ஹாட்ரிக் வெற்றிக்கு ‘அண்ணாத்த' ரஜினி போடும் புதுக்கணக்கு

ஹாட்ரிக் வெற்றிக்கு ‘அண்ணாத்த' ரஜினி போடும் புதுக்கணக்கு
கிட்டத்தட்ட 2 மாத காலம் முடங்கி கிடந்த தமிழ் சினிமா தற்போது தான் மூச்சுவிட தொடங்கியுள்ளது. எப்போது எழுந்து நடைபோடும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் அண்ணாத்த படம் வெளியாகும் என அறிவிப்பு வந்திருப்பது திரை ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

சன் பிக்ச்சர்ஸ் – ரஜினி கூட்டணியில் ஏற்கனவே பொங்கல் விருந்தாக வெளியான பேட்ட படம் மாபெரும் வெற்றி பெற்றதால் அதே செண்டிமெண்ட்டை மனதில்கொண்டும் இப்படத்தையும் பொங்கல் ரிலீஸாக திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த ஆண்டு பொங்கலுக்கும் தர்பார் வெளியாகியிருந்ததால் அண்ணாத்த ரஜினியின் ஹாட்ரிக் பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.
ரஜினியின் சமீபத்திய படங்களை ஒப்பிடும் போது அண்ணாத்த முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும் என்பது ரஜினி ரசிகர்களின் கருத்து. காரணம் இப்படத்தின் இயக்குநர் சிவா. ஆக்ஷன் கதையில் குடும்ப செண்டிமெண்ட்டை கச்சிதமாக கலந்து கொடுப்பதில் சிவா கில்லாடி என்பதால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடும்பங்கள் கொண்டாடும் ரஜினி படமாக அண்ணாத்த இருக்கும் என கூறப்படுகிறது. இதுவரை எடுத்த காட்சிகளை பார்த்தவர்களும் இது இன்னொரு சந்திரமுகி என்றே ஆருடம் கூறியுள்ளனர்.

கபாலி, காலா என லிங்காவுக்கு பிறகான ரஜினியின் படங்கள் அவரது புதிய இன்னிங்ஸாகவே பார்க்கப்படுகிறது. அதில் எல்லோராலும் கொண்டாடப்பட்ட படம் என்றால் பேட்ட மட்டுமே. அதனால் பேட்டையை மிஞ்சும் அளவில் ஒரு வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி உள்ளார். அதற்கு சரியான தேர்வாகவே அண்ணாத்த பார்க்கப்படுகிறது. அந்தளவு படத்தில் ஆக்ஷன் பிளஸ் செண்டிமெண்ட்டை சிவா கச்சிதமாக கலந்திருப்பதாகவே சொல்லப்படுகிறது.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சிவா இயக்கும் படம் என்பதால் இதுவும் கிராமத்து கதையாக இருக்கும் எனவும் மேலும் எஜமான் படத்துக்கு பின் ரஜினி நடிக்கும் கிராமத்து படம் எனவும் எல்லோராலும் கூறப்பட்டது. ஆனால் வட சென்னை பகுதியை கதைக்களமாய் கொண்ட படம்தான் அண்ணாத்த என நம்பந்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா என நான்கு நாயகிகள் இருந்தாலும் குஷ்பு மற்றும் மீனா ஆகியோர் மட்டுமே இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிப்பதாகவும் கூறப்படுகின்றன. அதனால் 90-களின் ரசிகர்களுக்கு இது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

ரஜினிக்கு அடுத்தபடியாக இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் நடிகையர் திலகம் படத்துக்கு பிறகு கீர்த்தி சுரேஷுக்கு பெயர் சொல்லும் படமாக அண்ணாத்த இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. அதேபோல் தர்பாரில் சில காட்சிகளில் மட்டுமே வந்துபோனாலும் அண்ணாத்த படத்தில் நயன்தாராவுக்கும் கனமான ஒரு கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

60 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் எஞ்சியுள்ள காட்சிகளை கொரோனா அச்சுறுத்தல் முடிந்ததும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். மேலும் எடுத்த வரையிலான காட்சிகளை தொகுக்கும் பணியிலும் தீவிரமாக இறங்கியுள்ளனர். அந்தவகையில் ’அண்ணாத்த’ ரஜினி ரசிகர்களுக்கு இன்னொரு பொங்கல் விருந்தாக அமையும் என்பதே பலரது கணிப்பாக உள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad