கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் ஆன்லைனில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி; புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து மதுக்கடைகளையும் திறக்க அனுமதி

கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் ஆன்லைனில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி
கொரோனா தொற்று காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்க அனுமதி அளித்த நிலையில் தற்போது அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. மேலும் மத்திய அரசு அனுமதி தந்தாலும் ஆன்லைன் விற்பனை விவகாரத்தில் அந்தந்த மாநில அரசுகளின் முடிவே இறுதியானது என மத்திய உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் உணவுப் பொருட்கள், மருந்து, மருத்துவ சாதனங்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கி மத்திய அரசு கடந்த 14-ந் தேதி உத்தரவிட்டது. கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பொருட்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கு மறுநாள், இந்த நிறுவனங்கள் 20-ந் தேதி முதல் செல்போன், டி.வி., லேப்டாப் கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்கள் மற்றும் குளிர்சாதன பெட்டி, ஆயத்த ஆடைகள் போன்றவற்றையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களுடன் செல்போன் போன்ற மின்னணு சாதனங்களை விற்பனை செய்வதற்கான ஆர்டர்களையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற தொடங்கின.

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் அனைத்து வகை பொருட்களையும் விற்பனை செய்ய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.

புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து மதுக்கடைகளையும் திறக்க அனுமதி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் கடந்த 11-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர்  மோடி ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, 5வது முறையாக கடந்த 12-ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது, நாட்டின் 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவது மற்றவற்றில் இருந்து  முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.

4ம் கட்ட ஊரடங்கை நீட்டிப்பது பற்றி மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும். இதுதொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மே 18ம் தேதிக்கு முன் வெளியிடப்படும்  என்றார். அதன்படி, 4-ம் கட்ட ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகள், தளர்வுகள் குறித்து விவாரிக்கப்பட்டது. தொடர்ந்து, மாநிலத்தில் மதுக்கடைகள் நாளை  முதல் திறக்கப்படும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என புதுச்சேரி முதல்வர் நாராயாணசாமி தெரிவித்துள்ளார். மது விற்பனைக்கு மட்டுமே அனுமதி; அமர்ந்து சாப்பிட  அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் பேருந்துகள் தனிமனித இடைவெளியுடம் இயக்கவும், அனைத்து வணிக வளாகங்களும், தொழிற்சாலைகளும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி,. மே 31-ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடரவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேர் குணமடைந்துள்ளனர். அங்கு, கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவும் இல்லை, பாதிக்கவும் இல்லை,  குணமடையவும் இல்லை. இந்தியளவில் கொரோனா பாதிப்புள்ள மாநிலங்களின் பட்டியில் 26-வது இடத்தில் புதுச்சேரி மாநிலம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற மாநிலங்களின் கட்டுப்பாடு:

இதற்கிடையே, இந்தியளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில்   ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்தது. தொடர்ந்து தமிழக அரசும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தது. மேலும், 25 மாவட்டங்களில் போக்குவரத்து சேவைக்கும் அனுமதி  அளித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திலும் அடுத்த 3 மாதங்களுக்கு 144 தடை  உத்தரவை நீட்டித்து முதல்வர் பூபேஷ் பாகேல் உத்தரவிட்டுள்ளார். கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்று கிழமை மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் பேருந்து, ரயில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட 4 மாநிலத்தவர்கள் கர்நாடகா மாநிலம் வரவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad