Matrimony OTT-Platforms Jobs Coupons Business

நெல்லை அருகே பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து; கியாஸ் நிரப்பிய சில நொடிகளில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

நெல்லை அருகே பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து
நெல்லை அருகே பழைய இரும்பு குடோனில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

நெல்லை அருகே தாழையூத்து மெயின் ரோட்டில் பெட்ரோல் பங்க் பின்புறம் பழைய இரும்பு குடோன் ஒன்று உள்ளது. இந்த குடோனில் பழைய டயர், டியூப்கள் மற்றும் இரும்பு பொருட்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் அங்கு திடீரென தீப்பிடித்தது. இதனால் அங்கிருந்து கரும்புகை கிளம்பியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்கமூர்த்தி தலைமையில் 2 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை அணைக்க முடியவில்லை. தீ கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் அந்த பகுதியில் கரும்புகை கிளம்பியது. சுற்றியுள்ள முட்செடிகளில் தீ பிடித்து எரிந்தது.

இதைத்தொடர்ந்து பேட்டை, கங்கைகொண்டான், நாங்குநேரி ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மேலும் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் இருந்து ஒரு தீயணைப்பு வாகனம் வந்தது. அவர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

மேலும் இந்தியா சிமெண்டு ஆலையில் இருந்து மீட்புக்குழுவினரும் வந்தனர். பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் உள்பட 30 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 6 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

மேலும் தூத்துக்குடியில் இருந்து நுரையின் மூலம் தீயணைக்கும் வாகனமும் வரவழைக்கப்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் காலியானது. அவர்கள் மீண்டும் தண்ணீர் நிரப்பி தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களும் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரும்பு குடோன் அருகில் பெட்ரோல் பங்க் உள்ளது. அதில் தீ பரவாமல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்தின் காரணமாக அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இரவு 9.30 மணி அளவில் தீ கட்டுக்குள் வந்தது. 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இதுகுறித்து தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தீ எப்படி பிடித்தது. மின் கசிவு காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கியாஸ் நிரப்பிய சில நொடிகளில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள பேட்டப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 39), துணி வியாபாரி. இவர் மோகனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தனது சொந்த கார் மூலம் துணி விற்பனை செய்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று நாமக்கல்லை அடுத்த முதலைப்பட்டியில் உள்ள கியாஸ் நிரப்பும் பங்கில் காருக்கு எரிவாயு நிரப்புவதற்காக மோகனூரில் இருந்து வந்தார். பங்கில் கியாஸ் நிரப்பிவிட்டு காரை அங்கிருந்து நகர்த்திய சில நொடிகளிலேயே காரின் பின் பகுதியில் திடீரென தீப்பற்ற தொடங்கி உள்ளது. இதைக் கண்ட சரவணகுமார் உடனடியாக காரை பங்கில் இருந்து வெளியே நகர்த்தி நிறுத்திவிட்டு கீழே இறங்கி உள்ளார்.

இதைத்தொடர்ந்து ‘பங்க்’ ஊழியர்கள் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் காரில் ஏற்பட்ட தீயை வேகமாக அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென கார் முழுவதும் பரவி முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் காரில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள துணிகளும் தீயில் முற்றிலுமாக எரிந்தன. இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் சரவணகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டரில் ஏற்பட்ட கியாஸ் கசிவே இந்த விபத்திற்கு காரணம் என்பது தெரியவந்து உள்ளது. இருப்பினும் டிரைவரின் சாதுர்யத்தால் கியாஸ் நிரப்பும் ‘பங்க்’ இந்த தீ விபத்தில் இருந்து தப்பித்ததோடு பெரிய விபத்தும் தவிர்க்கப்பட்டு உள்ளது.

சுரண்டை அருகே பரிதாபம்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி
தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள இடையர்தவணை மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலையா (வயது 65), விவசாயி. சுரண்டை பகுதியில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. அப்போது வேலையா மாலை 5 மணிக்கு தனது தோட்டத்திற்கு நடந்து சென்றார்.

அப்போது அவர் அங்கு அறுந்து கிடந்த மின்சார வயரை கவனிக்காமல் எதிர்பாராதவிதமாக மிதித்தார். இதில் வேலையா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்ததும் அவரது குடும்பத்தினர் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இதுகுறித்த தகவல் அறிந்ததும் சுரண்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். வேலையாவுக்கு பிச்சம்மாள் என்ற மனைவியும், கோட்டைச்சாமி (47) என்ற மகனும் உள்ளனர். கோட்டைச்சாமி ஆடு, மாடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மின்சாரம் தாக்கி விவசாயி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad