ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா - தமிழகத்தில் பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது; மே மாதத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்கள்: மீண்டு வரும் 10 மாவட்டங்கள்

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 


ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா  - தமிழகத்தில் பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டியது
தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்தே, சென்னையில் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது.

சென்னை நகரில் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், போதிய பலன் கிடைப்பது இல்லை. அதிகமான மக்கள் தொகை, குறுகலான தெருக்கள், சமூக விலகலை சரியாக கடைபிடிக்காதது போன்றவையே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப் படுகிறது. இதனால் நகரில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சென்னையில்தான் உள்ளனர்.
சென்னையில் கடந்த 10 நாட்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. நகரில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா தொற்று நேற்று புதிய உச்சத்தை தொட்டது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 509 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். சென்னையில் கடந்த 8-ந் தேதி 399 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதுதான் இதுவரை அதிக எண்ணிக்கையாக இருந்தது. ஆனால் நேற்று அதையும் விட அதிகமாக 509 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களையும் சேர்த்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,839 ஆக அதிகரித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாதிப்பு 7,204 ஆக உயர்வு
தமிழகத்தில் 10-ந் தேதி (நேற்று) ஒரே நாளில் 669 பேர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 412 பேர் ஆண்கள்; 257 பேர் பெண்கள். இவர்களையும் சேர்த்து, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,204 ஆக உயர்ந்து இருக்கிறது. தமிழகத்தில் இதுவரை 4,907 ஆண்களுக் கும், 2,295 பெண்களுக்கும் மற்றும் இரண்டு 3-ம் பாலினத் தவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுவரை 1,959 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருக்கிறார்கள். நேற்று மட்டும் 135 பேர் வீடு திரும்பி இருக்கிறார்கள். மருத்துவமனைகளில் தற்போது 5,195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

3 பேர் உயிர் இழந்தனர்
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 3 பேர் நேற்று உயிர் இழந்தனர். இதில் செங்கல்பட்டை சேர்ந்த 74 வயது ஆண் கடந்த 8-ந்தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது நேற்று தெரியவந்தது.

இதேபோல் திருவள்ளூரைச் சேர்ந்த 55 வயது ஆண் சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோயால் கடந்த 4-ந்தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்றுமுன்தினம் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் சென்னையைச் சேர்ந்த 59 வயது ஆண், நீரிழிவு நோய் மற்றும் இருதய நோயால் கடந்த 7-ந் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

சாவு 47 ஆக அதிகரிப்பு

இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்து இருக்கிறது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 28 பேரும், செங்கல்பட்டில் 4 பேரும், விழுப்புரம், திருவள்ளூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் தலா 2 பேரும், கோவை, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சீபுரம், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இதுவரை கொரோனா நோய் தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

1 வயது பெண் குழந்தை

தமிழகத்தில் நேற்று 19 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் சென்னையில் 1 வயது பெண் குழந்தையும் சேர்த்து 26 குழந்தைகள் உள்பட 509 பேரும், திருவள்ளூரில் 47 பேரும், செங்கல்பட்டில் 4 வயது ஆண் குழந்தையையும் சேர்த்து 6 குழந்தைகள் உள்பட 43 பேரும், நெல்லை மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தலா 10 பேரும், பெரம்பலூரில் 9 பேரும், காஞ்சீபுரத்தில் 8 பேரும், விழுப்புரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தலா 6 பேரும், மதுரை மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 4 பேரும், தேனி மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், விருதுநகரில் 2 பேரும், கடலூர், கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 12 வயதுக்கு உட்பட்ட 34 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 51 முதியோரும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

பரிசோதனை

தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 37 பேருக்கு தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 157 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்து இருக்கிறது. 676 மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை. மேலும் 10 ஆயிரத்து 669 மாதிரிகள் 2-வது முறையாக பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் 10 போலீசாருக்கு தொற்று

சென்னை போலீஸ் துறையும் கொரோனா பாதிப்பால் கலங்கி போய் உள்ளது. ஒரு துணை கமிஷனர், 2 உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என சென்னை போலீசில் ஏற்கனவே 71 பேரை கொரோனா தாக்கி உள்ளது.

இந்த நிலையில், எழும்பூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், மாதவரம் சப்-இன்ஸ்பெக்டர், புதுப்பேட்டை ஆயுதப்படை பெண் காவலர் உள்பட 6 காவலர்கள் மற்றும் கமிஷனர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர், உளவுப்பிரிவு காவலர் என நேற்று மேலும் 10 பேர் கொரோனாவினால் பாதிப்புக்குள்ளானார்கள். நேற்றைய நிலவரப்படி சென்னை போலீசில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81 ஆக உயர்ந்தது.

மே மாதத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்கள்: மீண்டு வரும் 10 மாவட்டங்கள்
தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் திடீரென அதிகரித்த தொற்று பரவல் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் (மே 3 – 9) தொற்று பரவல் அதிகரித்த மாநிலங்களில் முதலிடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது.
மே மாதத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 8 மாவட்டங்கள்... மீண்டு வரும்
கோயம்பேடு பரவலால் தமிழகத்தில் மே மாதத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், 10 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கோயம்பேடு சந்தை மூலமாக கொரோனா தொற்று பரவல் துவங்கியதைடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 669 பேருக்கு தொற்று ஏற்பட, தமிழகத்தில் தொற்று பரவல் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் முதல் தொற்று உறுதி செய்யப்பட்ட மார்ச் 8ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரையிலான 54 நாட்களில் 2,323 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.

ஏப்ரல் இறுதியில் கோயம்பேடு சந்தை மூலம் கோரொனா தொற்று பரவல் ஏற்பட தமிழகத்தில் பாதிப்பு திடீரென அதிகரித்தது. மே 1ம் தேதி ஒரே நாளில் 200க்கும் அதிகமானோருக்கு பாதிப்பு ஏற்பட, அடுத்தடுத்த நாட்களில் கொரோனா தொற்று பரவல் புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த 10 நாட்களில் மட்டும் தமிழகத்தில் 4,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த பாதிப்பில் 10 நாட்களின் பாதிப்பு 67.75 சதவிகிதம் ஆகும்.

சென்னையில் மட்டும் கடந்த 10 நாட்களில் 2,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையின் மொத்த பாதிப்பில் 10 நாட்களின் பாதிப்பு 76.40 சதவிகிதம் ஆகும்.சென்னையைத் தவிர்த்து, கடலூர், திருவள்ளூர், விழுப்புரம், அரியலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர் மாவட்டங்களிலும் கடந்த 10 நாட்களில் கோயம்பேடு தொற்று பரவல் காரணமாக பாதிப்பு அதிகரித்தது.

அரியலூர் ஏப்ரல் 30 வரை 7 பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த 10 நாட்களில் மட்டும் 268 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் இது 97.45 சதவிகித பாதிப்பு இந்த 10 நாட்களில் மட்டும் ஏற்பட்டுள்ளது.

கடலூரில் ஏப்ரல் 30ம் தேதி வரை 27 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில், இந்த 10 நாட்களில் மட்டும் 368 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் 93.16 சதவிகிதம் ஆகும்.

பெரம்பலூரில் ஏப்ரல் 30 வரை, 9 பேருக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பு, இந்த 10 நாட்களில் 95 பேருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்த பாதிப்பில் இது 91.34 சதவிகிதம் ஆகும்.

கடந்த 10 நாட்களில் விழுப்புரத்தில் 249 பேருக்கும், திருவள்ளூரில் 282 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் மொத்த பாதிப்பில் இந்த 10 நாட்கள் பாதிப்பு என்பது 80 சதவிகிதத்துக்கும் அதிகம்.

செங்கல்பட்டில் 189 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 96 பேருக்கும் இந்த 10 நாட்களில் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களின் மொத்த பாதிப்பில் இது 70 சதவிகிதத்துக்கும் அதிகம் ஆகும்.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் திடீரென அதிகரித்த தொற்று பரவல் காரணமாக, கடந்த ஒரு வாரத்தில் (மே 3 – 9) தொற்று பரவல் அதிகரித்த மாநிலங்களில் முதலிடத்தை தமிழகம் பிடித்திருக்கிறது. தமிழகத்தின் ஒரு நாளின் தொற்று பரவல் விகிதம் என்பது 17 சதவிகிதமாக உள்ளது. நாட்டிலேயே அதிக தொற்று பாதிப்பு உள்ள மகாராஷ்டிராவில் 8 சதவிகிதமாகவும், குஜராத், டெல்லியில் 6 சதவிகிதமாகவும் உள்ளது. இந்த மூன்று மாநிலங்களை விட ஒரு மடங்குக்கும் அதிகமான வேகத்தில் தமிழகத்தில் தொற்று பரவல் ஏற்பட்டு வருகிறது.

அதேவேளையில், மே மாதம் தொடங்கியதில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் தொற்று பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தூத்துக்குடி, நாகை, ஈரோடு, சிவகங்கை, திருச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 நாட்கள் தொற்று எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்காமல் உள்ளது ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad