சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று; திருமழிசையில் வியாபாரிக்கு கொரோனா வைரஸ் உறுதியானது

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் என்பது அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக கொரோனாவை கட்டுப்படுத்த பணிபுரிந்து வரும் மருத்துவர்கள்,காவலர்கள் ,பத்திரிகையாளர்கள் என பரவி வருகிறது. அந்த  வகையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 6 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெண் மருத்துவர் உள்பட 4 மருத்துவ மேற்படிப்பு மாணவிகளுக்கு கொரோனா உறுதியானது. ஆண்கள் விடுதியில் 2 மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

இந்த 6 மருத்துவர்கள் உடன் தொடர்புடைய நபர்களின் பட்டியல் எடுத்து அவர்களை தனிமைப்படுத்தி சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

திருமழிசையில் வியாபாரிக்கு கொரோனா வைரஸ் உறுதியானது
சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள செம்பாக்கம் நகராட்சி பகுதியை சேர்ந்த 31 வயது காய்கறி வியாபாரி, அப்பகுதியில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.

நேற்று காலை வழக்கம்போல் திருமழிசையில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக்கொண்டு சக வியாபாரிகள் 2 பேருடன் சரக்கு ஆட்டோவில் வந்துகொண்டிருந்தார். தாம்பரம்- மதுரவாயல் பைபாஸ் சாலையில் வரும்போது சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் லோடு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காயம் அடைந்த வியாபாரியை மீட்டு குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது.

முன்னாள் கவுன்சிலர்கள்

அதேபோல் செம்பாக்கம் நகராட்சி காமராஜபுரம் வீர மாமுனிவர் தெரு பகுதியில் 34 வயது காய்கறி வியாபாரிக்கும், சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வந்த பல்லாவரம் நகராட்சி 62 வயது முன்னாள் கவுன்சிலர் ஒருவருக்கும், செம்பாக்கம் பகுதியில் வசித்துவந்த மாடம்பாக்கம் பேரூராட்சி 45 வயது முன்னாள் கவுன்சிலர் ஒருவருக்கும், குரோம்பேட்டை ராதாநகர் பகுதியில் 31 வயது ஐ.டி. ஊழியருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது.

இவர்கள் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது. மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 430 ஆனது. இவர்களில் 67 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், கொரோனா பாதித்த தொழிலாளி திடீர் மாயம் - டீக்கடைக்கு சென்று திரும்பியதால் பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வந்தவர்கள், அவர்களின் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அந்த வகையில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 111 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதில் ஒருவர் இறந்து விட, 96 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

இதற்கிடையே சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருவோரை கண்டறிந்து தினமும் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் சிலரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியானது. இதில் ஆத்தூர் தாலுகா கே.சிங்காரக்கோட்டையை சேர்ந்த 48 வயதான தொழிலாளிக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இவர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலை செய்தவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தவர், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். அதில் அவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர், நேற்று காலை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

மேலும் கொரோனா தனிவார்டில் அவரை சேர்த்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதற்கிடையே திடீரென அவர் காணாமல் போய்விட்டார். இதையடுத்து சுகாதாரத்துறையினர், மருத்துவமனை வளாகம் முழுவதும் அவரை தேடினர். அதேநேரம் ஒருசில நிமிடங்கள் கழித்து அவர் திரும்பி வந்தார். அப்போது அவர் பசியாக இருந்ததால் டீ குடிப்பதற்கு கடைக்கு சென்றதாக தெரிவித்தார்.

அதன்பின்னரே மருத்துவமனை அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர். இதைத் தொடர்ந்து கொரோனா வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் சென்ற டீக்கடையில் வேலை செய்வோருக்கும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த சம்பவத்தால் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் மொத்த எண்ணிக்கை 112 ஆக உயர்ந்தது.

குமரியைச் சேர்ந்த கொத்தனார் கொரோனாவுக்கு பலி
துபாயில் கொரோனாவுக்கு குமரியை சேர்ந்த கொத்தனார் பலியானார்.

குமரி மாவட்டம் அருமனை அருகே குழிச்சல் மாறப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 48), கொத்தனார். இவருடைய மனைவி லதா புஷ்பம். இவர்களுக்கு பியூட்டிலின் ரென்சி (20) என்ற மகளும், அட்லின் ராகுல் (18) என்ற மகனும் உள்ளனர். லதா புஷ்பம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.

இந்த நிலையில் ராஜகுமார் 9 மாதங்களுக்கு முன் துபாய் நாட்டில் வேலை செய்வதற்காக சென்றார். இவர், அங்குள்ள அஜிமான் என்ற இடத்தில் வேலை செய்து வந்தார்.

கொரோனாவுக்கு பலி

துபாயில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதனால் ராஜகுமார் வேலையில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ராஜகுமார் மகளிடம் பேசினார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து ராஜகுமார் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு அவர் இறந்து விட்டதாகவும், கொரோனா தொற்றே காரணம் என்றும் அங்கிருந்து தகவல் தெரிவித்து உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் இறந்ததால், உடலை சொந்த ஊருக்கு அனுப்ப முடியாத நிலையில் உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை அறிந்ததும், ராஜகுமாரின் தாயார் ஞானம்மா மற்றும் மகன், மகள் கதறி அழுதனர். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

சென்னையில் இருந்து குமரி வந்த மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனாபாதிப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்வு
சென்னையில் இருந்து குமரி வந்த மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டத்தில் முதலில் 16 பேர் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்கு பிறகு பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அதன்பிறகு நோய் பாதிப்பு ஏற்பட்ட 7 பேர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுபோக ஒருவர் கடலூரிலும், ஒருவர் சென்னையிலும் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் 5 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டத்தில் கொரோனா வைரசால் முதலில் பலியாகிய மயிலாடியை சேர்ந்த 65 வயது முதியவரின் மகளுக்கும், சென்னையில் இருந்து ஆளூர் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. அவர்கள் 5 பேரும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் ஒரு பெண்

இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. 35 வயதான அந்த பெண் குழித்துறையை சேர்ந்தவர். சென்னையில் இருந்து கடந்த 12-ந் தேதி கணவருடன் குமரி மாவட்டத்திற்கு வந்தார். அவர்கள் ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் பரிசோதனை செய்யப்பட்டு கன்னியாகுமரியில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு சளி மற்றும் ரத்தம் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. அப்போது அந்தப் பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவருடைய கணவருக்கு நோய் பாதிப்பு இல்லை.

32 ஆக உயர்வு

எனினும் அவரை 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதோடு அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது தொற்று ஏற்பட்ட அந்த பெண்ணையும் சேர்த்து குமரி மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது 13 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தனிமைப்படுத்தும் இடங்கள்

வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை ஆரல்வாய்மொழி மற்றும் களியக்காவிளை ஆகிய சோதனை சாவடிகளில் தடுத்து நிறுத்தி 7 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் 6 தனிமைப்படுத்தும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதாவது களியக்காவிளை சோதனை சாவடி வழியாக வருபவர்கள் களியக்காவிளையில் உள்ள ஒரு லாட்ஜிலும், கொல்லங்கோட்டில் உள்ள ஒரு மண்டபத்திலும் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இதே போல ஆரல்வாய்மொழி சோதனை சாவடி வழியாக வருபவர்கள் கன்னியாகுமரியில் உள்ள லாட்ஜிலும், நாவல்காடு, குமாரபுரம் ரோடு மற்றும் முப்பந்தல் ஆகிய இடங்களில் உள்ள தனியார் கல்லூரிகளில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

இந்த நடவடிக்கையின் மூலமாக வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு நோய் பாதிப்பு இருந்தால் அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் செல்வது முன்கூட்டியே தடுக்கப்படுகிறது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றம் செய்யப்படுவது தவிர்க்கப்பட்டு உள்ளது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

கரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும்செவிலியர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா
கரூர் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் உள்பட மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனை செவிலியர்

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 42 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து வந்த 2 பேருக்கும், மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த பள்ளபட்டியை சேர்ந்த 8 பேருக்கும், கரூர் உழைப்பாளி நகரை சேர்ந்த கர்ப்பிணிக்கும், குஜராத்தில் இருந்து வந்த தேவர் மலையை சேர்ந்த ஒருவருக்கும் என மொத்தம் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த குளித்தலையை சேர்ந்த 55 வயது தொழிலாளி ஒருவருக்கும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் பணிபுரியும் தாந்தோணிமலை என்.ஜி.ஓ. நகர் பகுதியை சேர்ந்த 38 வயது செவிலியர் ஒருவருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தடை செய்யப்பட்ட பகுதி

செவிலியருக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், அவருடன் பணிபுரிந்த டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அவர் வசித்த குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர்கள் என மொத்தம் 70 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் செவிலியர் வசித்த என்.ஜி.ஓ. நகர் பகுதிக்கு செல்லும் சுற்றியுள்ள சாலைகளில் தடுப்பு கட்டைகள் அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கரூர் அரசு மருத்துவமனையில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் குணம் அடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது கரூர் மாவட்டத்தை சேர்ந்த 13 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை, சென்னையில் இருந்து வந்தவர்கள்: மதுரையில் ஆம்புலன்ஸ் டிரைவர் உள்பட 9 பேருக்கு கொரோனா - குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89-ஆக உயர்வு
மதுரையில் கொரோனாவால் பாதிப்பு எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 124-ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் 3 பேர் மதுரை நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மற்ற 6 பேர் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

இவர்களில் ஒருவர் மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்த 47 வயது நபர். சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். அவர் சமீபத்தில் வீடு திரும்பிய நிலையில் தற்போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொருவர் மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த 37 வயது வாலிபர். இவர் சென்னையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து மதுரைக்கு வந்த இவருக்கு தலைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தன. இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் மற்ற 7 பேர் மும்பையில் தங்கி வேலை பார்த்தவர்கள். இவர்கள் மதுரை ஆரப்பாளையம், மேலூர், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி ஆகிய பகுதிகள் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து மதுரை வந்துள்ளனர். அவர்களுக்கு முதற்கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என வந்தது. இருப்பினும் அவர்கள் முகாம்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் தற்போது அவர்களுக்கு 2-ம் கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து இவர்கள் அனைவரும் தற்போது கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது போல் இவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து இவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் உள்ள தெருக்கள் சீல் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கியிருந்த குடியிருப்பை சுற்றி கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 133-ஆக உயர்ந்தது.

கொரோனா சிகிச்சை முடிந்து ஏற்கனவே 85 பேர் தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மதுரை செல்லூர், ஜெய்ஹிந்த்புரம், எஸ்.எஸ்.காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் நேற்று வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89-ஆக உயர்ந்தது.

தேனி மாவட்டத்தில் மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவருடன் தாயம் விளையாடியதால் தொற்று பரவியது
தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 71 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுவரை 42 பேர் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 28 பேர் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நேற்று மேலும் ஒரு பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் சின்னமனூர் அருகே உள்ள ஓடைப்பட்டியை சேர்ந்தவர். அவருக்கு வயது 47 ஆகும். அவர் வசிக்கும் தெருவில் ஏற்கனவே 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் மூலம் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது 29 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களில் ஓடைப்பட்டியை சேர்ந்தவர்கள் 13 பேர். இந்த ஊரைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவர் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறியாமல் அவர் சொந்த ஊருக்கு வந்துள்ளார். அங்கு அவர் தனது தெருவை சேர்ந்த சிலருடன் தாயம் விளையாடி பொழுதுபோக்கி உள்ளார். இதன் மூலம் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் தெரு முழுவதும் சீல் வைக்கப்பட்டு உள்ளது. ஓடைப்பட்டிக்கு வெளியூர் நபர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஊரை விட்டு வெளியே செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.

நெல்லை-தூத்துக்குடியில் புதிதாக 18 பேருக்கு கொரோனா: தென்காசியில் சிறுவனுக்கு தொற்று உறுதி
நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி வரை 63 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க போடப்பட்டிருந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. மேலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள். அதனால் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 98 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

அவ்வாறு நெல்லை மாவட்டத்துக்கு வருகிறவர்கள் பெரும்பாலும் தேசிய நாற்கர சாலையில் அமைந்துள்ள கங்கைகொண்டான் சோதனைச்சாவடியை கடந்துதான் நெல்லை மாவட்டத்துக்குள் நுழைய முடியும். அந்த சோதனைச்சாவடியில் போலீசார், மருத்துவக்குழுவினர், வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு அந்த வழியாக வருகிறவர்கள் விவரங்களை சேகரித்து, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வருகிறார்கள்.

இவ்வாறு பரிசோதனை செய்தவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடும்பம், குடும்பமாக வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ராதாபுரம், பணகுடி பகுதிகளுக்கு சென்றிருந்தவர்களில் 11 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதியானது. இதேபோல் கத்தார் நாட்டில் இருந்து வந்த 2 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் சேர்க்கப்பட்டனர்.

இதுதவிர நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த 2 பேர் உள்பட 3 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களும் நேற்று ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 98 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 16 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது. இதில் 62 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். மீதி 51 பேர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இருந்து கடையநல்லூர் தாலுகா பொய்கை கிராமத்துக்கு வந்த கர்ப்பிணி பெண்ணின் மகனுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சிறுவன் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான்.

அவனுடன் சேர்த்து தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதி 20 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 36 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 26 பேர் குணமடைந்து உள்ளனர். ஒருவர் இறந்து உள்ளார்.

இந்த நிலையில் மும்பையில் இருந்து கயத்தாறு பகுதிக்கு வந்த 2 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்து உள்ளது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 10 பேரும், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராஜபாளையம் பட்டாலியனில் புதிதாக பணியில் சேர்ந்த போலீஸ்காரருக்கு கொரோனா - விருதுநகர் மாவட்டத்தில் பாதிப்பு 45-ஆக உயர்வு
தமிழகம் முழுவதும் சமீபத்தில் போலீஸ் வேலைக்கு தேர்வான 8,500-க்கும் மேற்பட்டோரை குறுகிய கால பயிற்சிக்கு பின் பணியமர்த்த தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்பேரில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பட்டாலியனில் உள்ள பயிற்சி மையத்தில் 440 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடந்த 2-ந்தேதிதான் பணியில் சேர்ந்தனர். அவர்கள் அங்கேயே தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு பயிற்சியில் இருந்த 24 வயது போலீஸ்காரர் ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இவர் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் விருதுநகர் அருகே உள்ள சந்திரகிரி கிராமமாகும்.

இவருக்கு பயிற்சிக்கு வருவதற்கு முன்பே கொரோனா தொற்று ஏற்பட்டதா அல்லது பயிற்சிக்கு சேர்ந்த பின்பு பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து சுகாதார துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்த பாதிப்பு மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது. பிற பகுதிகளில் உள்ள போலீஸ் பயிற்சி மையங்களில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட பின்பு பயிற்சி மையங்களில் பயிற்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் ராஜபாளையத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படவில்லை. மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad