Matrimony OTT-Platforms Jobs Coupons Business

சென்னை மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் போராட்டம்: எப்பொழுது சம்பளம் வழங்கப்படும்? பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் மாற்றம் - தமிழக அரசு; நெல்லை கொரோனா முகாமின் நிலை

சென்னை மாநகராட்சி தற்காலிக ஊழியர்கள் போராட்டம்: எப்பொழுது சம்பளம் வழங்கப்படும்? 
சென்னை வளசரவாக்கம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மண்டல அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியால் தற்காலிகமாக பணியாற்றி வரும் 16,000 சிறப்பு ஊழியர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. சுகாதாரத்துறை சார்பில் ஒவ்வொரு வீடுகளிலும் நேரடியாக ஊழியர்கள் சென்று உடல்நிலை குறித்து விசாரிப்பதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் 16000 ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து பணியாற்றக்கூடிய அவர்கள் மாதம் இறுதியில் சம்பளம் தருவதாக கூறி இருந்தனர். ஆனால் தற்பொழுது வரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதில் பணியாற்றும் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் வேலை செய்யக்கூடிய நபர்களுக்கு, வேலை இல்லாத காரணத்தால் தாங்கள் வேலைக்கு சென்று சம்பளம் பெறுவதற்கு இதுபோன்ற ஆபத்தான வேலைகளை செய்து வருகின்றனர்.

ஆனால், அவர்கள் செய்யும் பணிக்கான ஊதியத்தை சரியான நேரத்தில் வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மண்டல அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்களின் வங்கிக்கணக்கில் ஊதியம் வழங்கப்பட்டுவிடும் என்றும் தங்களுக்கு அதுகுறித்து தெரியாது என்றும் கூறினர்.

நாளை சம்பளம் வழங்கப்படும் என தினசரி சொல்கின்றனர். எப்பொழுது சம்பளம் வழங்கப்படும்? என்று சென்னை மாநகராட்சிக்கு மட்டுமே தெரியும் என்று வேதனையுடன் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் போலீசாரை வைத்து கலைக்க செய்தனர்.

பேரிடர் மேலாண்மைத் திட்டத்தில் மாற்றம் -  தமிழக அரசு
கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த நேரத்தில் புயல் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைச் சமாளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் 5-ஆம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கும் தகவலில்,
”தமிழகத்தில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுள்ள இந்த சூழ்நிலையில், வானிலை ஆராய்ச்சி மையம் கொடுத்துள்ள தகவலின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்வதோடு, புயலை எதிர்கொள்ள மிக சரியான நேரத்தில் தயார் நிலைக்கு வரவேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு வசதியாக மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்டத்தில் திருத்தங்களை மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். பிபிஇ சோதனை உபகரணம், முகக்கவசம் போன்றவை போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.

முன்னணியில் நின்று பணியாற்றுவோர், தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னெச்சரிக்கையாக பணிகளை கவனிக்கும்படி அறிவுறுத்த வேண்டும். புயலுக்காக மக்களை வேறு இடங்களுக்கு மாற்றும்போது சமூக இடைவெளி பின்பற்றப்படுவதையும், முகக்கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.புயல் ஏற்பட்டால், தங்கும் இடங்கள், நிவாரண முகாம்களை அமைத்து அங்கு நெரிசல் ஏற்படாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். தங்கும் இடங்கள், முகாம்களில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்துவதற்காக மருத்துவ பரிசோதனைகள் செய்ய வேண்டும். தனிமைப்படுத்தும் இடங்கள் புயலால் பாதிப்பு வராத வகையில் பாதுகாக்க வேண்டும்.

செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை தொடர்பாக உள்ளூர் மாவட்ட மொழிகளில் ஊடகங்கள் மூலம் அவ்வபோது தெரிவிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பு இருக்கும் சூழலில் புயல் பாதிப்பு வந்தால் இரண்டையும் சமாளிக்கும் வகையில் உட்கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டும் போன்ற முக்கிய அறிவிப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடிப்படை வசதிகள் இல்லை, பரிசோதனை நடத்துவதில் தாமதம்: நெல்லை கொரோனா முகாமின் நிலை
நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கங்கைகொண்டான் முகாம் உள்ளிட்ட 5 இடங்களில் நேற்று 696 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 23 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

கங்கைகொண்டான் முகாமில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கழிப்பறை, குடி தண்ணீர் வசதி கள் இல்லை என்றும் புகார் கூறப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வரக்கூடிய இடத்தில் ஒரு 20 லிட்டர் கேனில் தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

சோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. அதிலும் தனி மனித விலகல் கடைபிடிக்கப்படவில்லை. தொற்று இருப்பவர்களின் அருகில் மற்றவர்கள் நெருக்கமாக நிற்பதால் அனைவருக்கும் தொற்று பரவும் அபாயமும் உள்ளது.

நெல்லைக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், போதுமான எண்ணிக்கையில் சோதனைக் கருவிகள் இல்லாததாலும் தற்போது வருபவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்படவில்லை. அவர்கள் ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இது சமூக பரவலுக்கு வழி வகுக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad