டாஸ்மாக் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு; நான் நலமுடன் இருக்கிறேன், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை - அமித் ஷா விளக்கம்

டாஸ்மாக் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்ற உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழு வதும் கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அதிகார வரம்புக்குள் உள்ள பகுதியை தவிர, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) முதல் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்தது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரை சேர்ந்த வக்கீல் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த மனுவை விசாரித்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்,  டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்க தடை இல்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம், அரசு விதித்த நிபந்தனைகளுடன், கூடுதல் நிபந்தனைகளையும் நீதிபதிகள் விதித்தனர்.

இதையடுத்து, நேற்று முன் தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. எனினும், பல இடங்களில் உரிய சமூக இடைவெளியின்றி கூட்டகூட்டமாக நின்று மது பிரியர்கள் வாங்கிச்சென்றதை காண முடிந்தது. இதையடுத்து,  நிபந்தனைகளை அமல்படுத்தாததால், தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை, டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட ஐகோர்ட்டு, ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்க அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும்  மாநில எல்லைகளில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்கவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதாகவும் தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான் நலமுடன் இருக்கிறேன், எந்த நோயாலும் பாதிக்கப்படவில்லை - அமித் ஷா விளக்கம்
நல்ல உடல் நலத்துடன் தான் இருப்பதாகவும், எனது உடல் நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் தவறானது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டுவிட்டரில்  தெரிவித்துள்ளார்.  அமித்ஷாவின் உடல் நலம் குறித்து  கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில்  வதந்திகள் கிளம்பின. இந்த நிலையில், அமித்ஷா டுவிட்டரில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.

அமித்ஷா தனது டுவிட் பதிவில் கூறியிருப்பதாவது:-  உலக பெருந்தொற்றான கொரோனாவுக்கு எதிராக நமது நாடு போராடி வருகிறது. நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதால், நானும் மிகவும் பரபரப்பாக இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளேன்.  இது (வதந்திகள்) போன்றவைகளுக்கு நான் கவனம் கொடுப்பதில்லை.  நேற்று இரவு எனது கவனத்திற்கு இவை வந்த போது, வதந்தி பரப்புவர்கள் அனைவரும் தங்களின் கற்பனை சிந்தனைகளால் மகிழ்ச்சியில் இருக்கட்டும் என்று நான் கருதினேன். எனவே, நான் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

ஆனால், கடந்த இரு தினங்களாக எனது  கட்சி தொண்டர்களும், நலம் விரும்பிகளும் மிகுந்த கவலையை வெளிப்படுத்தினர்.  அவர்களின் வருத்தத்தை என்னால் புறக்கணிக்க முடியாது. எனவே, நான் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்த நோயும் இல்லை என்று தெளிவுபடுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad