Matrimony OTT-Platforms Jobs Coupons Business

மதுபோதை கண்ணை மறைத்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து குழந்தை விழுந்தது கூட தெரியாமல் சென்ற தந்தை; மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த விபத்தில் காதலி பலி வாலிபருக்கு தீவிர சிகிச்சை

மதுபோதை கண்ணை மறைத்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து குழந்தை விழுந்தது கூட தெரியாமல் சென்ற தந்தை
ஜெயங்கொண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து குழந்தை சாலையில் விழுந்தது கூட தெரியாமல், குடிகார தந்தை சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் உற்சாகமடைந்தனர். மது குடிப்பவர்களால் தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்கள் அரங்கேறுவதாக செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மதுபோதையில் தொழிலாளி ஒருவர், தனது மகன் கீழே சாலையில் விழுந்தது கூட தெரியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார். இந்த சம்பவம் பற்றி விவரம் வருமாறு:-

ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவாமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு அன்பு அமுதன் (4), அகிலேஸ்வரன் (1) என 2 மகன்கள் உள்ளனர். செல்வம் திருப்பூரில் குடும்பத்தினருடன் தங்கியிருந்து, அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், செல்வம் திருப்பூரில் இருந்து தனது குடும்பத்தினரை அரியலூர் மாவட்டம் கண்டியங்கொல்லை கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு அழைத்து வந்து, தங்கி உள்ளார்.

மது பழக்கத்திற்கு அடிமையான செல்வம், நேற்று முன்தினமும் மது குடித்துள்ளார். பின்னர் அவர் செல்போனை பழுது பார்ப்பதற்காக அன்று மாலை மோட்டார் சைக்கிளில் மூத்த மகனான அன்பு அமுதனை அழைத்துக்கொண்டு ஜெயங்கொண்டம் கடைவீதிக்கு சென்றுள்ளார். பின்னர் கடையில் செல்போன் பழுதை சரி செய்து வாங்கிக்கொண்டு, ஜெயங்கொண்டம் அருகே உள்ள கடாரங்கொண்டான் கிராமத்தில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றார். ஏற்கனவே மது குடித்ததால் போதையில் இருந்த செல்வம், துக்க வீட்டிலும் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக தெரிகிறது.

பின்னர் அவர் தனது மகனுடன் கண்டியங்கொல்லைக்கு புறப்பட்டார். அப்போது அளவுக்கு அதிகமான போதையில் இருந்ததால் அவரை இரவோடு இரவாக செல்லவேண்டாம். இங்கே தங்கிவிட்டு காலையில் செல்லுங்கள் எனக்கூறி உறவினர்கள் தடுத்துள்ளனர். ஆனால் அதை பொருட்படுத்தாத செல்வம் இரவு 10 மணியளவில் தனது மகன் அன்பு அமுதனை மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்கின் மீது அமர வைத்துக்கொண்டு கண்டியங்கொல்லைக்கு புறப்பட்டுள்ளார். சிதம்பரம்-ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் புதுச்சாவடி அருகே சென்றபோது, செல்வத்திற்கு மதுபோதை அதிகமானதால் மோட்டார் சைக்கிளை நிலை தடுமாறி ஓட்டி சென்றுள்ளார். அப்போது, குழந்தை அன்பு அமுதன் மோட்டார் சைக்கிளில் இருந்து வழுக்கி சாலையில் விழுந்தான். தனது மகன் கீழே விழுந்தது கூட தெரியாமல் செல்வம் மோட்டார் சைக்கிளை தொடர்ந்து ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது அந்த வழியாக சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ராஜா, ராஜலிங்கம், நல்லசிவம், தினேஷ் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களில் வந்துள்ளனர். அவர்கள், குழந்தை ஒன்று சாலையில் படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அந்த குழந்தையை மீட்ட அவர்கள் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து அவர்கள் ஜெயங்கொண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார். இதுகுறித்து கேள்விப்பட்ட செல்வத்தின் மனைவி மகாலட்சுமி மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தை அன்பு அமுதன் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறான்.

அதன்பிறகு குழந்தையின் தந்தை செல்வத்தை போலீசார் தேடியபோது, குழந்தை விழுந்து கிடந்த இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் சாலையோரத்தில் உள்ள வடிகால் அருகே முட்புதரில் மோட்டார் சைக்கிளுடன் செல்வம் சுய நினைவின்றி விழுந்து கிடந்தார். பின்னர் அவரும் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தையை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சின்னவளையம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் குழந்தையின் குடும்பத்தினர், உறவினர்கள் பாராட்டினர்.

மோட்டார் சைக்கிளில் இருந்து, மகன் சாலையில் விழுந்தது கூட தெரியாமல் குடிபோதையில் தந்தை சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலி
சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள பேட்டோடை மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் ஏழுமலை மகன் வேலு (வயது 30), ஆறுமுகம் மகன் அரவிந்தன் (28). இருவரும் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சொந்த வேலை காரணமாக ஒரு மோட்டார் சைக்கிளில் கடலூர் சென்றுவிட்டு, மாலையில் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

புதுச்சத்திரம் அடுத்த திருச்சோபுரம் உப்பனாற்று பாலத்தில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் வேலு, அரவிந்தன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் இதுபற்றி புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் நண்பர்கள் 2 பேர் பலியான சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி டிரைவர் சாவு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்புத்தூர் கல்லுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் மாணிக்கம் (வயது 45). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார்.

நேற்று அதிகாலை இருங் காட்டு கோட்டையில் உள்ள நிறுவனத்தில் இருந்து பொருட்களை லாரியில் ஏற்றி கொண்டு மாணிக்கம் சுங்குவார்சத்திரம் நோக்கி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பென்னலூரில் உள்ள சுங்கச்சாவடியை லாரி கடந்தபோது பக்க வாட்டில் லாரி உரசியது. டிரைவர் மாணிக்கம் லாரியின் கதவை திறந்து எட்டி பார்த்தபோது தவறி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் அதே லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்க ாக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே நள்ளிரவில் லாரி மோதி 2 வாலிபர்கள் பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்குத்தெருவை சேர்ந்தவர் ராபிக் அகமது. அவருடைய மகன் செய்யது இப்ராகிம் (வயது 21). டிரைவர். கீழக்கரை சாலைத்தெருவை சேர்ந்தவர் சகுபர் சாதிக் மகன் அப்ரிதீன் (21). தற்போது ராமநாதபுரம் வைகை நகரில் குடியிருந்து வந்தார். இவர்கள் இருவரும் தினமும் ராமநாதபுரம் வந்து நண்பர்களுடன் சேர்ந்து நோன்பு திறந்து தொழுகை நடத்திவிட்டு ஊருக்கு திரும்பி செல்வது வழக்கம்.

இவ்வாறு நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் இருவரும் கீழக்கரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். திருப்புல்லாணி அருகே உப்பளம் பகுதியில் சென்றபோது தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உரம் ஏற்றிக்கொண்டு பட்டுக்கோட்டை செல்வதற்காக ஒரு லாரி வந்தது.

அந்த லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற செய்யது இப்ராகிம், அப்ரிதீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பலியானவர்களின் உடல்களை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பலியான செய்யது இப்ராகிமின் தந்தை ராபிக் அகமது அளித்த புகாரின் அடிப்படையில் திருப்புல்லாணி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான புதுக்கோட்டை வர்த்தக ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன் சொரிமுத்துவை (27) கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்த விபத்தில் காதலி பலி வாலிபருக்கு தீவிர சிகிச்சை
மூலனூர் அருகே உள்ள செம்மொழிநகரை சேர்ந்த செல்வக்குமாரின் மகன் சரத்குமார் (வயது 27). இவர் ஒரு நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரும், மூலனூர் அருகே உள்ள கருப்பணவலசை சேர்ந்த சக்திவேல் என்பவருடைய மகள் ஆர்த்திகாவும் (18) காதலித்து வந்துள்ளனர். இவர்களுடைய காதல் விவகாரம் ஆர்த்திகாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் பயன்படுத்தும் செல்போனை பெற்றோர் பிடுங்கிக்கொண்டு, அவரை திருவாரூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்த்திகா செய்வது அறியாமல் திகைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆர்த்திகாவுக்கு செல்போன் கிடைத்துள்ளது. உடனே தனது காதலனை தொடர்பு கொண்டு தன்னை அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து காதலன் சரத்குமார், ஒரு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு காதலியை அழைத்து செல்ல கருப்பணவலசு சென்றார். பின்னர் அங்கு காதலியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ராக்கியாபாளையம் பிரிவில் சென்று கொண்டிருந்தார். அப்போது வளைவில் திரும்பும்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது. அப்போது இருவரும் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆர்த்திகா மட்டும் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆர்த்திகா இறந்தார். கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சரத்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து மூலனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad