கொரோனாவில் இருந்து மீண்டது எப்படி? மதுரை வாலிபர் விளக்கம்; மதுரையில் திடீர் சாலை மறியல்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
கொரோனாவில் இருந்து மீண்டது எப்படி? - மதுரை வாலிபர் விளக்கம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளது. தமிழகத்தை பொறுத்தமட்டில் 2750-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1300-க்கும் மேற்பட்டோர் பூரண குணமாகி தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மதுரையில் இதுவரை கொரோனாவால் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் இறந்துள்ளனர். 43 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த மதுரை புறநகர் பகுதியை சேர்ந்த 36 வயது வாலிபர் தனக்கு நேர்ந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். அதுபற்றிய தகவல்கள் வருமாறு:-

பரிசோதனை

கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி எங்கள் பகுதியை சேர்ந்த 9 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு, கொரோனா பரிசோதனைக்காக வந்தோம். அப்போது அங்கு எங்களுக்கு பல்வேறு கட்டமாக பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் சிலருக்கு பாதிப்பு இருக்கிறது என வந்தது. சிலருக்கு பாதிப்பு இல்லை என வந்தது. இருப்பினும் 2 தினங்கள் கழித்து எங்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் என்னுடன் வந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 3 பேருக்கு பாதிப்பு இல்லை என வந்தது.

இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேர் மட்டும் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நாங்கள் ஆஸ்பத்திரிக்கு வரும் போதே எங்கள் குடும்பத்தினரிடம், இதுபோன்று கொரோனா பரிசோதனைக்கு செல்கிறோம். ஒருவேளை கொரோனா இருக்கும்பட்சத்தில் நாங்கள் சிகிச்சை முடிந்து நல்லபடியாக வீடு திரும்பி வருவோம் என கூறிவிட்டுதான் வந்தோம். எங்கள் 6 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதித்தனர்.

வருத்தமாக இருந்தது

முதல் 2 தினங்கள் எங்களுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. அப்போது டாக்டர்கள் எங்களிடம் ஆறுதலாக பேசி எங்களை மனதளவில் தைரியப்படுத்தினார்கள்.

அதன் பின்னர் எங்களுக்கு தொடர்ந்து பல்வேறு சிகிச்சை அளித்து, மருந்து, மாத்திரைகளை கொடுத்தார்கள். 3 வேளையும் சத்து மாத்திரைகள் மற்றும் சத்தான உணவுகளை கொடுத்தார்கள். சில தொண்டு நிறுவனங்கள் மூலமும் எங்களுக்கு பலவிதமான சத்தான உணவு வழங்கப்பட்டது. அதுபோல் டாக்டர்களும், செவிலியர்களும் அர்ப்பணிப்புடன் எங்களை 24 மணி நேரமும் கண்காணித்து வந்தார்கள். எங்களிடம் இருந்து யாருக்கும் தொற்று பரவிவிடக் கூடாது என்பதற்காக முககவசம் மற்றும் கையுறைகளை அணிந்து இருந்தோம்.

சமூக இடைவெளி

நாங்கள் தங்கியிருந்த வார்டில் மேலும் சிலர் இருந்தனர். சமூக இடைவெளியை கடைபிடித்து எங்களை நாங்களே அங்கு தனிமைப்படுத்திக் கொண்டோம். டாக்டர்கள் கூறிய அறிவுரைகள் அனைத்தையும் முறையாக கடைபிடித்தோம்.

2 தினங்களுக்கு ஒரு முறை கொரோனா தொடர்பாக கவுன்சிலிங் கொடுப்பதற்கு மருத்துவ நிபுணர்கள் வந்தார்கள். அவர்கள் எங்களுக்கு பல்வேறு விதமான விழிப்புணர்வுகளை அளித்தார்கள். டாக்டர்களும் ஆஸ்பத்திரியில் இருக்கும் நேரம் தவிர்த்து மீதமுள்ள நேரங்களில் செல்போனில் எங்களை தொடர்பு கொண்டு தொடர்ந்து எங்களை பற்றி நலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். இதுபோல் சுகாதார பணியாளர்களும் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை நாங்கள் தங்கியிருந்த அறை, கழிவறையை சுத்தம் செய்தனர். நாட்கள் செல்ல செல்ல எங்களுக்கு பயம் போய் தன்னம்பிக்கை வந்துவிட்டது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பயப்படும் அளவிற்கு கொரோனா ஒன்றும் கொடிய நோயல்ல. நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் அந்த நோய் யாரையும் ஒன்றும் செய்யாது. எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை மட்டுமே கொரோனா பாதிக் கிறது. சமூக வலைத்தளங்களில் பொய்யான பல கருத்துகள் பதிவிடப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையில் கொரோனாவில் இருந்து விடுபட, தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

குடும்பத்தினரை பிரிந்தது

காலை 9 மணிக்குள் இட்லி, ஊத்தாப்பம் வரும். 11.30 மணிக்கு இஞ்சிசாறு, எலுமிச்சைசாறு, சுண்டல், 2 அவித்த முட்டைகள் ஆகியவையும், மதிய உணவுக்கு முட்டை பிரியாணி, தக்காளி சாதம், சாம்பார் சாதம் போன்ற ஏதாவது ஒரு சாதம், மாலை 4 மணிக்கு டீ மற்றும் சுண்டல், அதுபோல் இரவு உணவுக்கு தோசை, சப்பாத்தி போன்ற சத்தான உணவுகளைக் கொடுத்தார்கள். இதுபோல் அதிக அளவில் பழங்களையும் கொடுத்தார்கள். குடும்பத்தினரை பிரிந்து இருந்ததுதான் மிகவும் வருத்தமாக இருந்தது.

இதற்கிடையே எங்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் குடும்பத்திலுள்ள நபர்களையும் டாக்டர்கள் பரிசோதனைக்காக அழைத்த போது மிகுந்த வருத்தத்தில் இருந்தோம். அதன் பின்னர் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என தகவல் வந்தவுடன் இழந்த சந்தோசத்தை மீண்டும் பெற்றுக் கொண்டோம். மேலும் தொடர்ந்து எங்கள் வீட்டில் உள்ள நபர்களுடன் செல்போன் மூலமாக பேசிக்கொண்டிருந்தோம். பின்னர் கடந்த மாதம் 15-ந் தேதி எங்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் எனக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து என்னை மறுநாள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதுபோல் ஒரு சிலருக்கு 20 நாட்கள், 25 நாட்கள் வரை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

வேதனையாக இருக்கிறது

வீட்டிற்கு என்னை அனுப்பிய போது, சமூக இடைவெளியை கடைபிடித்து, வீட்டில் உள்ளவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். அதன்படி வீட்டிலும் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். தற்போது டாக்டர்கள் கூறிய 15 நாள் தனிமைப்படுத்துதலும் முடிந்துவிட்டது. மேலும் எங்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மற்றும் உணவு பொருட்களை சுகாதாரத்துறையினர் வீட்டிற்கு வந்து வழங்கி வருகிறார்கள். அவர்கள் அறிவுறுத்தியபடி நான் வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறேன்.

ஆஸ்பத்திரியில் தங்கி இருந்தபோது ஒரு சில நோயாளிகளுக்கு லேசான மூச்சுத்திணறல் இருந்தது. ஆனால் என்னுடன் இருந்த நபர்களுக்கு தலைவலி, சளி, காய்ச்சல் போன்ற எந்த ஒரு அறிகுறியும் இல்லை. நாங்கள் அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தோம். தற்போது டாக்டர்கள், நர்சுகள் மற்றும் காவல் பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு கொரோனா வந்திருப்பது வேதனையாக இருக்கிறது. அவர்களும் விரைவில் குணம் அடைவார்கள்.

டாக்டர்களின் பணி எவ்வளவு இன்றியமையாத ஒன்று என்பதை இந்த நாட்களில் புரிந்துகொள்ள முடிந்தது. டாக்டர்கள் கூறும் அறிவுரைகளை முழு மனதுடன் கடைபிடித்தால் கொரோனாவை எளிதாக விரட்டிவிடலாம் என்பதே என்னுடைய கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.

மதுரையில் திடீர் சாலை மறியல்
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு அந்த பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் வெளியே வராமலும், அந்த பகுதிகளுக்குள் வேறு நபர்கள் உள்ளே செல்லாமலும் இருக்கும் வண்ணம் தடுப்புகள் மூலம் அடைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மதுரை கிரைம் பிராஞ்ச் அருகே உள்ள காஜிமார் தெரு உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை திடீரென்று வீட்டை விட்டு வெளியே வந்தனர். பின்னர் அவர்கள் தெற்கு வெளிவீதி, கிரைம் பிராஞ்ச் பகுதி சாலையில் மறியல் செய்து கோஷம் எழுப்பினர்.

அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் கொரோனா பாதிப்பு இல்லை. மேலும் 14 நாட்கள் கடந்த நிலையில் எங்களின் வாழ்வாதாரம் முடங்கியதோடு போதிய உதவிகள் கிடைக்கவில்லை. எனவே எங்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மறியல் பற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் அங்கு வந்த போலீஸ் துணை கமிஷனர் கார்த்திக், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad