அரியலூர் மாவட்டத்தில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது; கணவரை கொன்று நாடகமாடிய காதல் மனைவி கைது தந்தை, அண்ணனும் சிக்கினர்

அரியலூர் மாவட்டத்தில் 6 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், மாவட்ட மது விலக்கு அமலாக்கபிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) கண்ணன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சில்லக்குடி கொள்ளிடம் ஆற்றுப்பகுதியில் சாராயம் தயாரிக்க ஊறல் போட்ட வடுகபாளையத்தை சேர்ந்த சுரேஷ் (வயது 35), சில்லக்குடி தெற்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி (52), கந்தசாமி (27), தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணி (48) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 லிட்டர் சாராய ஊறல், 3 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். ஆண்டிமடம் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆண்டிமடம்-விருத்தாச்சலம் சாலையில் உள்ள அரசு மருத்துவமனையின் பின்புறம் சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த குரவன் குட்டையை சேர்ந்த ரமேஷ் (50), சுப்புராஜ் (23) ஆகிய 2 பேரை ஆண்டிமடம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 837 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த 6 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் சிறையில் இருக்கும் 6 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் துணை சூப்பிரண்டுகள் கண்ணன் (மதுவிலக்கு பிரிவு), மோகன்தாஸ் (ஜெயங்கொண்டம் சரகம்) ஆகியோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் பரிந்துரை செய்தனர். அவர்களின் பரிந்துரையை ஏற்ற போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் இது தொடர்பாக கலெக்டரிடம் மேற்பரிந்துரை செய்தார். கலெக்டர் ரத்னாவும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் இருந்த சுரேஷ், கலியமூர்த்தி, கந்தசாமி, சுப்பிரமணி, ரமேஷ், சுப்புராஜ் ஆகிய 6 பேரிடம் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்காக உத்தரவின் நகலை காண்பித்து, அவர்களிடம் கையெழுத்து வாங்கினர். ஏற்கனவே சாராயம் காய்ச்சிய வழக்கில் அரியலூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட 27 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.

கூடுவாஞ்சேரி அருகே நாட்டு வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கைது
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் மேற்பார்வையில் கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் இந்தியன் வங்கி அருகே சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக 4 வாலிபர்கள் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அதில் ஒரு மோட்டார் சைக்கிள் பதிவு எண் இல்லாமலும், மற்றொன்று பதிவு எண்ணுடனும் இருந்தது. போலீசார் வாகன சோதனையில் இருப்பதை பார்த்தவுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் அங்கிருந்து தப்ப முயன்றனர்.

இதனை பார்த்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் 2 மோட்டார் சைக்கிள்களில் முன்பக்கமாக தொங்க விடப்பட்டிருந்த துணிப்பைகளை போலீசார் சோதனை செய்தபோது அதில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த துணிப்பையில் 4 நாட்டு வெடி குண்டுகளும், ஒரு கத்தியும் இருந்தது. மற்றொரு மோட்டார் சைக்கிளில் இருந்த துணிப்பையில் 3 நாட்டு வெடிகுண்டுகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து 4 பேரையும் தொடர்ந்து விசாரித்தபோது அவர்கள் கூடுவாஞ்சேரி மணிமேகலை தெருவை சேர்ந்த சூர்யா (வயது 23), கூடுவாஞ்சேரி பெரியார் ராமசாமி தெருவை சேர்ந்த கமலக்கண்ணன் (22), கூடுவாஞ்சேரி மசூதி தெருவை சேர்ந்த அருண் (22), அரக்கோணம் காந்தி நகர் பால் டெப்போ தெருவை சேர்ந்த பார்த்திபன் (22) என்பது தெரியவந்தது. இதனைதொடர்ந்து 4 பேரையும் போலீசார் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

அப்போது சூர்யா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

பொத்தேரி பகுதியை சேர்ந்த அப்துல் என்ற பட்டன் பாய்ஸ் என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு கொலை செய்ய வெட்டியபோது அவர் சாகவில்லை. அவரது நண்பர் வைகோ என்கிற சந்துரு என்பவர் முன்விரோதத்தில் என்னை கொலை செய்து விடுவார் என்பதால் நான் என்னுடைய பாதுகாப்புக்காக மோட்டார் சைக்கிளில் நாட்டு வெடி குண்டுகள், கத்தி வைத்து இருந்தேன். இவ்வாறு சூர்யா அளித்த வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வாகன சோதனையில் பிடிப்பட்ட சூர்யா, கமலக்கண்ணன், பார்த்திபன், அருண் ஆகியோர் மீது அரசால் தடைசெய்யப்பட்ட, எளிதில் தீப்பற்றக்கூடிய, உயிருக்கு சேதம் ஏற்படுத்த கூடிய வெடிபொருட்கள் வைத்திருந்த சட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து 7 நாட்டு வெடி குண்டுகள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். 4 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பண்ருட்டி அருகே சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சி
பண்ருட்டி அடுத்துள்ள சிறுதொண்டமாதேவி கிராமத்தை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 40). விவசாயி. இவர் நேற்று காலை அங்குள்ள தனது முந்திரி தோப்புக்கு முந்திரி கொட்டைகள் பொறுக்குவதற்காக சென்றார். அப்போது அங்கு அதே ஊரைச் சேர்ந்த தேவநாதன் மகன் சக்தி என்ற சாமிநாதன் (28), மாசிலாமணி மகன் சசி என்கிற சசிகுமார் (27), செந்தில்வேலன் மகன் மேகநாதன் (32) ஆகியோர் முந்திரி தோப்புக்குள் அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்த ரஜினிகாந்த், இங்கே மது குடிக்க கூடாது என்று அவர்களை கண்டித்து வெளியே போகுமாறு கூறினார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து ரஜினிகாந்தை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், சத்திரம் சந்திப்பில் நின்று கொண்டிருந்த சக்தி, சசி, மேகநாதன் ஆகியோரை சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்ய முயன்றனர்.

அப்போது, அவரை 3 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றனர். உடனே போலீசார் சாமர்த்தியமாக செயல்பட்டு 3 பேரையும் மடக்கி பிடித்தனர். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமாரும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்தி உள்பட 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதை தட்டிக்கேட்ட 8 பேருக்கு அரிவாள் வெட்டு 3 பேர் கைது
பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 22). இவருக்கு சொந்தமான தோட்டம் அய்யம்பாளையம் மருதாநதி அணைப்பகுதியில் உள்ளது. இந்த தோட்டத்துக்கு ராமச்சந்திரன் தனது நண்பர்கள் சிலருடன் மோட்டார் சைக்கிள்களில் சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது அவர்கள், மருதாநதி அணை குடியிருப்பு பகுதி வழியாக மோட்டார் சைக்கிள்களில் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த கோபி (40), பாண்டி (32) மற்றும் சிலர் தட்டிக் கேட்டுள்ளனர்.

பின்னர் சிறிது நேரம் கழித்து அவர்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மருதாநதி அணை குடியிருப்பு பகுதிக்கு வந்து அங்குள்ளவர்களிடம் தகராறு செய்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்தவர்களை சரமாரியாக அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் மருதாநதி அணை குடியிருப்பை சேர்ந்த கோபி (40), பாண்டி (32), போஸ் (60) உள்பட 8 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் அங்கு நின்ற மோட்டார் சைக்கிள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்தினர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யம்பாளையம் சூரியங்குளத்தை சேர்ந்த சதீஷ், ராம்குமார், நந்தகுமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அய்யம்பாளையம் மற்றும் மருதாநதி அணை குடியிருப்பு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சீபுரம் அருகே வாலிபர் குத்திக்கொலை - 4 பேர் கைது
காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலை யில் இவர் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் அருகே ஏனாத்தூர் சுடுகாடு அருகே குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கருக்கு தகவல் கிடைத்தது, உடனடியாக அவரது தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அஜித்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை ஏரிக்கரை அருகே 4 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் செட்டியார்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் (வயது 24), காஞ்சீபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சுரேஷ் என்கிற காக்கா சுரேஷ் (29), செட்டியார்பேட்டையை சேர்ந்த ஸ்ரீதர் (24), பிள்ளையார்பாளையத்தை சேர்ந்த சூர்யா (21) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்:-

அஜித்குமார் ஏனாத்தூர் சுடுகாடு அருகே மது குடித்து கொண்டு இருந்தார். நாங்கள் 4 பேரும் அந்த வழியாக வந்தோம். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அஜித்குமாரை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தோம்.

இவ்வாறு அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

வேறு பெண்களிடம் செல்போனில் பேசியதால் ஆத்திரம்: கணவரை கொன்று நாடகமாடிய காதல் மனைவி கைது தந்தை, அண்ணனும் சிக்கினர்
வேறு பெண்களிடம் செல்போனில் பேசியதால் கணவரை தீர்த்துக்கட்டிய பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்ததாக அவருடைய தந்தை, அண்ணனும் சிக்கினர்.

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் புனிததோமஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோபாய் (வயது 66). இவருடைய மகள் ஜாப்லின் (30). பட்டதாரி பெண். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்த போது, சென்னை ஆர்.கே.நகர் பகுதியை சேர்ந்த கார்கி (35) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். ஜாப்லின் தன்னுடைய பெற்றோர் எதிர்ப்பை மீறி கார்கியை மணந்தார்.

பிறகு ஜாப்லின் 2 குழந்தைகளுக்கு தாயானார். இதற்கிடையே ஜாப்லினுக்கும், அவருடைய தந்தை ஜோபாயிக்கும் இடையே நீடித்த மனஸ்தாபம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து ஜாப்லின் குடும்பத்துடன் சொந்த ஊரான குமரி மாவட்டத்துக்கு வந்து குடியேறினார். அதாவது, ஜோபாய் தன்னுடைய மகளுக்கு சொந்தமாக வீடு கட்டி கொடுத்தார். தான் வசித்த வீட்டின் சிறிது தொலைவில் அந்த வீடு அமைந்திருந்தது.

மேலும், மகளுக்கு தூத்தூர் கல்லூரி அருகில் சூப்பர் மார்க்கெட் நடத்த ஜோபாய் ஏற்பாடு செய்து கொடுத்ததாக தெரிகிறது. சென்னையை விட்டு குமரி மாவட்டத்துக்கு வந்த பிறகு கார்கிக்கும், ஜாப்லினுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் காலையில், ஜாப்லின் வீட்டில் கதறி அழும் சத்தம் கேட்டது.

இதற்கிடையே அந்த வழியாக கொரோனா பணிக்காக சென்ற ஏழுதேசம் கிராம அலுவலர் சேம்ராஜ், சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்றார். அங்கு கார்கி பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது, குடும்ப தகராறில் கார்கி தூக்கில் தொங்கி இறந்ததாகவும், அவரை கீழே இறக்கி போட்டதாகவும் ஜாப்லின் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் மற்றும் போலீசார் கார்கி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அதே சமயத்தில், கார்கியின் உடலில் ரத்த காயங்கள் இருந்தன. இதனால் அவரது சாவில் சந்தேகம் இருக்கலாம் என்று போலீசார் நினைத்தனர்.

பின்னர் ஜாப்லின், ஜோபாய், அவரது மகன் ஜஸ்டஸ் (36) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். முதலில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், கார்கியின் சாவில் நீடித்த மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன. தந்தை, அண்ணனுடன் சேர்ந்து கணவரையே ஜாப்லின் தீர்த்துக்கட்டியதாக திடுக்கிடும் தகவல் வெளியானது. அது பற்றிய விவரம் வருமாறு:-

கார்கி எப்போதும் செல்போனிலேயே மூழ்கி இருப்பாராம். மேலும், செல்போன் மூலம் ஏராளமான பெண்களுடன் பேசி வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக ஜாப்லின், கார்கிக்கு இடையே தகராறு இருந்துள்ளது. இதற்கிடையே, சென்னைக்கு மீண்டும் சென்று விடலாம் என ஜாப்லினிடம், கார்கி வற்புறுத்தியுள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு, கார்கி செல்போனில் ஆபாச படங்களை பார்த்துள்ளார்.

அந்த சமயத்தில், ஜாப்லின் அதனை பார்த்து விட்டார். ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்று கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் அவர்களுக்கிடையே கைகலப்பாக மாறியது. உங்களை காதலித்து திருமணம் செய்த என்னிடம், நேர்மையாக இருக்கவில்லையே என்று ஜாப்லின் கதறி அழுதார்.

மேலும், தன்னுடைய தந்தை ஜோபாய், அண்ணன் ஜஸ்டஸ் ஆகியோரையும் வீட்டுக்கு வரவழைத்தார். பின்னர், 3 பேரும் சேர்ந்து கார்கியிடம் இருந்த செல்போனை பிடுங்க முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, கார்கியின் கை, கால்களை அவர்கள் கட்டி போட்டனர். ஆத்திரம் தீராததால், கட்டையாலும் தாக்கியதாக தெரிகிறது. செல்போனை பறித்த பிறகு, அதில் உள்ள பாஸ்வேர்டு என்னவென்று கேட்டும் தொடர்ந்து தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து 3 பேரும் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து ஜாப்லின் மட்டும் வீட்டுக்கு வந்தார். அங்கு கார்கி அசைவற்ற நிலையில் கிடந்ததை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து முகத்தில் தண்ணீரை தெளித்து பார்த்த போதும், கார்கியிடம் இருந்து எந்தவொரு சத்தமும் இல்லை. இதனால் பயந்து போன அவர், தந்தை, அண்ணனை மீண்டும் வீட்டுக்கு வரவழைத்தார். பதற்றத்துடன் வந்த அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3 பேரும் சேர்ந்து தாக்கியதில், கார்கி இறந்து விட்டதை உறுதி செய்தனர்.

தொடர்ந்து கொலையை மறைக்க ஜாப்லின் உள்பட 3 பேரும் நாடகமாடினர். அதாவது, தூக்குப்போட்டு கார்கி இறந்து விட்டதாக கூறியது தெரியவந்தது. இந்த தகவலை அவர்கள் போலீசாரிடம் வாக்குமூலமாகவும் அளித்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். கணவரை கொன்று நாடகமாடியதாக பட்டதாரி பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விவசாயி கொலை வழக்கில் பிளஸ்-2 மாணவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி அருகே உள்ள அனுமந்தபுரத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 33). விவசாயி. இவர் கடந்த 13-ந் தேதி இரவு வீட்டின் முன்பு நடந்து சென்றபோது மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேர் கைது செய்தனர்.

இந்தநிலையில் விவசாயி கொலை வழக்கில் அனுமந்தபுரத்தை சேர்ந்த 17 வயதுடைய பிளஸ்-2 மாணவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த மாணவரை நேற்று கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கும்பகோணத்தில் பயங்கரம்: காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை தந்தை- மகன் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு

கும்பகோணத்தில் காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை- மகன் உள்பட 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வலையபேட்டை மாங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் பன்னீர்(வயது55). காய்கறி வியாபாரி. இவரது மைத்துனர் மணி. இவருடைய மகன்கள் அபினேஷ், அஜய். சம்பவத்தன்று அபினேஷ், அஜய் ஆகியோர் தங்கள் வீட்டின் அருகே கேரம் விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் அருண்(25) மதுபோதையில் அபினேஷ் தரப்பினர் விளையாடிக்கொண்டிருந்த இடத்துக்கு வந்தார். அருண் மதுபோதையில் இருந்ததால் அவரை அங்கிருந்து செல்லுமாறு அபினேஷ் கூறினார். இதனால் இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு முன்விரோதம் உருவானது.

நேற்று முன்தினம் மாலை அபினேசின் வீட்டின் அருகே அபினேஷ் மற்றும் அவரது உறவினர்கள் ரகுபதி, கிருஷ்ணமூர்த்தி, அருள் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அருண், அபினேஷ் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. உடனே அங்கு வந்த அருணின் தந்தை சவுந்தர்ராஜன், தாய் ருக்மணி, உறவினர்கள் சுரேஷ், பாலாஜி ஆகியோர் சேர்ந்து அபினேஷ் மற்றும் அவரது உறவினர்களை தாக்கினர். இதைக்கண்ட பன்னீர் அவர்களை விலக்கி விட முயன்றார். அப்போது பன்னீருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மேலும் அபினேஷ் உறவினர்களான கிருஷ்ணமூர்த்தி, அருள், ரகுபதி ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த பன்னீர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். உடனே அங்கிருந்து அருண், அவரது தந்தை சவுந்தர்ராஜன், தாய் ருக்மணி, உறவினர்கள் சுரேஷ், பாலாஜி ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கும்பகோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பன்னீர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரிவாள் வெட்டில் காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி, அருள், ரகுபதி ஆகிய 3 பேரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண், அவரது தந்தை சவுந்தர்ராஜன், தாய் ருக்மணி, உறவினர்கள் சுரேஷ், பாலாஜி ஆகிய 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். மோதலை விலக்கி விட சென்ற காய்கறி வியாபாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளகோவில் அருகே பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலன் கைது
திருப்பூர் மாவட்டம் முத்தூர்-கொடுமுடி ரோடு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 37). இவரது மனைவி சங்கீதா (33). பியூட்டி பார்லர் வைத்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த விவேக் (28) என்பவருக்கும் இடையே கள்ள தொடர்பு ஏற்பட்டு கடந்த ஒரு ஆண்டு காலமாக சந்தோஷமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் “நான் எனது கணவரை விட்டு வந்து விடுகின்றேன். நீ என்னை திருமணம் செய்து கொள்” என்று சங்கீதா தொடர்ந்து விவேக்கிற்கு தொந்தரவு கொடுத்துள்ளார்.

கள்ளகாதலியின் தொந்தரவு தாங்க முடியாததால் அவரை கொலை செய்ய விவேக் திட்டம் தீட்டினார். இதையடுத்து கடந்த 9-ந் தேதி இரவு சங்கீதாவின் வீட்டிற்கு விவேக் சென்றுள்ளார்.

அப்போது வீட்டில் சங்கீதா மற்றும் அவருடைய கணவர் யுவராஜ் மற்றும் குழந்தைகள் இருந்துள்ளனர். அங்கு யுவராஜையும், அவருடைய குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியே விவேக் தள்ளினார். பின்னர் சங்கீதாவுக்கு விஷமாத்திரையை கொடுத்து விட்டு, கழுத்தை நெரித்துள்ளார். பின்னர் தானும் விஷமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

நீண்டநேரமாக வீட்டின் கதவு திறக்கப்படாததால், யுவராஜ், அருகில் இருந்தவர்கள் உதவியுடன், வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு சங்கீதா கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார், விவேக் மயங்கி கிடந்தார். உடனே விவேக்கை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விவேக் சிகிச்சை பெற்று வந்ததால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்த வில்லை. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பெற்று விட்டு வீடு திரும்பும் போது கள்ளக் காதலன் விவேக்கை வெள்ளகோவில் போலீசார் கைது செய்து காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிவகாசி அருகே பயங்கரம் முன்விரோதத்தில் மெக்கானிக் வெட்டிக்கொலை
சிவகாசி அருகே உள்ள முனீஸ்நகர் அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாராயணன் (வயது 53), மெக்கானிக். இவரது மனைவி கோவிந்தம்மாள் என்கிற சித்ராதேவி. இவர்களுக்கு முகிலா என்ற மகளும், மகாலிங்கம் என்ற மகனும் உள்ளனர். முகிலாவுக்கு வன்னியம்பட்டி பகுதியை சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆனது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவிந்தம்மாள், மகாலிங்கம் இருவரும் வன்னியம்பட்டியில் உள்ள முகிலாவை பார்க்க சென்றுள்ளனர்.

இதனால் அன்று இரவு நாராயணன் மட்டும் வீட்டில் தனியாக தூங்கினார். நேற்று காலையில் நாராயணன் வீட்டில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அப்பகுதி மக்கள் மாரனேரி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். மேலும் பிணத்தை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad