இன்று திறக்கப்படும் கடைகள் எவை? - தமிழக அரசு அறிவிப்பு; எடப்பாடியில் 90 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவி

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 


இன்று திறக்கப்படும் கடைகள் எவை? - தமிழக அரசு அறிவிப்பு
இன்று(திங்கட்கிழமை) முதல் திறக்க அனுமதிக்கப்பட்ட கடைகளின் பட்டியலை வெளியிட்டுள்ள தமிழக அரசு, சலூன் கடைகள், பியூட்டி பார்லர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதிமுதல் அமலில் இருந்து வருகின்றது. மே 2-ந்தேதி அன்று தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவுரைகளின் படியும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் (நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர) பல செயல்பாடுகள் அல்லது பணிகள், 11-ந் தேதி(இன்று) முதல் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவது தொடர்பாக 9-ந்தேதி அறிவிக்கப்பட்டது. அதில் பிற தனிக்கடைகள் பிரிவில் கீழ்க் கண்ட கடைகள் திறக்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:-

எந்தெந்த கடைகளை திறக்கலாம்?

டீக்கடைகள் (பார்சல் மட்டும்), பேக்கரிகள் (பார்சல் மட்டும்), உணவகங்கள் (பார்சல் மட்டும்), பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள்.

கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள், சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள், மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள்.

பெட்டி கடைகள்

மொபைல் போன் விற்கும் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள், மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள், கண் கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள், சிறிய நகைக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை), சிறிய ஜவுளிக் கடைகள் (குளிர்சாதன வசதி இல்லாதவை) ஊரகப் பகுதிகளில் மட்டும்.

மிக்சி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள், டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள், பெட்டி கடைகள், பர்னிச்சர் கடைகள்.

தள்ளுவண்டி கடைகள்

சாலையோர தள்ளுவண்டி கடைகள், உலர் சலவையகங்கள், கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ், ஜெராக்ஸ் கடைகள், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள், நாட்டு மருந்து விற்பனை கடைகள்.

விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள், டைல்ஸ் கடைகள், பெயிண்ட் கடைகள், எலக்ட்ரிகல் கடைகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், நர்சரி கார்டன்கள், மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள், மரம் அறுக்கும் கடைகள்.

சலூன்களுக்கு அனுமதி இல்லை

அதே நேரத்தில், முடி திருத்தும் நிலையங்கள்(சலூன்கள்), ஸ்பா மற்றும் பியூட்டி பார்லர்கள் இயங்கக் கூடாது என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஊரடங்கு தளர்வின்போது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பணிகள், கடைகள் தொடர்ந்து இயங்கும். மேலும் கொரோனா நோய்த் தொற்று தன்மையைப் பொறுத்து வருங்காலங்களில் பல்வேறு பணிகளுக்கு, கடைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள கடைகளின் உரிமையாளர்கள், குளிர்சாதன வசதி இருந்தால் அதை இயக்காமல், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனி நபர் இடைவெளியினை பின்பற்ற அறிவுறுத்துவதோடு, கிருமி நாசினிகள் பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

முக கவசம் கட்டாயம்

மேலும், அனைத்து மாவட்ட கலெக்டர்களும், மாநகராட்சி கமிஷனர்களும், காவல் துறையினர், அரசால் அறிவுறுத்தப்பட்ட மேற்சொன்ன கடைகள், நிறுவனங்களில், பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்யவும், தனி நபர் இடைவெளியை பின்பற்றப்படுவதையும், போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்தி பணிபுரிவதையும், பணியாளர் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதையும், அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிப்பதையும், கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எடப்பாடியில் 90 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி - முதல்ர் எடப்பாடி பழனிசாமி உதவி
எடப்பாடி சட்டமன்ற தொகுதில் 90 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி வருகிறார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகை மற்றும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டதின்படி, தமிழ்நாடு முழுவதும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

மேலும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தற்போது ஊரடங்கு அமலில் உள்ள இச்சூழ்நிலையில், என்னுடைய எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அடங்கியிருக்கும் எடப்பாடி நகரம், எடப்பாடி ஒன்றியம் கொங்கணாபுரம் ஒன்றியம், நங்கவள்ளி ஒன்றியம், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி மற்றும் வனவாசி ஆகிய பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர 90 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, எனது சார்பில் விலையில்லா அரிசி சிப்பத்தை வழங்குமாறு, அந்த அந்த பகுதி அ.தி.மு.க. நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டேன்.

அதன்படி, அ.தி.மு.க. சார்பில் 3 நிர்வாகிகள் மட்டுமே முககவசம் அணிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சமூக இடைவெளியினைப் பின்பற்றி நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad