Matrimony OTT-Platforms Jobs Coupons Business

சேலத்தில் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை; வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை கண்டறிய கண்காணிப்பு குழு அமைக்கப்படும் - கலெக்டர்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
சேலத்தில் கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வரும்போது அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே சமயம் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கல்வி, கூட்டுறவுத்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், சமூக நலத்துறை உள்பட பல்வேறு துறைகளில் 500-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று திங்கட்கிழமை வேலை நாள் என்பதால் அரசு ஊழியர்கள் அனைவரும் வழக்கம்போல் காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்களுக்கு அங்கு வைக்கப்பட்டுள்ள தானியங்கி வெப்ப கண்காணிப்பு கருவி மூலம் காய்ச்சல் ஏதேனும் இருக்கிறதா? என பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும் காய்ச்சல் இருக்கிறதா? என்பதை அறிய உதவும் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலமும் பரிசோதனை நடத்தப்பட்டது. அரசு அதிகாரிகளும், அலுவலக ஊழியர்களும் அனைவரும் வரிசையாக காத்திருந்து பரிசோதனை செய்த பிறகே அவர்களது அலுவலகத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை கண்டறிய கண்காணிப்பு குழு அமைக்கப்படும் கலெக்டர் ஷில்பா தகவல்
வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை கண்டறிய கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்கும் தன்னார்வலர்கள் மற்றும் கிராம கண்காணிப்பு தகவல் மையத்தை கலெக்டர் ஷில்பா நேற்று திறந்து வைத்தார். மேலும் நகர்ப்புற கண்காணிப்பு குழு விழிப்புணர்வு கையேட்டையும் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் ஷில்பா கூறியதாவது:-

கிராம பகுதியில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 204 கிராம பஞ்சாயத்துகளிலும் தன்னார்வலர்கள், பஞ்சாயத்து செயலர், சமூக ஆர்வலரை கொண்ட 3 முதல் 5 நபர் கொண்ட கிராம கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலம், வெளி நாடுகள் மற்றும் முக்கிய நகரங்களில் இருந்து தங்களது பகுதிக்கு வருகை தந்தால், அவர்களை கண்டறிந்து தகவல் வழங்குவதற்கு ஊரக மற்றும் நகர்ப்புற கண்காணிப்பு குழுக்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அமைக்கப்படும்.

மருத்துவ வசதி

பொதுமக்கள் கடைகளுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல் மற்றும் தங்களது வீடுகளை சுத்தமாக பராமரித்தல், பொது இடங்கள் மற்றும் பொது கழிவறைகளை சுத்தமாக பேணுவதை உறுதி செய்தல் போன்ற விழிப்புணர்வை இந்த குழுவினர் ஏற்படுத்துவார்கள்.

மேலும் வெளிநாடு, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தெரிவிப்பார்கள். வெளி நபர்கள் 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்துதல், வெளி நபர்கள் ஊருக்குள் வரும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்த வசதியாக பள்ளிக்கூடம் மற்றும் சமுதாய நலக்கூடம் போன்ற பொது கட்டிடங்களை தேர்வு செய்தும், தனிமைப்படுத்தலில் உள்ள நபர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதிகளை செய்வார்கள்.

தனிமைப்படுத்துதல்

வெளி நபர்கள் ஊருக்குள் வரும் பட்சத்தில் அவர்களை தனிமைப்படுத்திடவும், அவர்களுக்கு சுகாதார அலுவலர்கள் மூலம் தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யவும் குடும்ப நபர்களுடன் வசிப்பதால் ஏற்படும் பாதிப்பை பொதுமக்கள் அறியச் செய்தல், தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கு நாள் தோறும் அந்த பகுதிக்கு உட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அவர்கள் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள செய்தல், அவர்கள் வெளியே வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன், செய்தி- மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அரசின் உத்தரவை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை - கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை
தமிழக முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் எந்தவகையான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களை திறக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை ஆரஞ்சு மண்டலமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சிக்கு வெளிப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளும், ஊரகப்பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளும், ஸ்பின்னிங் மில்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கலாம். ஐ.டி. நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களை கொண்டு இயங்கலாம்.


நகர் மற்றும் ஊரக பகுதிகளில் கட்டுமானப்பணிகள் நடைபெறலாம். அவர்கள் ஒரு முறை மட்டும் அழைத்து செல்ல அனுமதி அளிக்கப்படும். அரசுத்துறை சம்பந்தமான அனைத்து கட்டிட பணிகளுக்கும் தடை இல்லை. வீட்டு வேலைகளுக்கு செல்லும் எலக்ட்ரீசியன், பிளம்பர் போன்றவர்கள் அரசு அனுமதி பெற்று இருக்க வேண்டும். அவர்கள் எந்த பகுதியில் இருந்து வருகிறார்கள், அவர்களுடைய உடல்நிலை என்ன? என்பதை கண்டறிந்த பின்பே அவர்களை அனுமதிக்க முடியும். அரசு வழங்கும் பாஸ் பெற்றுக்கொண்டு அவர்கள் பணிகளில் ஈடுபடலாம். வீட்டு வேலை செய்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் அரசின் பாஸ் பெற்றுக்கொண்டு தங்களது வேலைகளை தொடரலாம்.

கட்டுமான பொருட்கள்

கட்டுமான பொருட்கள் விற்கும் நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம். அவர்களுக்கு சரக்கு கொண்டு வரும் லாரிகளுக்கும் அனுமதியளிக்கப்படும். பிரிண்டிங் பிரஸ் திறப்பதற்கு எவ்வித அனுமதியும் தேவையில்லை. பெரிய வணிக வளாகங்களில் இல்லாமல் தனியாக இருக்கும் கடைகளில், செல்போன், கண்ணாடி, வீடுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் கடைகள் திறக்கலாம்.

இதுபோன்ற கடைகள் ரூரல் பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து 5 மணி வரையும், நகர பகுதிகளில் 10 மணியில் இருந்து 5 மணி வரையும் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. உணவகங்களில் பார்சல் கொடுக்க மட்டுமே அனுமதி.

நடவடிக்கை

தற்போது பொதுவாக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திறக்கப்படும் கடைகளில் மக்கள் கூட்டம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கடைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் முககவசம் அணிந்து இருக்கவேண்டும். ஒரு வேளை அந்த கடைகளில் கூட்டம் அதிகமானால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு.

அந்த கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கிருமி நாசினிகளான சானிடைசர், ஹேண்ட் வாஷ் ஆகியவற்றை பயன்படுத்தவேண்டும். அப்படியில்லாத பட்சத்தில் அந்த கடையை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு உத்தரவை மதிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிமாநில தொழிலாளர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநில தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கு 3 வகையான பாஸ் வழங்கப்படுகிறது. இறப்பு, திருமணம், மருத்துவ சிகிச்சை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. வெளிமாவட்டத்தில் இருந்து வந்து செல்ல முடியாதவர்கள் இந்த பாஸ் பெற்றுக்கொண்டு செல்லலாம்.

தொழிற்சாலைகள் நாளை(புதன்கிழமை) முதல் செயல்படுத்தலாம். அங்கு எத்தனை பேர் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு பஸ், மருத்துவ உதவி மற்றும் சானிடைசர், சமூக பாதுகாப்பு இடைவெளி உள்ளிட்டவைகள் உள்ளதா? என்பது ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். அனுமதி வழங்கிய பின்னர் மாவட்ட அதிகாரிகள் அந்த தொழிற்சாலைகளை கண்காணிப்பார்கள். பொருளாதார வளர்ச்சிக்காகவே இந்த தளர்வு வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் சமூக பாதுகாப்பு இடைவெளி உள்ளிட்டவைகள் ஒரு அங்கமாகவே கடை பிடிக்கவேண்டும்.

இ-பாஸ்

பொதுமக்கள் பாஸ் வாங்க கலெக்டர் அலுவலகத்துக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே இ-பாஸ் மூலம் பதிவு செய்து பெறலாம். அந்தந்த பகுதியில் உள்ள இசேவை மையங்கள் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம். செல்போன் போன் மூலமும் விண்ணப்பிக்கலாம். முறையான ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.

தற்போது பொய்யான தகவல் அளித்து நிறைய பேர் அனுமதி வாங்கியவர்கள் கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். வெளி மாவட்டத்தில் இருந்து பொய் தகவல் கூறி வருபவர்கள் கைது செய்யப்பட்டு வாகனம் பறிமுதல் செய்யப்படும்.

அனுமதி கிடையாது

வணிக வளாகங்கள், மார்க்கெட் காம்ப்ளக்ஸ் திறக்க அனுமதி கிடையாது. தனி கடைகள் திறக்கலாம். அத்தியாவாசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கலாம். நகைக்கடைகள், ஜவுளி கடைகள் திறக்க அனுமதி இல்லை. இனிமேல் மாலை 5 மணி வரை கடை திறக்கலாம். கூட்டம் அதிகமானால் சீல் வைக்கப்படும். டீக்கடைகளுக்கு அனுமதியில்லை. போட்டோ ஸ்டூடியோக்களுக்கு அனுமதி அளிக்கப்படும். தொழிற்சாலைகள் திறப்பதால் வட மாநில தொழிலாளர்கள் தற்போது வேலைக்கு செல்லலாம்.

சென்னையில் இருந்து நேற்று ஒரே நளில் 600 பேர் வந்துள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களும், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களும் சிறப்பு பரிசோதனைக்காக தனிமைப்பகுதி மையம் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்படுவார்கள்

நாள் ஒன்றுக்கு 250 பேருக்கு கொரானா சோதனை செய்யப்படுகிறது. இதுவரை 4126 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 200 படுக்கைகளும், எட்டையாபுரம், கோவில்பட்டி, வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் 100 படுக்கைகளும் சிகிச்சைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் இருந்து பாஸ் பெற்று வந்தால் வீட்டில் தனிமைப் டுத்தப்படுவார்கள். பாஸ் இல்லாமல் வந்தால் தனிமை மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். தூத்துக்குடி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக உள்ளது. சில மாவட்டங்களில் இல்லாமல் இருந்து பின்னர் கூடிவிட்டது. நாமும் அலட்சியப்படுத்தி வெளியில் சுற்றினால் நமக்கும் இதே நிலைதான் ஏற்படும். தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றினால் போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தூத்துக்குடி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 4 பகுதிகள் திறந்து விடப்பட்டுள்ளது. போன்டன்புரம் பகுதி வருகிற 7-ந் தேதி திறந்து வைக்கப்படும். மற்ற பகுதிகள் 18-ம் தேதிக்கு பிறகு திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad