எனக்கு எந்த நோயும் இல்லை - அமித்ஷா அறிக்கை; கூகுள், பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய ஓராண்டுக்கு அனுமதி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
எனக்கு எந்த நோயும் இல்லை - அமித்ஷா அறிக்கை
சமூக வலைத்தளத்தில் வெளியான தவறான தகவலை மறுத்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிக்கை வெளியிட்டார். அதில் அவர், “எனக்கு எந்த நோயும் இல்லை, நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்” என கூறி உள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்தநிலையில் யாரோ விஷமிகள், அமித்ஷா தனக்கு பயங்கரமான நோய் தாக்கி இருப்பதாக கூறி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டதுபோல போலியாக ‘ஸ்கிரீன் ஷாட்’ தயாரித்து அதை மற்றொரு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர்.

இந்த தகவல், காட்டுத்தீ போல பரவியது. ‘ஸ்கிரீன் ஷாட்’ என்பதால் அமித்ஷாவின் டுவிட்டர் கணக்கில் இருந்து வெளியிடப்பட்ட தகவல்தான் என அந்த போலியான தகவலை பலரும் உண்மை என நம்பி விட்டனர். இது பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி விட்டது.

இதுகுறித்து அமித்ஷாவின் கவனத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கடந்த சில நாட்களாக சில நண்பர்கள் எனது உடல்நிலை குறித்து பல சுவாரசியமான வதந்திகளை சமூக ஊடகங்கள் வழியாக பரப்பி உள்ளனர். எனது மரணத்துக்காகவும் பலர் ‘டுவிட்’ செய்து, பிரார்த்தனை செய்துள்ளனர்.

இப்போது நாடு கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்து போராடி வருகிறது. நாட்டின் உள்துறை மந்திரி என்ற வகையில், நான் இரவு நீண்ட நேரம் வரையிலும், எனது வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால், இதில் கவனம் செலுத்தவில்லை.

இது என் கவனத்துக்கு வந்தபோது, இப்படி வெளியிட்டவர்கள் வேண்டுமானால் தங்கள் கற்பனை இன்பத்தை அனுபவிக்கட்டும் என அனுமதிக்க நினைத்தேன். அதன் காரணமாக நான் எந்த விளக்கத்தையும் வெளியிடவில்லை.

ஆனால் எனது கட்சியின் லட்சக்கணக்கான தொண்டர்களும், என் நலம் விரும்பிகளும் கடந்த 2 நாட்களாக தங்களது ஆழ்ந்த கவலையை தெரிவித்தனர். எனவே இன்று நான் இந்த விளக்கத்தை அளிக்கிறேன். நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்தவொரு நோயும் இல்லை.

இந்து மத நம்பிக்கைகள்படி, இத்தகைய வதந்திகள் ஒரு நபரை ஆரோக்கியம் ஆக்குகின்றன. எனவே இந்த வதந்திகளை பரப்பியவர்கள் இதை ஒதுக்கி வைத்து விட்டு தங்கள் சொந்த வேலையை மனதில் கொள்வார்கள், என்னையும் என் வேலையை செய்ய விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

என் உடல்நிலை குறித்து கவலை தெரிவித்து, விசாரித்த கட்சி தொண்டர்கள், நலம் விரும்பிகள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கும நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் மீது எனக்கு எந்த தவறான உணர்வுகளும் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அமித்ஷா கூறி உள்ளார்.

அமித்ஷா குறித்து தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்பியதற்கு பாரதீய ஜனதா கட்சி தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “உள்துறை மந்திரி அமித்ஷாவின் உடல்நிலை பற்றி மனிதாபிமானமற்ற கருத்துகளை வெளியிட்டது கடும் கண்டனத்துக்கு உரியது. யாரைப் பற்றியும் இதுபோன்ற வதந்தியை பரப்பும் மக்களின் மனநிலையைத்தான் இது காட்டுகிறது. இதற்காக கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், அவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்குமாறு கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.

இதற்கிடையே அமித்ஷாவின் உடல்நிலை குறித்து தவறான தகவலை பரப்பியதாக ஆமதாபாத் போலீசார் நேற்று 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர்கள் ஆமதாபாத்திலும், பாவ் நகரிலும் பிடிபட்டதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஆமதாபாத் போலீஸ் சிறப்பு கமிஷனர் (குற்றப்பிரிவு) அஜய் டோமர் தெரிவித்தார்.

அவர்கள் மீது தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கொரோனா அச்சுறுத்தல்; கூகுள், பேஸ்புக் நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய ஓராண்டுக்கு அனுமதி
கொலைகார கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வருகிறது. இந்த கொடிய வைரஸ் உயிரிழப்புகளை மட்டும் இன்றி வேலையிழப்பு, பொருளாதார சரிவு போன்ற பல பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பாலான நாடுகள் தேசிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தி, மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க சொல்லி வலியுறுத்தி வருகின்றன.  இதனால் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்துள்ளன. ஊரடங்கு முடியும் வரையிலும் வீட்டிலிருந்தே பணிபுரியும் நடைமுறையை நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் என தெரிகிறது.

இந்த நிலையில் கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கும் காலத்தை நீட்டித்துள்ளன.  கொரோனா பாதிப்பு அதிகமானதை தொடர்ந்து, ஜூன் 1ந்தேதி வரை ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என கூகுள் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால் தற்போது வாய்ப்பு இருப்பவர்கள், இந்த ஆண்டு முழுவதுமே வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூகுள் தெரிவித்துள்ளது.

அதேபோல் ஜூலை 6ந்தேதி வரை வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதி வழங்கியிருந்த பேஸ்புக் நிறுவனம், பணியாளர்கள் விரும்பினால் இந்த ஆண்டு இறுதி வரையிலும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என அறிவித்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad