ஸ்ரீபெரும்புதூரில் போதைக்காக வார்னீஷ் குடித்த ஓட்டல் ஊழியர் சாவு; விளாத்திகுளம் அருகே, உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டியதால் சிறுமி தீக்குளிப்பு

ஸ்ரீபெரும்புதூரில் போதைக்காக வார்னீஷ் குடித்த ஓட்டல் ஊழியர் சாவு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காந்திரோடில் உள்ள ஓட்டலில் தங்கி வேலை செய்து வந்தவர் சாமிநாதன் (வயது 45). இவர் நேற்று காலை தான் வேலை செய்த ஓட்டலுக்கு அருகே பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். போலீஸ் விசாரணையில் சாமிநாதன் போதைக்காக வார்னிஷ் குடித்ததும் அதனால் இறந்ததும் தெரியவந்தது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

ஒரு சிலர் குடியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் சாமிநாதனும் போதைக்காக வார்னீஸ் குடித்து இறந்துள்ளார்.

கத்தியால் கழுத்தை அறுத்து அச்சக அதிபர் தற்கொலை- ஊரடங்கால் தொழிலை நடத்த முடியாததால் பரிதாபம்
மதுரை கரிமேடு மோதிலால் மெயின் ரோடு யோகனந்தா சுவாமி மடம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 55), ம.தி.மு.க.வில் தொழிற்சங்க நிர்வாகியாக உள்ளார். இவருடைய மனைவி கவிதா. இவர்களுடைய மகன் ராஜேஸ்குமார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்தநிலையில் இளங்கோவன், விஜயலட்சுமி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இளங்கோவன் பொன்மேனி பகுதியில் அச்சக நிறுவனம் நடத்தி வந்தார். இதற்கிடையே தொழிலை விரிவுபடுத்த சிலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்தநிலையில் கொரோனாவால் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் தொழிலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தொழில் முடங்கியதால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மனஅழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அவர் அலுவலகத்திற்கு செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்றார். இரவில் வெகுநேரமாகியும் இளங்கோவன் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் தேட தொடங்கினர்.

இளங்கோவனின் அண்ணன் அச்சக அலுவலகத்திற்கு சென்று பார்த்தார். அங்கு ரத்தவெள்ளத்தில் இளங்கோவன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இது குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

போலீசார் விரைந்து வந்து உடலை பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் அவரது அறையை சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தனர். அதன் மூலம் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள்.

அதில் “தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள போவதாகவும், தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்று எழுதி வைத்திருந்தார். ஆனால் விஷம் குடித்து அவரது உயிர் போகவில்லை. இதனால் அவர், கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இந்த சம்பவங்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இதுதொடர்பாக எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தவிர கடிதத்தில் அவர் பல்வேறு தகவல்களை எழுதி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவர் அச்சகம் நடத்தி வரும் இடத்தை விற்று கடனை அடைக்க முயன்றதாகவும், இது குறித்து முயன்ற போது அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. மேலும் அது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கோவிலுக்கு சாதமாக முடிந்ததால் இடத்தை விற்று கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விளாத்திகுளம் அருகே, உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டியதால் சிறுமி தீக்குளிப்பு - 3 தொழிலாளர்களுக்கு வலைவீச்சு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே குளத்தூரை அடுத்த புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வீரபாண்டி மகன் சரவணகுமார் (வயது 24), குகன், வேல்சாமி. கூலி தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

இவர்கள் 3 பேரும் சேர்ந்து செல்போன் மூலம் 17 வயது சிறுமியை உல்லாசத்துக்கு அழைத்து மிரட்டி வந்தனர். இதற்கு அந்த சிறுமி மறுத்ததால், அவரை குடும்பத்தினருடன் சேர்த்து தீ வைத்து எரித்து விடுவதாக, கொலைமிரட்டல் விடுத்தனர்.

தீக்குளிப்பு

இதனால் மனமுடைந்த அந்த சிறுமி சம்பவத்தன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகி பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

3 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்த புகாரின்பேரில், குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான சரவணகுமார், குகன், வேல்சாமி ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.

இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் சிறுமி அளித்த வாக்குமூலம் ‘வாட்ஸ்-அப்‘ உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad