ரசாயன ஆலை வாயுக்கசிவு: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய விசாகப்பட்டினம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி; அமெரிக்காவில் ஊரடங்கால் இரண்டு கோடியே 5 லட்சம் பேர் வேலையிழப்பு
தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்!
வாயுக் கசிவு தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
விசாகப்பட்டினம் வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ரசாயன ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தை உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு மீண்டும் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதால், மேலும் 3 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர். பாதிக்கப்பட்டவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
வாயுக் கசிவு சுற்றுவட்டார கிராமங்களுக்கும் பரவியதால், சாலையில் நடந்து சென்றவர்கள், வீடுகளில் இருந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதில் ஏராளமான சிறுவர்களும், முதியவர்களும் மயக்கமடைந்ததால், பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து, 5 கிலோ மீட்டருக்கு சுற்றளவில் உள்ள பொதுமக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பான இடங்களில் இருப்பவர்களும், ஈரமான துணியை முகக்கவசமாக பயன்படுத்துமாறும், ஏசிகளை இயக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று மருத்துவமனையில் சதித்து ஆறுதல் கூறினார்.
மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெறுமளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்ச ரூபாயும், இரண்டு முதல் மூன்று நாள்கள் வரை சிகிச்சைப் பெறகூடிய அளவுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும், ஆரம்பகட்ட சிகிச்சைப் பெறக் கூடிய தேவை ஏற்பட்டவர்களுக்கு 10,000 ரூபாயும் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
15,000 பேர் வரை முதல்கட்ட சிகிச்சைப் பெறுமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஊரடங்கால் இரண்டு கோடியே 5 லட்சம் பேர் வேலையிழப்பு
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பதால் ஏப்ரல் மாதத்தில் 2 கோடியே 5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாகத் தொழிலாளர் புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது.
1939 ஆம் ஆண்டில் இருந்து வேலைவாய்ப்புத் தகவல்களைக் கணக்கிட்டு வரும் அந்த அமைப்பு, இப்போது ஏற்பட்டுள்ளது திடீர் மற்றும் மிகப்பெரிய வீழ்ச்சி எனத் தெரிவித்துள்ளது.
2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியின்போது 87 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டதாகவும், அதைவிட இருமடங்குக்கு மேல் இப்போது வேலையிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளில் இரண்டு கோடியே 28 லட்சம் வேலைவாய்ப்பு உருவான நிலையில், அந்த முன்னேற்றத்தைக் கொரோனாவால் வந்த ஊரடங்கு துடைத்தெறிந்துவிட்டது.
இதனால் அமெரிக்காவில் ஏப்ரல் மாதத்தில் வேலையின்மை விகிதம் 14.7 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் தொழிலாளர் புள்ளிவிவர அமைப்பு தெரிவித்துள்ளது.