Matrimony OTT-Platforms Jobs Coupons Business

மதுரை அருகே பிரசவமான பெண்ணுக்கு கொரோனா: ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது; நீலகிரியில் மர்ம காய்ச்சல்: 53 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை

தமிழ் யங்ஸ்டர்ஸ் வருகைக்கு நன்றி! உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்! 
மதுரை அருகே பிரசவமான பெண்ணுக்கு கொரோனா; ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது
மதுரை அருகே சமயநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. அதன்பின்னர் நடந்த பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா இருப்பது தெரியவந்ததால், பிரசவம் பார்த்த டாக்டர்-செவிலியர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மதுரை மாவட்டத்தில் நேற்று சிலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் விளாங்குடியை சேர்ந்த 32 வயது பெண்ணும் ஒருவர். இவருடைய கணவர் ஈரோட்டை சேர்ந்தவர். இவர்களுக்கு ஏற்கனவே 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் தற்போது 3-வது முறையாக அந்த பெண் கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

தற்போது கொரோனா வைரஸ் பரவி வருவதை தொடர்ந்து மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கரிசல்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளதால் அருகில் இருந்த சமயநல்லூர் சத்தியமூர்த்தி நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு அந்த பெண் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. அதன்பின் அந்த பெண்ணின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

உடனே அந்த பெண் மற்றும் குழந்தையை மதுரை அரசு மருத்துவமனை தனி வார்டுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண்ணுடன் வந்தவர்களையும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கும், பிறந்த குழந்தைக்கும் ரத்த பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர், செவிலியர், பணியாளர்களின் ரத்த மாதிரியும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதை தொடர்ந்து சுகாதார துறையால் அந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது.

மேலும் சுகாதார நிலையத்தை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அந்த பணியினை செயல் அலுவலர் சுந்தரி, குடிநீர் மேற்பார்வையாளர் சுந்தரராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும் அந்த பெண்ணுக்கு கொரோனா வந்தது எப்படி? என்பது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் கணவர் கடந்த பிப்ரவரி மாதம் வெளிநாடு சென்று திரும்பியவர் என தெரியவந்தது. எனவே அதன் மூலம் கொரோனா பரவியதா? என்பது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

நீலகிரி கூடலூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி: 53 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு
கூடலூரில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலியானதை தொடர்ந்து, 53 ஆயிரம் பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்து உள்ளதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் எஸ்.எஸ். நகரை சேர்ந்தவர் பானுமதி(வயது 35). இவர் கடந்த 28-ந் தேதி மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அப்பகுதியில் அவரை போல பலரும் காய்ச்சலால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று ஆய்வு நடத்தினர். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 48 பேரிடம் இருந்து பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. 18 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, குன்னூரில் உள்ள கொரோனா பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வு

இந்த நிலையில் நேற்று அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் அப்பகுதியில் நீலகிரி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி ஆய்வு நடத்தினார். வீடு, வீடாக சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல் போன்ற தொந்தரவு உள்ளதா? என்று விசாரித்தார். மேலும் குடிநீர் திட்ட பகுதிகளுக்கு சென்று குடிநீரின் தரத்தை பரிசோதித்தார். முன்னதாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

மருத்துவ பரிசோதனை

எஸ்.எஸ். நகரில் உயிரிழந்த பெண்ணுக்கு, சிறுநீரக தொற்று இருந்தது. அவர் மாரடைப்பால் இறந்துள்ளார். டெங்கு பாதிப்பு இல்லை.

இங்குள்ள பொதுமக்களிடம் எடுக்கப்பட்ட ரத்தம், சளி மாதிரி பரிசோதனை அறிக்கை 2 நாட்களில் கிடைத்துவிடும். அதன்பின்னரே எந்த வகையான காய்ச்சல் என்பது தெரியவரும். கூடலூர் நகராட்சியில் உள்ள 53 ஆயிரம் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு 20 பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. அந்த குழுவினர் வீடு, வீடாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாவட்ட தொற்றுநோய் தடுப்பு அலுவலர் ஸ்ரீதர், வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

மீண்டும் சிவப்பு நிற மண்டலத்துக்கு மாறியது ராணிப்பேட்டை மாவட்டம் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று எதிரொலி
வெளிமாநிலத்தில் இருந்து வந்தருக்கு கொரோனா தொற்று இருப்பதால், ஆரஞ்சு நிற மண்டலத்தில் இருந்து மீண்டும் சிறப்பு நிற மண்டலத்துக்கு ராணிப்பேட்டை மாவட்டம் மாறியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 16 நாட்களாக புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இதனால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு நிற மண்டலத்துக்கு மாறியது. இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வந்த 58 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஆரஞ்சு நிற மண்டலத்தில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் மீண்டும் சிவப்பு நிற மண்டலத்துக்கு மாறியுள்ளது.

அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து வந்ததன் மூலம் தொற்று ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தவித தளர்வுகளும் இல்லை. தற்போதுள்ள நிலையே தொடரும்.

வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு யாரேனும் வந்திருந்தால் உடனடியாக மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிவிக்காத பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளை தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டும்.

முகக் கவசம் அணிந்து

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டுப்பாட்டுப் பகுதிகளாக உள்ள ஒருசில இடங்களில் 28 நாட்கள் கால அவகாசம் முடியும் தருவாயில் உள்ளது. அந்தப் பகுதிகளில் மட்டும் அத்தியாவசியத் தேவைகள், பொருட்கள் கிடைக்க ஒருசில தளர்வுகள் ஏற்படுத்தப்படும். பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து சமூக விலகலையும் பின்பற்ற வேண்டும்.

மாவட்டத்தில் 1,874 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,388 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை, 446 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

போலீஸ் சூப்பிரண்டு

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மாவட்டத்தில் மதியம் ஒரு மணிக்குமேல் எந்தக் காரணமுமின்றி சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றித்திரிந்தவர்கள் என 3 ஆயிரத்து 700-க்குமேல் வழக்குப் பதிவு செய்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் போலீசாருடன் இணைந்து பணியாற்ற முன்னாள் ராணுவத்தினர், ஓய்வுபெற்ற துணை ராணுவத்தினர் இணைந்து பணியாற்ற அழைப்பு விடுக்கிறோம். விருப்பம் உள்ளவர்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம். இதுவரை 36 பேர் போலீசாருடன் இணைந்து பணியாற்ற வந்துள்ளனர்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad