மாவட்டத்தில் 95 சதவீத கடைகள் திறப்பு சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பு; முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு ‘சீல்’ - கலெக்டர்
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
மாவட்டத்தில் 95 சதவீத கடைகள் திறப்பு சாலைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்புநாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்தனர்.
இதுவரை காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்து இருந்தன. ஆனால் தமிழக அரசு நேற்று முன்தினம் டீக்கடைகள், பெட்டிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், எலக்ட்ரிக்கல் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஜெராக்ஸ் கடைகள், டைல்ஸ் கடைகள், மரக்கடைகள் உள்ளிட்ட 34 வகையான கடைகளை திறக்க அனுமதி அளித்தது.
இதையொட்டி நேற்று நாமக்கல் நகரில் பெட்டிக்கடை, டீக்கடை, கண்ணாடி கடை உள்ளிட்ட 34 வகையான கடைகளும் திறக்கப்பட்டன. 1½ மாதங்களுக்கு பிறகு நேற்று கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் கூட்டமும் அதிகமாக இருந்தது. இதேபோல் வாகன போக்குவரத்தும் அதிகமாக இருந்தது.
டீக்கடைகள்
இருப்பினும் கடைவீதியில் நகை கடைகள், ஜவுளி கடைகள் திறக்கப்படவில்லை. எனவே அப்பகுதி வெறிச்சோடி கிடந்தது. இதேபோல் சலூன்கள், அழகு நிலையங்கள் மற்றும் மசாஜ் சென்டர்கள் திறக்கப்படவில்லை.
பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டீக்கடைகளை பொறுத்த வரையில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்ற அரசின் உத்தரவால் விற்பனை சற்று மந்தமாகவே காணப்பட்டது.
அபராதம்
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 95 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்பட்டன. இதனால் இயல்பு வாழ்க்கை மீண்டும் திரும்பியபோல இருந்தது. இருப்பினும் ஆட்டோ, பஸ் போன்ற வாகனங்கள் இயக்கப்படவில்லை. ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் முக கவசம் அணியாமல் வந்தவர்கள் மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறிய நபர்களுக்கு அபராதம் விதித்தனர்.
அரசின் உத்தரவுபடி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் தனியார் அலுவலகங்களும் குறைந்த பணியாளர்களுடன் செயல்பட தொடங்கியது.
ராசிபுரம்
ஊரடங்கு தளர்வு காரணமாக டீக்கடைகள் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் நேற்று ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெரும்பாலான டீக்கடைகள் திறக்கப்படவில்லை. கடையில் உட்கார்ந்து டீ, காபி குடிக்கக்கூடாது என்றும் பார்சல் மட்டுமே வினியோகம் செய்ய வேண்டும் என்பதால் கடைகள் திறக்கப்படவில்லை. போக்குவரத்தும் இல்லை. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் என்றும் அதனால் வியாபாரம் சரியாக நடக்காது என்றும் கருதி கடைகள் திறக்கப்படவில்லை. பழக்கடைகளும் திறக்கப்படவில்லை. ஓரிரு பெரிய ஓட்டல்கள் திறந்து வைத்து பார்சல் மட்டும் வழங்கினர். சிறிய ஜவுளிக்கடைகள், செல்போன் கடைகள், கெடிகார விற்பனை கடைகள் உள்பட அனுமதிக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டன. ஓரிரு பீடாக்கடைகள் திறந்து இருந்தன. வணிக நிறுவனங்கள் திறந்து வைத்திருந்தாலும் அதிகளவில் பணியாளர்கள் வரவில்லை. வணிக நிறுவனங்களில் சமூக விலகல் கடைபிடித்தனர். பெரும்பாலானவர்கள் முககவசம் அணிந்தே வந்திருந்தனர். அதேபோல் சாலைகளில் சென்றவர்களில் பெரும்பாலும் முககவசம் அணிந்து சென்றனர்.
விவசாயிகளுக்கு, வெட்டி வேர் மதிப்பு கூட்டுதல் பயிற்சி கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் சுமார் 1,000 ஏக்கரில் வெட்டிவேர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் வெட்டிவேர் திண்டுக்கல், கோவை மற்றும் கர்நாடக மாநிலம் உடுப்பி ஆகிய நகரங்களில் இயங்கி வரும் நறுமண பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
தற்போது ஊரடங்கு காலமாக இருப்பதால் மேற்கண்ட தொழிற்சாலைகள் இயங்காததால் வெட்டிவேர் கொள்முதல் செய்வதற்கு யாரும் வரவில்லை. இதனால் வெட்டிவேர் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளது எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. வெட்டிவேர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வெட்டிவேரை மதிப்புக் கூடுதல் செய்து திரைச்சீலைகள், மாலைகள், தலையணை மற்றும் தேய்ப்பான் ஆகியவை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தடுப்பை கருத்தில் கொண்டு அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில் வெட்டி வேக்ை- கொண்டு பிரத்யேகமாக முக கவசங்களை தயாரிக்க விவசாயிகளும் அவர்களை சார்ந்த தொழில் முனைவோரும் முன்வந்துள்ளனர்.
கடன் அளவு நிர்ணயம்
இதன் மூலம் விவசாயிகளுக்கு வருமானம் கிடைப்பதுடன் பலருக்கு மறைமுகமாக வேலை வாய்ப்பும் கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக விவசாயிகள் மூலம் தயாரிக்கப்பட்ட 2 ஆயிரம் வெட்டிவேர் முக கவசங்களை கொள்முதல் செய்து காவல் துறைக்கு வழங்கப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக தோட்டக் கலைத்துறை மூலம் வெட்டிவேர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பயிர் கடன் வழங்க வெட்டிவேர் சாகுபடிக்கு தற்போது ரூ.5 ஆயிரம் கடன் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப சாகுபடி செலவினங்களை கருத்தில் கொண்டு உயர்த்தி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் மற்ற பகுதிகளில் கொள்முதல் வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து விவசாயிகளிடம் இருந்து வாங்கப்பட்ட 2 ஆயிரம் வெட்டிவேர் முக கவசங்களை கலெக்டர் அன்பு செல்வன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபிநவிடம் வழங்கினார். அப்போது வேளாண்மை இணை இயக்குனர் முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) பூவராகன் தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுரேஷ் ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
அந்தியூர் தனிமை முகாமில் கலெக்டர் ஆய்வு
வெளிமாநிலத்தில் இருந்து அந்தியூர் பகுதிக்கு வந்த 15 பேர் அந்தியூர் செல்லம்பாளையம் மாதிரி பள்ளி வளாகத்தில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், செல்லம்பாளையத்தில் உள்ள தனிமை முகாமுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தங்கும் வசதி, உணவு மற்றும் குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார். அப்போது அங்குள்ளவர்களிடம் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரும் வரை தனிமை முகாமில் தங்கி இருக்க வேண்டும் என கலெக்டர் சி.கதிரவன் கேட்டுக்கொண்டார்.
ஆய்வின்போது அந்தியூர் தாசில்தார் மாலதி, மண்டல துணை தாசில்தார் சரவணன், அந்தியூர் வட்ட வழங்கல் அதிகாரி அழகேசன், சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன், எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சரவண பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தில் 45 ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் அக்கம்மாபுரம் கிராமத்தில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார துறையின் சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் குடிமராமத்து பணிகள் திட்டத்தின் கீழ் தூர் வாரும் திட்டப்பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
குடிமராமத்து பணி என்பது மக்கள் தங்கள் உழைப்பு மற்றும் பொருள் பங்களிப்பு மூலம் நீர் ஆதாரங்களை சீரமைத்து நிர்வகித்தல் ஆகும். தமிழ்நாட்டில் பழங்காலத்தில் நீர்நிலைகளை புனரமைக்க அந்தந்த பாசன அமைப்பின் விவசாயிகளால் கூட்டமாக குடிமராமத்து என்ற பெயரில் சீரமைப்பு பணிகள் செய்து நீர் மேலாண்மை சிறப்பாகவும் செம்மையாகவும் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கும் நோக்கத்துடன் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம், மணிமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் விவசாயிகள் முன்னிலையில் குடிமராமத்து பணி தொடங்கி வைக்கப்பட்டது.
45 ஏரிகள்
கடந்த 2016-17-ம் ஆண்டில் முதற்கட்டமாக காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ரூ.1 கோடியே 63 லட்சம் மதிப்பில் 22 ஏரிகளில் தூர்வாரும் பணிகள் தொடங்கி சிறப்பாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 2-வது கட்டமாக, கடந்த 2017-18-ம் ஆண்டில் காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ரூ.2 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டு தொகைக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு 12 ஏரிகள் அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் பணிகளை தொடங்கி வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது. 3-வது கட்டமாக 2019-20-ம் ஆண்டில் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு ரூ.5 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டு தொகைக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு 11 ஏரிகளில் அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் பணிகள் தொடங்கி செய்து முடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் இதுவரை குடிமராமத்து பணிகள் மூலம் ரூ.9 கோடியே 73 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 45 ஏரிகள் முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.
4-வது கட்டமாக...
இந்த குடிமராமத்து திட்டப்பணிகளில் 4-வது கட்டமாக, காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு ரூ.17 கோடியே 31 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டுத் தொகைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 32 ஏரிகளில் அந்தந்த விவசாய சங்கங்கள் மூலம் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் அக்கம்மாபுரம் கிராமத்தில் 2020-21-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் அக்கமாபுரம் ஏரிக்கரையில் உள்ள முள்செடிகள் அகற்றி பலப்படுத்துதல், மதகுகளை சீரமைத்தல் மற்றும் வரவு கால்வாயை தூர்வாரி அகலப்படுத்துதல் போன்ற பணிகளை வடகிழக்கு பருவ மழை காலத்திற்கு முன்பாக முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏரி தண்ணீரை பயன்படுத்தும் அக்கம்மாபுரம் ஏரி பாசன விவசாய சங்கம் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. பழனி, கண்காணிப்பு என்ஜினீயர் முத்தையா, பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) செயற்பொறியாளர் திலகம், உதவி செயற்பொறியாளர்கள் விஜயகுமார், பாஸ்கரன், இளநிலை என்ஜினீயர் மார்கண்டேயன், உதவி என்ஜினீயர் பாஸ்கரன், அக்கம்மாபுரம் ஏரி சங்க தலைவர் பழனி, ஒப்பந்ததாரர் எடையார் பாக்கம் மூர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா பாதித்த நபர் குணமாகி 14 நாட்கள் ஆனதால்தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் இன்று முதல் கட்டுப்பாடுகள் நீக்கம்
தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் கொரோனா பாதித்த நபர் குணமாகி 14 நாட்கள் ஆனதால் அங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் நீக்கம் செய்யப்படுவதாக கலெக்டர் பிரசாந்த் வட நேரே கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா பரிசோதனை
குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களபணியாளர்கள் மூலமாகவும், ஆரல்வாய்மொழி சோதனை சாவடி சுகாதாரப் பணியாளர்கள் மூலமாகவும் 6,306 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
கொரோனா நோய்தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 16 பேர் பாதிப்பில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்த நபர்கள் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தேங்காப்பட்டணம் தோப்பு
குமரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் இருந்த தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் கடைசி நோயாளி குணமடைந்து 14 நாட்கள் ஆகியிருந்த நிலையில் குணமடைந்த அந்த நபருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு நோய் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டது.
எனவே தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறது.
பெட்ரோல் விற்பனை நிலையங்கள்
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் 24 மணி நேரமும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் இயங்கலாம். டீக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் மொத்தம் 300 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கை மீறியதாக நேற்று 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மூன்று வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தத்தில் இதுவரை 7,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 5,769 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துக்க, மருத்துவ காரியங்களுக்கு செல்வோருக்கு 2 மணி நேரத்தில் இ-பாஸ் வழங்கப்படும் கலெக்டர் தகவல்
கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது 34 வகையான கடைகள் திறப்பதற்கு ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. இன்னும் முழுமையான தளர்வு கிடைக்காத நிலையில் எந்தெந்த தரப்பினருக்கு தளர்வு செய்வது என்பது குறித்து பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விசைத்தறி உரிமையாளர்களின் கருத்துக்கேட்பு கூட்டம் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடைபெற்றது.
திருச்செங்கோடு உதவி கலெக்டர் அலுவலகத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விசைத்தறி உரிமையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர். சமூக விலகல், முககவசம் அணிதல் மற்றும் கிருமிநாசினிகள் பயன்படுத்தி தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து, அரசு கூறும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்வதாக விசைத்தறியாளர்கள் உறுதியளித்தனர். விசைத்தறி கூடங்களில் ஒரு ஷிப்டில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் கணவன், மனைவியாக இருப்பார்கள். எனவே விசைத்தறி கூடங்கள் இயக்குவதில் எந்த பிரச்சினையும் வராது என்று கலெக்டரிடம் விசைத்தறியாளர்கள் எடுத்துக்கூறினர்.
2 மணி நேரத்தில் வழங்கப்படும்
இதனையடுத்து நிருபர்களை சந்தித்து பேசிய கலெக்டர் கூறியதாவது:- நாளை (இன்று) கலெக்டர் அலுவலகத்தில் வியாபாரிகளுடன் கருத்துகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அரசு 34 கடைகளுக்கு விலக்கு அளித்து ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தியுள்ளது. சமூக விலகல் மற்றும் முககவசம் இல்லாமல் செயல்படும் கடைகள் உடனடியாக பூட்டி ‘சீல்’ வைக்கப்படும் என கூறினார்.
அப்போது இ-பாஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக நிருபர்கள் கேட்டதற்கு, துக்க காரியங்களுக்கு செல்வோருக்கும், மருத்துவ காரியங்களுக்கு செல்வோருக்கும் இரண்டு மணி நேரத்தில் இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார். கூட்டத்தில் உதவி கலெக்டர் மணிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டார்.
மோகனூர்
மராட்டிய மாநிலத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் மோகனூர் வளையப்பட்டிக்கு வந்த 13 தொழிலாளர்கள் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இவர்களுக்கு உணவு மற்றும் சுகாதாரமான குடிநீர், சுகாதார துறையினர் மூலம் ஜிங்க் மாத்திரைகள், வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகள், ஹோமியோபதி மருந்துகள் வழங்கப்பட்டன.
முகக்கவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் கடைகளுக்கு ‘சீல்’ - கலெக்டர் எச்சரிக்கை
தமிழகத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர பிற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் வழங்கி அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். டீக்கடைகள், பேக்கரிகள் மற்றும் உணவகங்களில் பார்சல் மட்டும் வழங்க வேண்டும். தனிக்கடைகள் காலை 10.30 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள், மின்சாதன பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், செல்போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள், மோட்டார் எந்திரங்கள், வீட்டு உபயோக எந்திரங்கள் மற்றும் பொருட்கள், ஊரக பகுதிகளில் மட்டும் சிறிய ஜவுளிக்கடைகள்(குளிர்சாதன வசதி இல்லாதவை) உள்பட மொத்தம் 34 வகையான கடைகள் செயல்படலாம். மேலும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளவை 24 மணி நேரமும் இயங்கும்.
சலூன்கள், அழகு நிலையங்கள், ஸ்பாக்கள் இயங்கக் கூடாது. அனுமதிக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களிடம் தனிநபர் இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமிநாசினி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளிக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கடைகளுக்கு முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களுக்கு பொருட்கள் வழங்கக்கூடாது.
இந்த நடைமுறையை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும். மார்க்கெட்டுகள், வணிக வளாகங்கள் திறக்க அனுமதி இல்லை. இதுதவிர மற்ற கடைகள் திறப்பது தொடர்பாக மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். நீலகிரியில் தேயிலை தொழிற்சாலைகளில் அனைத்து பணிகளுக்கும் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்ஊரடங்கு உத்தரவை மீறி மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு
ஊரடங்கு உத்தரவையும் மீறி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தனர்.
விலக்கப்படாத ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 17-ந்தேதி வரை அமலில் உள்ளது. பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொள்வதற்கு வசதியாக 34 வகையான கடைகள் திறப்பதற்கு மட்டும் தளர்வு வழங்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் ஊரடங்கு, 144 தடை உத்தரவுகளை மீறி நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நாம் தமிழர் தொழிலாளர் நல சங்கத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீசாருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகளை மட்டும் மனு கொடுப்பதற்கு அனுமதி வழங்கினர்.
ஆட்டோ ஓட்ட அனுமதி
அவர்கள் கொடுத்த மனுவில் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள் வங்கியில் கடன் பெற்று தான் ஆட்டோ ஓட்டி வருகிறார்கள். 40 நாட்களுக்கும் மேலாக ஆட்டோ ஓடாததால் குடும்பத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பதோடு வங்கியில் வாங்கியகடனையும் கட்ட முடியாமல் தவித்து வருகிறோம். எனவே ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இதே போல் அண்ணா டூரிஸ்ட் வேன் ஓட்டுனர் நல சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது அந்த வழியாக கலெக்டரின் கார் வந்தது. ஏராளமானவர்கள் திரண்டு நின்றதால் கலெக்டர் எஸ்.சிவராசு காரை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினார். கலெக்டரிடம் அவர் கள் மனு கொடுத்தனர்.
இழப்பீடு
அந்த மனுவில் திருச்சி மாவட்டத்தில் சுமார் 2,500 சுற்றுலா கார், வேன் டிரைவர்கள் உள்ளனர். ஊரடங்கு உத்தரவினால் நாங்கள் 40 நாட்களுக்கும் மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம். எங்களுக்கு நல வாரியத்தில் இருந்தும் உதவி தொகை எதுவும் வரவில்லை. எனவே நாங்கள் ஏற்கனவே கட்டிய சாலைவரி, இன்சூரன்ஸ் தொகைகளில் இருந்து எங்களுக்கு இழப்பீடு வாங்கி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இதுபோல் சொந்த ஊருக்கு திரும்பி செல்ல அனுமதிக்க கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த பானிப்பூரி தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். ஒரே நேரத்தில் திரண்டு வந்த இவர்களால் கலெக்டர் அலுவலக பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கார் டிரைவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்: சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட கார் டிரைவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கலெக்டர் ஷில்பாவிடம், சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்திந்திய வாகன ஓட்டுநர்கள் பேரவையின் நெல்லை மாவட்ட தலைவர் முருகதாஸ் தலைமையிலும், நெல்லை மாவட்ட சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மற்றும் நெல்லை மாநகர இனோவா ஓட்டுநர் நலச்சங்க தலைவர் ரீகன் தலைமையிலும், உரிமை குரல் ஓட்டுனர் தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் தலைமையிலும் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம் தனித்தனியாக கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டன.
அந்த மனுக்களில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுனர்கள் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் மட்டும் சுமார் 35 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இதில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனர்கள் மட்டுமே நல வாரியத்தில் பதிவு செய்தும், அதன் பலன்களை அனுபவித்தும் வருகிறார்கள். வாடகை கார், வேன் ஓட்டுனர்களுக்கு அரசிடம் இருந்தோ, பிற அமைப்புகளிடம் இருந்தோ எந்தவொரு நலத்திட்ட உதவிகளும் கிடைக்கவில்லை.
மத்திய, மாநில அரசுகள் அறிவித்த பொது ஊரடங்கு அறிவிப்பால் கடந்த 47 நாட்களாக வாடகை வாகனங்கள் இயக்கவில்லை. இதனால் எங்கள் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. கார், வேன் ஓட்டுனர்களின் குடும்பங்கள் வறுமையில் உள்ளன.
வாகனங்கள் இயங்கும் போது சாலை வரி, இன்சூரன்ஸ், கடன் தவணை, வாகன பராமரிப்பு இதுபோன்ற செலவுகளால் சிரமப்பட்டு கொண்டு இருந்தோம். இந்த நிலையில் இயங்காத வாகனத்துக்கு சாலை வரி, இன்சூரன்ஸ், கடன் தவணை, அதற்கு அபராத வட்டி, வாகன பராமரிப்பை எப்படி சமாளிக்க முடியும்.
கொரோனா வைரஸ் பேரிடராக அறிவிக்கப்பட்டு உள்ளது. கார் மற்றும் வேன் டிரைவர்களுக்கு உரிய நிவாரண உதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இயங்காத வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா வைரசால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளையும் குறைந்த பட்சம் 3 மாதங்கள் மூட வேண்டும். ஏற்கனவே காலாவதியான வாகனங்களின் தகுதி சான்று, பர்மிட், பேட்ஜ், லைசன்ஸ், இன்சூரன்ஸ் ஆகியவற்றை புதுப்பித்து கொள்ள வருகிற செப்டம்பர் 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்க வேண்டும்.
ஆழ்வார்திருநகரி அருகே, கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் கலெக்டர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 27 பேரில், 26 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு மூதாட்டி உயிரிழந்தார். இந்த நிலையில் ஆழ்வார்திருநகரி அருகே மழவராயநத்தத்தைச் சேர்ந்த லாரி டிரைவர், ஸ்ரீவைகுண்டம் அருகே சேரகுளத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர், எப்போதும்வென்றான் அருகே ஆதனூரைச் சேர்ந்த பெண் ஒருவர் என மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து சுகாதார துறையினர் மேற்கண்ட கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். அந்த இடங்களில் வெளிநபர்கள் யாரும் நுழையாத வகையில், போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆழ்வார்திருநகரி அருகே மழவராயநத்தம் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் வசிக்கும் நபர்களிடம், வீடுகளில் இருந்து வெளியே வரக்கூடாது, சோப்பு மூலம் அடிக்கடி கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர் களிடம் கூறியதாவது:-
ஒத்துழைப்பு
கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு இலவச ரேஷன் பொருட்களை தன்னார்வலர்கள் மூலம் வழங்கி வருகிறோம். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் நடமாடக் கூடாது. இதுகுறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து அனுமதியின்றி வரும் நபர்களை கண்டறிய மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரசை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசின் வழிகாட்டு முறைகளை பொதுமக்கள் கடைபிடித்து முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊரக வேலைவாய்ப்பு
பின்னர் அவர், ஆதிநாதபுரம் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர்கள் பணியாற்றியதை பார்வையிட்டு, வருகை பட்டியல், பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது அவர், தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியாற்ற வேண்டும். தினமும் முக கவசங்களை புதிதாக அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
திருச்செந்தூர் உதவி கலெக்டர் தனப்பிரியா, ஏரல் தாசில்தார் அற்புதமணி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் முத்துராமன், ஆழ்வார்திருநகரி யூனியன் ஆணையாளர்கள் பாக்கிய லீலா, கருப்பசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில், பயன்படுத்தி வீசப்பட்ட முக கவசங்கள் - அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வெளியில் வரும்போது முக கவசங்களை அணிந்து தான் வருகின்றனர். சிலர் தற்காப்புக்காக கையுறைகளும் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தப்பட்ட முக கவசங்கள், கையுறைகளை பொது இடங்களில் வீசக்கூடாது. அதனை முறையாக சேகரித்து துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று சுகாதார துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வேலை நாட்களில் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காணும் இடங்களில் எல்லாம் பயன்படுத்தி வீசப்பட்ட முக கவசங்கள், கையுறைகளாக கிடக்கிறது.
இதனால் கொரோனா வைரஸ் நம்மை தொற்றி கொள்ளுமோ என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கிடக்கும் பயன்படுத்தி வீசப்பட்ட முக கவசங்கள், கையுறைகளை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் - கலெக்டரிடம் கோரிக்கை
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவினால் சிறு, குறு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் வறுமையில் வாடுகின்றனர். இந்த நிலையில் வறுமையில் வாடி வரும் நாதஸ்வர தவில் கலைஞர்கள் நிவாரண உதவிக் கேட்டு நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக 3 மாதங்களாக அனைத்து திருவிழாக்கள், திருமணங்கள் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாதஸ்வர, தவில் கலைஞர்கள் வாழ்வாதாரமின்றி மிகவும் சிரமமான முறையில் வாழ்ந்து வருகிறோம். நாதஸ்வர, தவில் இசை கலைஞர்களுக்கு தனியாக வாரியம் எதுவும் இல்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். அதனால் முதல்- அமைச்சர் எங்களுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து நிவாரண உதவித்தொகையை வழங்க வேண்டும். மேலும் நமது மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. கோவில் ஒன்றுக்கு 1 நாதஸ்வரம், 1 தவில் வாரியாக நியமனம் செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதேபோல் நேற்று செய்யாறு உதவி கலெக்டர் அலுவலக வாயிலில் 100-க்கும் மேற்பட்ட நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் நாதஸ்வரம், தவில் இசைத்தனர். பின்னர் நிவாரணம் கேட்டு கோரிக்கை மனுவினை உதவி கலெக்டர் கே.விமலாவிடம் முடிதிருத்துவோர் முன்னேற்ற சங்க தலைவர் கே.மதி, சட்ட ஆலோசகர் கே.விஸ்வநாதன் ஆகியோர் வழங்கினர்.