கரையைக் கடக்கும் அம்பன் புயல்- ஒடிசா, மே.வங்கத்தில் சூறாவளிக்காற்று, கனமழை; அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது

அம்பன் புயல்- ஒடிசா, மே.வங்கத்தில் சூறாவளிக்காற்று, கனமழை
வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பன் புயல் இன்று மாலை வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்னர் வங்கக்கடலில் உருவான இந்த புயல் வலுவிழந்து தற்போது கரையை கடக்க தயாராகி வருகிறது.

இந்நிலையில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக மூன்று லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக வங்கதேசம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலின் கடுமையான புயலில் ஒன்றான அம்பன் புயல் மேற்கு வங்கத்தின் திகா மற்றும்  வங்காளதேசத்தின்  ஹதியாவைக் கடக்கும்போது மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 4 மணி முதல் 6 மணிக்குள் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் அச்சுறுத்தலால், நாளை காலை வரை கொல்கத்தாவுக்கு சிறப்பு விமானங்கள் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோர பகுதிகளில், கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஒடிசாவின் பரதிப் மற்றும்  மேற்கு வங்காளத்தில் உள்ள 24 பர்கனாஸ் மாவட்டத்தில் காலை முதல் மிக கனமழை கொட்டி வருகிறது. மேற்கு வங்காளத்தில் உள்ள 7 மாவட்டங்களில் புயல் பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசாவின் பரதிப் நகரில் இருந்து 110 கி.மீட்டர் தொலைவில்  காலை 8 மணியளவில் மையம் கொண்டிருந்த  அம்பன் புயல், மணிக்கு 18- முதல் 19 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.  இதனால், மணிக்கு 102 கி.மீட்டர் வேகத்தில் தற்போது சூறைக்காற்று வீசி வருகிறது. அடுத்த 6 முதல் 8 மணி நேரம் மிகவும் முக்கியமானது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன? பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது
மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற இருக்கிறது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில்,  நாட்டில் கொரோனா பாதிப்பை குறைக்க மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தியாவில் 4-வது முறையாக பிறப்பிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதி வரை அமலில் உள்ளது.  இதற்கு மத்தியில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார சிறப்பு தொகுப்பையும்  பிரதமர் அறிவித்தார். எனவே, இந்த திட்டங்கள் மூலம் பொருளாதாரத்தை மீட்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத்தெரிகிறது.

பொருளாதாரத்தை சீர் செய்ய, மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி, பொருளாதாரத்தை மீட்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad