ஆவடி மாநகராட்சி பகுதியில் பெண் டாக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா; பல்லாவரத்தில் 2 போலீஸ்காரர்களுக்கு கொரோனா; கோவை - ஆரஞ்சில் இருந்து பச்சை மண்டலமாகிறது

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 

ஆவடி மாநகராட்சி பகுதியில் பெண் டாக்டர் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வரும் அயப்பாக்கம் பகுதியை சேர்ந்த 29 வயது பெண் டாக்டர் ஒருவர், பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வந்தார். அவருக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.

மேலும் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள 5-ம் பட்டாலியனை சேர்ந்த 2 பயிற்சி போலீஸ்காரர்களுக்கும், ராயபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளராக பணியாற்றும் திருமுல்லைவாயல் செந்தில் நகரை சேர்ந்த 46 வயது பெண் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது.

ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு பகுதியை சேர்ந்த 55 வயது நபர் ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையத்தில் சமையலராக வேலை செய்து வருகிறார். அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆவடி ஜே.பி. எஸ்டேட் பகுதியை சேர்ந்த சிறுநீரக நோயாளியான 41 வயது பெண் மற்றும் ஆவடி காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செவிலியரின் 80 வயதான தாயாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 23 வயது போலீஸ்காரர் ஒருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. மதுரையை சேர்ந்த அவர், பல்லாவரத்தில் தங்கி, சென்னை மாநகர போலீசில் வேலை செய்து வந்தார். அதேபோல் பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்த 55 வயது பெண் போலீஸ் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரும் சென்னை மாநகர போலீசில் பணியாற்றி வருகிறார்.

ஜமீன் பல்லாவரத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரியின் 2 குழந்தைகளுக்கும் நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் நாகல்கேணியில் 27 வயது நபருக்கும், பம்மலில் 3 பேருக்கும், செம்பாக்கத்தில் ஒருவருக்கும், தாம்பரம் ரங்கநாதபுரத்தில் ஒரு சிறுவனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மடிப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவருக்கு கடந்த 1-ந்தேதி கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இந்தநிலையில் அவரது குடும்பத்தினருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் 1 பெண் உள்பட 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் நங்கநல்லூர் இந்து காலனியில் காய்கறி மொத்த வியாபாரம் செய்யும் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

பல்லாவரத்தில் 2 போலீஸ்காரர்களுக்கு கொரோனா
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் 23 வயது போலீஸ் காரர் ஒருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது. மதுரையை சேர்ந்த அவர், பல்லாவரத்தில் தங்கி, சென்னை மாநகர போலீசில் வேலை செய்து வந்தார். அதேபோல் பல்லாவரம் மல்லிகா நகரை சேர்ந்த 55 வயது பெண் போலீஸ் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது. அவரும் சென்னை மாநகர போலீசில் பணியாற்றி வருகிறார்.

ஜமீன் பல்லாவரத்தில் ஏற்கனவே பாதிக்கப்பட்ட காய்கறி வியாபாரியின் 2 குழந்தைகளுக்கும் நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் நாகல்கேணியில் 27 வயது நபருக்கும், பம்மலில் 3 பேருக்கும், செம்பாக்கத்தில் ஒருவருக்கும், தாம்பரம் ரங்கநாதபுரத்தில் ஒரு சிறுவனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஊரப்பாக்கம்

ஊரப்பாக்கம் வள்ளியம்மை நகர் பகுதியில் 54 வயது சாலையோர காய்கறி வியாபாரி, தினமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி வாங்கிவந்து ஊரப்பாக்கம் ஜி.எஸ்.டி. சாலை ஓரமாக விற்பனை செய்து வந்தார். அவருக்கு நடத்திய கொரோனா வைரஸ் பரிசோதனையில் நேற்று அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதேபோல கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு பகுதியில் வசிக்கும் 63 வயது முதியவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கோயம்பேட்டில் சொந்த வீடு உள்ளது. அங்கிருந்து அடிக்கடி காயரம்பேடு பகுதியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு வரும் போது கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகளை வாங்கி கொண்டு வருவார். அப்படி இவர் கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்ததால் இவருக்கு கொரோனா வைரஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

பொத்தேரி

மேலும் பொத்தேரி பகுதியில் 65 வயது முதியவர் ஒருவருக்கும், வண்டலூரை அடுத்த ஊனைமாஞ்சேரி வசந்தாபுரம் பகுதியை சேர்ந்த 36 வயது மற்றும் 52 வயதுடைய 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 416 ஆனது. இவர்களில் 66 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சையில் இருந்த பெண்ணும் குணமானார்: கொரோனா தொற்று இல்லாத மாவட்டமானது கோவை - ஆரஞ்சில் இருந்து பச்சை மண்டலமாகிறது
கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த 146 பேருக்கும், திருப்பூரை சேர்ந்த 114 பேருக்கு, நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 114 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். கோவை யை சேர்ந்த 4 பேர், நீலகிரியை சேர்ந்த 3 பேர் மற்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் என 8 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்தநிலையில் கோவை வெங்கிட்டாபுரத்தை சேர்ந்த தந்தை, தாய், குழந்தை என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் நேற்று முன்தினம் முழுமையாக குணமாகி வீடு திரும்பினர். கரும்புக்கடையை சேர்ந்த கர்ப்பிணி பெண் மட்டும் சிகிச்சையில் இருந்தார். அவர் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து அவருக்கு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அழகான ஆண்குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. தாயும், சேயும் ஆஸ்பத்திரியில் இருந்தனர். இந்தநிலையில் அந்த பெண்ணும் முழுமையாக குணமானார். இந்த தகவலை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 146 பேரில், சென்னைக்கு சென்ற நோயாளி மரணம் அடைந்ததை தவிர 145 பேரும் முழுமையாகி குணமடைந்து விட்டனர். இதன் காரணமாக தற்போது கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை மாறி உள்ளது. இதனால் ஆரஞ்சு மண்டலத்தில் இருந்து கோவை பச்சை மண்டலத்தை நோக்கி செல்கிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கொரோனா தொற்று குறைந்து உள்ளதால் கோவை மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் தற்போது உள்ளது. கடந்த 10 நாட்களில் கொரோனா தொற்று நோயாளிகள் யாரும் அனுமதிக்கப்பட வில்லை. கோவை மாவட்டத்தை சேர்ந்த யாரும் தொடர்ந்து 21 நாட்களாக கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட வில்லை. இதனால் கோவை பச்சை மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது என்றனர்.

கடலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 413 ஆக அதிகரிப்பு
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. பின்னர் இந்த எண்ணிக்கை சற்று குறைந்த நிலையில் நேற்று முன்தினம் 14 போலீஸ்காரர்கள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 49 வயது பெண் ஒருவரும் பலியானார்.

இந்த நிலையில் நேற்று கொரோனா அறிகுறி காணப்பட்ட 700 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வந்தன. இதில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் ஒருவர் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த 55 வயது நபர். இவர் சென்னை கோயம்பேடு சென்று வந்து தனிமைப்படுத்தப்பட்டவர் ஆவார். மற்றொருவர் நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த 25 வயது வாலிபர் என்பது தெரியவந்துள்ளது.

413 ஆக உயர்வு

இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411-ல் இருந்து 413 ஆக உயர்ந்துள்ளது. இது தவிர கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி காணப்பட்டவர்கள் என மொத்தம் 311 பேர் கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைகளிலும், சிதம்பரம் முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்து 351 பேருக்கு உமிழ்நீர் பரிசோதனை செய்யப்பட்டதில் 413 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் 7 ஆயிரத்து 826 பேருக்கு நோய்த்தொற்று இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. இன்னும் 112 பேரின் உமிழ்நீர் பரிசோதனை முடிவுகள் வர வேண்டி உள்ளது.

ஒரே குடும்பத்தில் 4 பேர் உள்படசென்னையில் இருந்து குமரிக்கு வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு 31 ஆக உயர்ந்தது
சென்னையில் இருந்து குமரிக்கு வந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்ந்தது.

தனிமைப்படுத்தி கண்காணிப்பு

குமரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது. அவர்களில் மயிலாடியை சேர்ந்த 65 வயது முதியவர் கொரோனாவுக்கு பலியானார். இவர் தான் குமரியில் கொரோனாவில் பாதிக்கப்பட்டு இறந்த முதல் நபர். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 16 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். 5 வயது குழந்தை உள்பட 2 பேர் சென்னை மற்றும் கேரளாவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதற்கிடையே வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் குமரி மாவட்டம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு கல்லூரிகள், விடுதிகள் போன்றவற்றில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் 5 பேருக்கு கொரோனா

இவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

குமரியில் இருந்து சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்ட மயிலாடியைச் சேர்ந்த 65 வயது முதியவர், உடல்நிலை மோசம் அடைந்ததால் மீண்டும் குமரிக்கு அழைத்து வரப்பட்டார். அதாவது, கடந்த 9-ந் தேதி ஆம்புலன்ஸ் மூலம் குமரிக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு அவர் சிறிது நேரத்தில் இறந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து சென்னையில் இருந்து அவருடன் வந்த 38 வயது மகளுக்கு, முதலில் பரிசோதனை செய்தபோது கொரோனா இல்லை. இதையடுத்து அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்த போது, கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஒரே குடும்பத்தில் 4 பேர்

இதேபோல் நாகர்கோவில் அருகே உள்ள ஆளூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 45 வயது கணவர், 40 வயது மனைவி, 14 வயது, 12 வயது பிள்ளைகள் என 4 பேர் சென்னையில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன் சென்னையில் இருந்து குமரி மாவட்டம் வந்தனர். அவர்களுக்கு ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் கொரோனா பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

31 ஆக உயர்வு

பின்னர் அனைவரையும் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்திருந்தனர். நேற்று அவர்கள் 4 பேருக்கும் பரிசோதனை முடிவு வந்தது. அதில் 4 பேருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளையும், டாக்டர்களையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது குமரி மாவட்ட மக்களுக்கும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று கண்டறியப்பட்ட 5 பேருடன் சேர்த்து குமரியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. புற்று நோயாளியின் மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பதால் மயிலாடி பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனாபாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு
கரூர் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, குணம் அடைந்து வீடு திரும்பினர். பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 108 ஆம்புலன்ஸ் உதவியாளர், கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்து திரும்பியவர், மராட்டிய மாநிலத்தில் இருந்து பள்ளபட்டிக்கு வந்த 4 பேர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் பள்ளபட்டியை சேர்ந்த 3 பேருக்கும், கரூர் அருகே உள்ள உழைப்பாளி நகர் பகுதியை சேர்ந்த கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் 4 பேரும் அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மக்கள் அச்சம்

இந்நிலையில் நேற்று பள்ளபட்டியை சேர்ந்த 60 வயது முதியவருக்கும், தேவர்மலையை சேர்ந்த 44 வயதுடைய ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசித்த பகுதிகளை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அப்பகுதிக்குல் வெளி ஆட்கள் யாரும் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைத்து, கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருவது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில்தனிமைப்படுத்தப்பட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் சென்னை சென்று திரும்பி வந்தவர்கள் மற்றும் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று திரும்பி வந்தவர்கள் என 195 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிமைப்படுத்தப் பட்டவர்கள் அனைவருக்கும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் ஆந்திரா மாநிலம் புட்டபர்த்தி சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த குத்தாலம் அருகே திருவாவடுதுறையை சேர்ந்த 59 வயது நபர் ஒருவருக்கும், சென்னையில் வேலை பார்த்துவிட்டு சொந்த ஊர் திரும்பிய செம்பனார்கோவில் அருகில் புன்செய் கிராமத்தை சேர்ந்த 27 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

இதனையடுத்து இவர்கள் 2 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே சீர்காழி கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா வந்ததையடுத்து அவரும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை மாவட்டத்தில், ஒரே நாளில்6 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்
தஞ்சை மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்த 6 பேர் நேற்று ஒரே நாளில் வீடு திரும்பினர்.

6 பேர் வீடு திரும்பினர்

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 69 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்ளில் நேற்று முன்தினம் வரையில் 47 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்.


இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 2 பேரும், கும்பகோணம் பகுதியை சேர்ந்த ஒருவரும், திருவையாறு பகுதியை சேர்ந்த ஒருவரும், ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த ஒருவரும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை சேர்ந்த ஒருவரும் என 6 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதில் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்தவர் மட்டும் பெண் ஆவர். மற்ற 5 பேரும் ஆண்கள்.

16 பேர் சிகிச்சை

குணம் அடைந்து வீடு திரும்பியவர்களை தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர்(பொறுப்பு) டாக்டர் மருததுரை மற்றும் மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் பழங்கள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். மேலும் குணமடைந்து வீடு செல்லும் நபர்கள்் தொடர்ந்து 14 நாட்கள் அவர் இல்லத்தில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 53 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தொடர்ந்து 16 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் கடந்த 1-ந் தேதிக்கு முன்பு வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 3 பேர் மட்டுமே ஆவர். மற்ற 13 பேர் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

நெல்லையில் மேலும் 5 பேருக்கு தொற்று உறுதி: தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு கொரோனா பாதிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் ஏற்கனவே 35 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த ஒருவருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்து உள்ளது.

தற்போது பாதிக்கப்பட்டவர், ராமநாதபுரம் கடலாடி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் நரம்பு பாதிப்பு காரணமாக அவதிப்பட்டார். இதனால் சென்னையில் இருந்து லாரி மூலம் தூத்துக்குடி குறுக்குச்சாலைக்கு வந்தார். அங்கிருந்து உறவினர் உதவியுடன், ராமநாதபுரத்தில் இருந்து வருவதாக கூறி தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். பின்னர் அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சென்னையில் இருந்து வந்தது தெரியவந்ததால், உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அரசு ஆஸ்பத்திரி டீன் ரேவதி மேற்பார்வையில் தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் அதனை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவு மூடப்பட்டது. மேலும் அந்த நோயாளிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்பட 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததால், அங்குள்ள நர்சு, டாக்டர் உள்பட 20 பேருக்கு சளிமாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று முன்தினம் நிலவரப்படி நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 93 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் பரிசோதனை செய்யப்பட்ட முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மானூர் அருகே உள்ள ரஸ்தாவை சேர்ந்த பல்வேறு நபர்கள் குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகின்றனர். இதில் 3 குடும்பத்தினர் மும்பையில் இருந்து காரில் கைக்குழந்தை உள்பட 11 பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு அவர்கள் வந்த கார், கங்கைகொண்டானில் உள்ள சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது. அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் பெண் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் ரஸ்தாவில் உள்ள ஒரு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஏற்கனவே சிறுநீரக கோளாறு காரணமாக மாதந்தோறும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்று வந்தார். சமீபத்தில் சென்றபோது அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் அங்கேயே தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

நெல்லை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 ஆக உயர்ந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு சுகாதார பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட 3 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதில் ஒருவர் மேலப்பாளையத்தை சேர்ந்த பெண். மற்ற 2 பேர் புளியங்குடியை சேர்ந்தவர்கள்.

போளூர், ஆரணியில் செவிலியர், 2 கர்ப்பிணிகளுக்கு கொரோனா
சென்னையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் போளூரை சேர்ந்த 23 வயது இளம்பெண் சென்னையில் இருந்து போளூருக்கு கடந்த 11-ந் தேதி வந்தார். இவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரை சுகாதார துறையினர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் துப்புரவு பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அந்த பகுதியில் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட்டன.

அதேபோல் போளூரை அடுத்த விளாங்குப்பம் பெரியேரியை சேர்ந்த 28 வயது வாலிபருக்கும் தொற்று உறுதியானதை தொடர்ந்து அவரையும் சுகாதாரத் துறையினர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

களம்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளராக பணிபுரிபவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் திருவண்ணாமலை வேங்கிக்காலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தினமும் பணிக்காக திருவண்ணாமலையில் இருந்து களம்பூருக்கு சென்று வந்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து அவர் நேற்று திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். தொடர்ந்து திருவண்ணாமலை வேங்கிக்காலில் அவரது வீடு உள்ள பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து துப்புரவு பணியாளர்கள் கிருமிநாசினி தெளித்தனர்.

வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் தலைமை காவலருக்கும், வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணிபுரியும் ஒருவருக்கும், கீழ்கொடுங்காலூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வந்தவாசி தெற்கு போலீஸ்நிலையம் மற்றும் வந்தவாசி நகர ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் வந்தவாசி தீயணைப்பு துறையினரும், நகராட்சி தூய்மை பணியாளர்களும் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் தெற்கு போலீஸ்நிலையமும், நகர ஆரம்ப சுகாதார நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும் தலைமை காவலருடன் பணியாற்றிய இன்ஸ்பெக்ட்ர், சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் என 25 பேரும், மருந்தாளுனருடன் பணியாற்றிய டாக்டர் உள்பட 5 பேரும் தனிமைபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஆரணியை அடுத்த தச்சூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை கடந்த 8-ந் தேதி செய்யப்பட்டது. இதில் தேவிகாபுரத்தை அடுத்த மலையாம்புரடை கிராமத்தை சேர்ந்த 30 வயது பெண்ணிற்கும், ஆரணியை அடுத்த நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 25 வயது கர்ப்பிணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் 2 கர்ப்பிணிகளையும் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் தொடர் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதியில் கிருமி நாசினி தெளித்து, தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வெம்பாக்கம் தாலுகா வெங்களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சென்னையில் லஞ்ச ஓழிப்பு துறையில் டிரைவராக பணியாற்றும் போலீசாருக்கும், மீசநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும், செய்யாறு அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக பணியாற்றும் பெண்ணிற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

சந்தவாசல் அருகே கேளூர் பெரியஏரி கொல்லமேட்டைச் சேர்ந்த 28 வயது வாலிபர் சென்னையில் இருந்து 8-ந் தேதி சொந்தஊருக்கு வந்தார். அவருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மேலும் பெரியஏரி கொல்லமேட்டில் வசிக்கும் வாலிபரின் பெற்றோரை தனிமைப்படுத்தி அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் குறித்து சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கோயம்பேடு தொழிலாளர்கள் 6 பேருக்கு கொரோனா
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரஸ் நோயால் 298 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்கனவே 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 55 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதை தொடர்ந்து மற்ற 241 பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று சிலரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் கிடைக்கப்பெற்றது. இதில் மேலும் 7 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து போலீஸ்காரர் பாதிப்பு

இவர்களில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்த விழுப்புரம் அருகே வ.பாளையத்தை சேர்ந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.இவர் கோயம்பேடு தொழிலாளர்கள் வந்த வாகனங்களை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஓய்வுக்காக வீட்டிற்கு சென்றிருந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. பின்னர் அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தியதில் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதவிர விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு கிராமத்தை சேர்ந்த 3 பேருக்கும், விழுப்புரம் அருகே காங்கேயனூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், விழுப்புரம் அருகே காவணிப்பாக்கத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஆசாரங்குப்பத்தை சேர்ந்த ஒருவருக்கும் நோய் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இவர்கள் 6 பேரும் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் ஆவர்.

305 ஆக உயர்ந்தது

இதையடுத்து அவர்கள் 7 பேரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை டாக்டர்கள், 24 மணி நேரமும் கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர்களோடு சேர்த்து விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 305 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 248 பேர் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்கள் ஆவர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட 7 பேரும் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு அங்குள்ள பிரதான சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதை தவிர கொரோனா அறிகுறியுடன், விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 54 பேரும், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 29 பேரும், விழுப்புரம் மனிதவள சுகாதார மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் 58 பேரும், விழுப்புரம் அருகே பெரும்பாக்கத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர் விடுதியில் 60 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர கோயம்பேடு சந்தை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 470 பேர் 4 மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டும், கொரோனா முன்எச்சரிக்கை தொடர்பாக 755 பேர் அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இதுவரை 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 28 கர்ப்பிணிகளுக்கு ஒரே நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பரிசோதனை கூடத்தில் குளறுபடி நடந்திருக்கலாம் என்று கருதிய அதிகாரிகள், மறுபரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி 28 கர்ப்பிணிகளுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, மறுபரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவு இன்னும் கிடைக்கப்பெறவில்லை. கர்ப்பிணிகள் அனைவரும் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் தங்களுக்கும் கொரோனா பரவி விடுமோ என அச்சமடைந்துள்ளனர். எனவே மறுபரிசோதனை அறிக்கை முடிவை மாவட்ட நிர்வாகம் வெளியிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad