, பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட பகுதிகளுக்கு நடந்தும் சைக்கிள் மார்க்கமாகவும் பயணித்து வருகின்றனர்.

இந்நிலையில் பயணிக்கும் வடமாநில  இளைஞர்களை தமிழக ஆந்திர எல்லையான பனங்காடு பகுதியில் ஆந்திர போலீசார் வரவிடாமல் தடுத்து நிறுத்தியும் தடியடி  நடத்தியும் அவர்களை தமிழகத்தை நோக்கி அனுப்பி வைக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து இன்று அதிகாலை சென்னை போரூரில் இருந்து கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வந்த வடமாநில இளைஞர் ஒருவர் நடந்து உணவில்லாமல் கவரப்பேட்டை  பஜார் பகுதியில் வந்துள்ளார். உடலின் சோர்வு காணமாக  கடை அருகே மயக்க நிலையில் இருந்துள்ளார்.

இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று உணவு தண்ணீர் அளிப்பதற்காக எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் உடல் அசைவு ஏதும் இல்லாததால் அருகே இருந்த மருத்துவரை அழைத்துக் கொண்டு பொதுமக்கள் சென்று பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இதை அறிந்த கவரைப்பேட்டை போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பிவைத்தனர். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர் ஒடிசாவை சேர்ந்த ராம் திவாஸ் என்பது தெரியவந்தது.மேலும் அவரிடம் இருந்த இந்த இரண்டு ஆதார் அட்டையில் மற்றொன்றில் சத்தியநாராயண பிஸ்வாஸ் என்றும் பெயர் இருந்தது அவர் உடல் நலக் குறைவாக இருந்ததாகவும் உடன் வந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கும்மிடிப்பூண்டியில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பசியினால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad