சென்னையில் இருந்து, அனுமதி பெறாமல் வடமாநிலத்திற்கு வாடகை லாரியில் சென்ற 71 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கினர்; ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி மீன் பிடித்தபோது பரிதாபம்

சென்னையில் இருந்து, அனுமதி பெறாமல் வடமாநிலத்திற்கு வாடகை லாரியில் சென்ற 71 தொழிலாளர்கள் விபத்தில் சிக்கினர்
சென்னையில் பல்வேறு பகுதியில் கட்டிடம் உள்ளிட்ட வேலைகளில் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளதால் வேலை இல்லாமல் வெளி மாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தவர்கள், இ-பாஸ் மூலம் விண்ணப்பம் செய்து வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

71 பேர்

ஆனால் சென்னையில் வேலை செய்து வந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 69 பேர், குஜராத் மாநிலத்தை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 71 பேர், தங்களது சொந்த மாநிலங்களுக்கு வாடகை லாரி மூலம் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டனர். இங்கிருந்து தங்களது ஊர்களுக்கு செல்ல அரசிடம் உரிய அனுமதி கடிதம் பெறவில்லை. லாரி மூலம் தமிழக - கர்நாடக எல்லையை கடந்து தங்களது மாநிலத்திற்கு செல்ல முடிவு செய்து லாரியில் புறப்பட்டனர்.

இந்த நிலையில், நேற்று காலை 5 மணியளவில், கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னாறு பகுதியில் லாரி சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற கார் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

விபத்து

இந்த விபத்தில் லாரியில் இருந்த தொழிலாளர்கள், காரில் இருந்தவர்கள் காயங் கள் இல்லாமல் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர்.

இது குறித்து தகவலறிந்த சூளகிரி போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், மாவட்ட கலெக்டர் பிரபாகர், 71 தொழிலாளர்களையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரியில் தங்க வைக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, கிருஷ்ணகிரி தாசில்தார் தண்டபாணி மற்றும் அலுவலர்கள் 71 தொழிலாளர்களையும் கிருஷ்ணகிரிக்கு வரவழைத்து, கல்லூரியில் தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் ஏற்படுத்திக் கொடுத்தனர். இது குறித்து தாசில்தார் தண்டபாணி கூறியதாவது:-

கண்காணிக்கப்படுவார்கள்

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில், சந்தேகப்படும் நபர்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவார்கள். மேலும், தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு செல்ல தேவையான இ-பாஸ் பெறும் பணி நடைபெறுகிறது. மேலும் அனைவரும் ரெயில் அல்லது பஸ் மூலம் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தாரமங்கலம் அருகே ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி மீன் பிடித்தபோது பரிதாபம்
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சிக்கம்பட்டியை சேர்ந்தவர் செல்வம். விவசாயி. இவரது மகன் நவீன்குமார் (வயது 16). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தான். அதே பகுதியை சேர்ந்தவர் பச்சமுத்து. இவரது மகன் சஞ்சய் (11). இவன் பெரியகாடம்பட்டியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான். நவீன்குமாரும், சஞ்சய்யும் நண்பர்கள் ஆவார்கள்.

இந்த நிலையில் பெரியாம்பட்டி ஏரியில் நிறைய மீன்கள் இருப்பதாக அறிந்தனர். இதைத்தொடர்ந்து நவீன்குமார், சஞ்சய் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 பேர் சேர்ந்து ஏரிக்கு நேற்று காலை 9 மணிக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது வேட்டியை விரித்துக்கொண்டு ஏரியில் இறங்கி அவர்கள் மீன் பிடித்தனர்.

தண்ணீரில் மூழ்கி பலி

இதில் நிறைய மீன்கள் கிடைத்ததால், இன்னும் அதிகமான மீன்களை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆழமான பகுதிக்கு சென்றனர். நீச்சல் தெரியாததால் நவீன்குமார், சஞ்சய் ஆகியோர் தண்ணீரில் மூழ்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற 3 பேரும் ஊருக்குள் சென்று தகவலை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஊர் பொதுமக்கள் ஏரிக்கு விரைந்து வந்தனர். அங்கு சஞ்சய், நவீன்குமார் ஆகியோரை பிணமாக மீட்டனர். 2 பேரின் உடல்களை பார்த்து அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

இந்த சம்பவம் குறித்து தாரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மீன் பிடித்த போது ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பணி முடிந்து வீடு திரும்பிய போது பரிதாபம்:சரக்கு வேன் மோதி கிராம நிர்வாக அதிகாரி பலி
கொரோனா பணி முடிந்து வீடு திரும்பிய கிராம நிர்வாக அதிகாரி சரக்கு வேன் மோதி பலியானார்.

கிராம நிர்வாக அதிகாரி பலி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, சிறுகமணி மேற்கு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவர் குமார் (வயது 46). இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள கொரோனா சிறப்பு முகாமில் பணி முடிந்து நேற்று முன்தினம் இரவு குமார் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார்.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார்புரம் மேம்பாலத்தில் வந்த போது, பின்னால் வந்த சரக்கு வேன் இவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் விரைந்து வந்து, குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சரக்கு வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கலெக்டர் அஞ்சலி

இந்த நிலையில் நேற்று காலை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு குமாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் ஈமசடங்கு நிதியாக ரூ.25 ஆயிரத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் கிராம நிர்வாக அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினர் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

கொரோனா தொற்று நோய்த்தடுப்பில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்களுக்கு இறப்பு ஏற்படும்போது, அவரது குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.50 லட்சமும், வாரிசு அடிப்படையில் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, உரிய இழப்பீடும், வாரிசு வேலையும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு கலெக்டர், அரசுக்கு பரிந்துரை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad