சர்ச்சைக்குரிய ட்வீட்கள்: புதிய யுக்தியைக் கையாளும் ட்விட்டர்; உயர்கல்வி நிறுவனங்கள் வசமிருந்த பி.சி.ஆர் கருவிகளை வைத்து கொரோனா பரிசோதனை; பச்சை மண்டலமாக மாறிய திருப்பூர்
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
கொரோனா குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட்கள்: புதிய யுக்தியைக் கையாளும் ட்விட்டர்கொரோனா வைரஸ் பற்றி சர்ச்சைக்குரிய அல்லது தவறான கருத்துகளை கொண்ட ட்வீட்கள் வெளியாகும்போது அது குறித்து பயனர்களை எச்சரிக்க உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய ட்வீட்களின் கீழ் கொரோனா வைரஸ் பற்றி கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளும் இணைப்பு தரப்படும் என்று தெரிவித்துள்ளது ட்விட்டர் நிறுவனம்.
மேலும், சர்ச்சைக்குரிய ட்வீட்களை மறைக்கும் வகையில், இந்த ட்வீட்டில் பகிரப்பட்ட கருத்துகள் கொரோனா வைரஸ் தொடர்பான பொது சுகாதார நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் முரண்படுகின்றன என்று பயனர்களை எச்சரிக்கும் வகையில் லேபிள் இடம்பெறும் என அறிவித்துள்ளது.
உயர்கல்வி நிறுவனங்கள் வசமிருந்த பி.சி.ஆர் கருவிகளை வைத்து கொரோனா பரிசோதனை: அரசு தகவல்
உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் வேளாண் துறை வசமிருந்த பி.சி.ஆர் கருவிகள் கொரோனா பரிசோதனைக்கு பயன்படுத்த உள்ளதாக, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு கல்வி நிறுவனங்களில் உள்ள பி.சி.ஆர் ஆய்வகங்களை பயன்படுத்த உத்தரவிடக் கோரி, மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், உலக நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ள ஆய்வகங்கள் தவிர்த்து, தமிழகத்தில் அறிவியல் பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள பி.சி.ஆர் ஆய்வகங்களை கொரோனா தொற்று பரிசோதனைக்கு பயன்படுத்த வேண்டுமென கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் புஷ்பா சத்தியநாராயணா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது..
அதில், உலக சுகாதார நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கொரோனா தொற்றுக்கு முழுமையான அளவில் தமிழக அரசு சிகிச்சை அளித்து வருவதாகவும், தற்போதைய நிலையில்தமிழகத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் 53 ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, உயர்கல்வித் துறை மற்றும் வேளாண்துறை வசமிருந்த 25 பி.சி.ஆர் கருவிகள் கொரோனா பரிசோதனைக்கு ஏதுவாக தற்போது சுகாதாரத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் இந்தியாவிலேயே அதிக அளவிலான பி.சி.ஆர் ஆய்வக வசதி உள்ள மாநிலமாகவும்,அதிகப்படியான நபர்களுக்கு பரிசோதனை செய்த மாநிலமாகவும் தமிழகம் விளங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து உத்தரவிட்டனர்.
கொரோனா தொற்றாளர்கள் இல்லாத பச்சை மண்டலமாக மாறிய திருப்பூர்
ஈரோடு, சிவகங்கை மாவட்டங்களை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் கொரோனா தொற்றாளர்கள் இல்லாத பச்சை மண்டலமாக மாறியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 114 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், திருப்பூரில் மே 2ம் தேதி புதிதாக இரண்டு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 10 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், சிகிச்சை பெற்று வந்த இருவரும் இன்று குணமடைந்து வீடு திரும்பியதால் திருப்பூர் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளதாக ஆட்சியர் விஜய கார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.